இளைஞர்மணி

வா‌ட்‌ஸ் ​அ‌ப்: புதிய முடிவுகள்...  கைவிலங்குகள்?

26th Jan 2021 06:00 AM | - அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

 

"உங்கள் தகவல்கள் பாதுகாப்பானவை; யாருக்கும் பகிரப்படாது' என்று கூறி 2009-இல் வாட்ஸ்அப் தொடங்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே லட்சக்கணக்கில் பயன்பாட்டாளர்கள் பெற்றவுடன் ஆண்டு கட்டணம் என்ற விதிமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு பயன்பாட்டாளர்களிடேயே ஆதரவு இல்லையென்றாலும், புதிதாக ஏராளமானோர் சேர்ந்தனர். இதைக் கண்ட சமூக வலைதளத்தின் உலகின் முன்னணி நிறுவனமான ஃபேஸ்புக் (முகநூல்), வாட்ஸ்அப்பை 19 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. ஆனால், பயன்பாட்டாளர் கட்டணத்தை அறிவிக்கவில்லை. மாறாக தனிநபர்களின் தகவல்களைத்தான் பொக்கிஷமாகக் கருதியது முகநூல் நிறுவனம்.

நண்பர்கள், குடும்பத்தினருடன் உரையாடுவதற்கு வாட்ஸ்அப்பை பதிவிறக்கம் செய்து, செல்லிடப்பேசி எண்ணை அளித்தவுடன், உங்கள் செல்லிடப்பேசியில் உள்ள நண்பர்கள் தொலைபேசி எண்கள், கேமரா, மைக், ஸ்பீக்கர், ஃபைல் மேனேஜர் ஆகிய அனைத்தையும் பயன்படுத்த ஒப்புதல் அளித்த பின்புதான் பயன்பாட்டுக்கே வாட்ஸ்அப்அனுமதிக்கும்.

வாட்ஸ்அப்பில் பகிரப்படும் தகவல்கள்: செல்லிடப்பேசி எண், சேமிப்பில் உள்ள மற்றவர் தொலைபேசி எண்கள், கேமரா, மைக், ஸ்பீக்கர், ஃபைல் மேனேஜர் போன்ற தகவல்கள். பயன்படுத்தும் செல்லிடப்பேசியின் உருவாக்க எண், தயாரிப்பு நிறுவனம், மாடல், இண்டர்நெட் புரோடோகால் (ஐபி) முகவரி, பயன்பாட்டாளர் இணையதள தொடர்பைப் பெறும் இடத்தின் விவரம். பயன்படுத்துபவரின் நிதி, பரிவர்த்தனை விவரங்கள் வாட்ஸ்அப் நிறுவனத்தால் பிற நிறுவனங்களுக்குப்பகிரப்படுகின்றன.

ADVERTISEMENT

புதிய கொள்கை மாற்றம்: 2017-இல் இந்தத் தகவல்களை முகநூல் நிறுவனத்துடன் பகிர்வதற்கு பயன்பாட்டாளர்களிடம் வாட்ஸ்அப் ஒப்புதல் கேட்டு செயல்பட்டு வந்தது. ஆனால், 2021-ஜனவரி 6-ஆம் தேதி தனிநபர் கொள்கை விதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடியாகத் திருத்தி அறிவித்தது.
உங்கள் தகவல்கள் முகநூல், மூன்றாம் தரப்பினர் செயலி நிறுவனங்களுடன் பகிரப்படும். இதற்கு பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே சேவையைத் தொடரலாம்; இல்லையென்றால் துண்டிக்கப்படும் என்று பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இந்தியப் பயன்பாட்டாளர்கள் பெரும்பாலானோர் வழக்கமான அனுமதியைத்தானே கேட்கிறார்கள் என ஒப்புதல் அளித்துவிட்டனர். சிலர் குழப்பத்துடன் ஒப்புதல் அளிக்காமல் சேவையைத் தொடர்கின்றனர். புதிய கொள்கை விதிமுறைகளை அறிவித்தவுடன் இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி பதிவிறக்கம் ஜனவரி6 -10 வரை 10 லட்சத்துக்கும் அதிகமாக (35%) குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் டெலிகிராமில் 10 லட்சம் அதிகரித்துள்ளது. சிக்னல் செயலி 20 லட்சத்துக்கும் அதிகமான பதிவிறக்கம் கண்டுள்ளது. அப்படி என்னதான் வாட்ஸ்அப்-இன் புதிய விதிகள் சொல்கின்றன என்று பார்க்கலாம்.

எதற்காக இது?: முகநூல் நிறுவனத்தின் வாட்ஸ்அப், கூகுளின் ஜிமெயில், கூகுள் தேடல் ஆகியவை விளம்பரங்களே இல்லாமல் செயல்படுகின்றன. ஆனால், அவற்றுக்கு தனிமனிதர்களின் தகவல்கள்தாம் வருவாய்க்கான உத்திகளாகும். ஒரு நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் குறிப்பிட்ட வயதுடையவர்களின் தகவல் தொடர்பு விவரங்கள் இந்த நிறுவனங்களிடம் கிடைக்கும். இவற்றைத் தேர்தலின்போது அரசியல்கட்சிகளும், பல்வேறு நிதி நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும் பணம் செலுத்தி பெற்று தங்களது வியாபாரத்துக்காக பயன்படுத்துகின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக, நீங்கள் வேறு ஊருக்குப் பயணம் செய்வதாக இ-மெயிலோ, வாட்ஸ்அப் தகவலோ, மற்றொருவருக்கு அனுப்பினால் போதும். அடுத்த நொடியே ரயில், விமானம், கார் பயணத்துக்கான விளம்பரம், தங்குவதற்கு ஹோட்டல் விளம்பரங்கள் இணையவழியில் உங்களிடம் வந்து குவிந்துவிடும். இவைபோன்ற தகவல் பரிமாற்றத்தை முகநூல், மூன்றாம் தரப்பினரின் செயலிகளுக்கு செய்வதற்குதான் தற்போது வாட்ஸ்அப் புதிய கொள்கை விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.

என்னென்ன மாற்றம்?: அதன்படி,உங்கள் வாட்ஸ்அப் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப விளம்பரங்கள் பகிரப்படும். நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பதைக் காட்டும் "லோக்கேஷன் ஷேரிங்', "வாய்ஸ் மெசேஜ்' ஆகியவை சர்வரில் சேகரிக்கப்படும்.

நீங்கள் அனுப்பும் தகவல் பிறருக்குச் சென்றடையவில்லை என்றாலும் 30 நாள்களுக்கு சேகரித்து வைக்கப்படும்.

என்ன செல்லிடப்பேசி பயன்படுத்துகிறீர்கள் உள்பட மொபைல் ஐபி அட்ரஸ், மொழி மற்றும் வாட்ஸ்அப் பேமெண்ட்டை பயன்படுத்தி பிறருக்குப் பணம் அனுப்பினால், அது யாருக்குச் சென்றடைகிறது என்பன போன்ற தகவல்கள் சேகரிக்கப்படும் என்று புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வாட்ஸ்அப்பில் எத்தனை பேர் முகப்பு படம் (டிபி) மாற்றுகிறார்கள்? அதிகமாக என்ன தகவல்களைப் பகிர்கிறார்கள்? விடியோ தொலைபேசி அழைப்பில் எவ்வளவு நேரம் பேசுகிறார்கள் என்பன போன்ற புள்ளி விவரங்களை அந்த நிறுவனம் பயன்பாட்டாளர்களின் அனுமதியில்லாமல் கண்காணித்து, துல்லியமான புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது.

வாட்ஸ்அப் சாட்டில் "எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்' என்ற ஒருமுனையில் இருந்து மறுமுனை தகவல் குறியாக்கப் பாதுகாப்பாக இருக்கும் என்று விதிமுறை இருக்கிறது. ஆனால் புதிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்துவிட்டால், உரையாடல் ரகசியத்தை விட, அதில் உள்ள முக்கிய விளம்பர தகவல்கள் மட்டும் எடுக்கப்பட்டு முகநூல், இன்ஸ்டாகிராம் உள்பட பிற செயலிகளுக்குப் பகிரப்படும்.

இதன் மூலம் தனிமனிதனின் தகவல் திருட்டு சட்டப்படியாக நடைபெறும் என சட்ட வல்லுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம் தனி மனிதனின் அந்தரங்க சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பாலும், பயன்பட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததாலும், புதிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதை வாட்ஸ்அப் மே-15 வரை ஒத்தி வைத்துள்ளது. ஆனாலும் கைவிட வில்லை.

இந்த புதிய கொள்கைகள் வாட்ஸ்அப் வர்த்தகம் (பிசினஸ்) மட்டும்தான் பொருந்தும் என்றும் உங்கள் தகவல் பாதுகாப்பாக இருக்கும் என்றும் இது குறித்து மக்களிடத்தில் உள்ள அச்சத்தைப்போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களின் தகவல்களை தனது வர்த்தக செயலி மூலம் பகிர்ந்து, தனது "பேமண்ட்ஸ்' செயலி மூலம் நிதி பரிவர்த்தனையை உலகம் முழுவதும் அதிகரிக்க வேண்டும் என்பதே முகநூல் நிறுவனத்தின் அடுத்தகட்ட திட்டமாக உள்ளது. அதற்கு முன்னோட்டம்தான் இந்த புதிய கொள்கைகள் மாற்றம்.

தீர்வு என்ன?: உலகம் முழுவதும் 180 நாடுகளில் 200 கோடி வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இதில், இந்தியாவில் மட்டும் 40 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். ஆனால், இந்த புதிய கொள்கை விதிமுறை, ஐரோப்பிய நாடுகளுக்குப் பொருந்தாது. இதற்கு அந்த நாடுகளில் விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான தனிமனித தகவல் பாதுகாப்புச் சட்டங்களே காரணம்.

அனுமதியில்லாமல் தகவல் பரிமாற்றம் செய்ததற்காக 2012-இல் முகநூல் நிறுவனத்துக்கு ஐரோப்பா 122 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தது.

தங்கள் நாட்டு மக்களின் தகவல்களை அனுமதியின்றிப் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் பிரான்ஸூம் எச்சரித்தது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் முகநூல் நிறுவனம் மீது ஏராளமான நம்பிக்கை துரோக வழக்குகள் உள்ளன. தனிமனிதரின் தகவல்கள் குறித்து முழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், உலகிலேயே அதிக பயன்பாட்டாளர்கள் கொண்ட இந்தியாவில், சமூக வலைதள நிறுவனங்கள் தகவல் திருட்டில் ஈடுபடுவதில் இருந்து தடுக்க கடுமையான சட்டம் இல்லை. இதுவே, இந்தியர்களின் தகவல்கள் உலக அளவில் தாராளமாகப் பகிரப்படுவதற்கு காரணம்.

என்ன செய்வது? புதிய கொள்கை விதிமுறைகளை ஏற்கலாமா, வேண்டாமா என பயன்பாட்டாளர்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. வாட்ஸ் அப்பில் நமது செல்லிடப்பேசி எண்களைப் பகிர அனுமதி அளித்து உள்ளே நுழைந்த அன்றே நமது தகவல்கள் நம்முடையது இல்லை என்றாகிவிட்டது.

மேலும், முகநூல், இன்ஸ்டாகிராம், ஜி மெயில், சுட்டுரை, லிங்டுஇன் என பல்வேறு சமூக வலைதளங்களுக்கு செயலிகளுக்கு எப்போது நாம் தகவல்களைப் பகிர ஆரம்பித்தோமா அப்போது நமது தகவல்கள் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் சேமிக்கப்பட்டு விடுகின்றன. அதை இணையத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதுதான் கடினமே தவிர, பகிரப்படுவது எளிது.

ஆகையால், சமூக வலைதளத்தில் நாம் பிறருக்கு அனுப்பும் முக்கிய தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து அதற்குப் பிறகே அனுப்ப வேண்டும்.

வங்கி கணக்கு விவரம், ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கிகளின் ரகசிய குறியீடு இவற்றையெல்லாம் இணைய இணைப்பு இருந்தாலே உங்களுக்குத் தெரியாமலேயே செல்லிடப்பேசி சேமிப்பு தகவல்களில் இருந்து எடுத்துவிடலாம்.

இப்படி இருக்க வாட்ஸ்அப்பைப் புறக்கணித்து விட்டு டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு பலர் மாறுவது காலத்தின் தேவை என்றுதான் கூற வேண்டும்.

அங்கே உங்கள் தகவல்கள் உரிமைகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுவது எல்லாம் வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கும் என்று தோன்றுகிறது.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT