இளைஞர்மணி

சரியான காரணம்... எப்போதும் வேண்டும்!

26th Jan 2021 06:00 AM | - வி.குமாரமுருகன்

ADVERTISEMENT

 

பணியாற்றி வரும் நிறுவனத்தை விட்டு ஒருவர் வெளியேறும்போது, வெளியேறுவதற்கான காரணங்களாகப் பலவற்றைக் கூறலாம். அவற்றில் ஒன்று, மேலதிகாரியின் மோசமான நடவடிக்கைகள்.

ஒரு நிறுவனத்தின் அதிகாரி என்பவர் நமக்குப் பிடித்தமானவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பெரும்பாலான நிறுவனங்களின் செயல் அதிகாரிகள், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை நண்பர்களாக, வழிகாட்டிகளாக, தங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு உழைப்பவர்களாகக் கருதி நட்பு பாராட்டி வருகிறார்கள். சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மகிழ்ச்சியான பணிச்சூழல் இல்லை; அதிகாரிகள் நம்மிடம் நட்புடன் இல்லை என நீங்கள் நினைத்தால்... அந்த மனநிலையை மாற்றிக் கொள்ள சில வழிகளைப் பின்பற்றலாம்.

ADVERTISEMENT

முதலில் உங்களுக்கு மேல் உள்ள அதிகாரியை நீங்கள் ஏன் வெறுக்கிறீர்கள்? என்பதை மதிப்பீடு செய்து பாருங்கள். எந்தக் காரணமும் இல்லாமல் யாரும், யாரையும் வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு ஏன் இந்த வெறுப்பு வந்தது? எப்படி வந்தது? என்பது குறித்து யோசித்து பாருங்கள். அதற்காக நேரம் ஒதுக்குங்கள்.

உங்கள் அதிகாரியின் ஆளுமைத்திறன் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அல்லது உங்களுடன் அவர் சகஜமாகப் பேச விரும்புவதில்லையா? அல்லது மிகப்பெரிய புராஜெக்ட்கள் குறித்து உங்களிடம் முன்னரே தெரிவிக்காமல் திடீரென்று தெரிவித்து அதை முடிக்க காலக்கெடுவை கூறுகிறாரா?

என்பது குறித்தெல்லாம் யோசித்துப் பாருங்கள். இதன் மூலம் ஒன்றுமே இல்லாத சில விஷயங்கள் கூட உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்தால் நீங்கள் உங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள முடியும்.

அல்லது உண்மையிலேயே சில அதிகாரிகள் எரிச்சலூட்டும் வகையில் நடந்திருக்கலாம். உங்களை மதிக்காமல் உங்களைவிட இளைஞர்களுக்கு மதிப்பு கொடுத்திருக்கலாம்.

அல்லது நீங்கள் செய்த வேலைக்கான அங்கீகாரத்தை அளிக்காமல் இருக்கலாம். அப்படி இருந்தால் உங்கள் வெறுப்பு நியாயம்தான்.

நிறுவனத்திற்காக செய்கின்ற ஒவ்வொரு வேலையிலும் நீங்கள் அதிகாரியை வெறுத்து வந்தால், நீங்கள் நிச்சயமாக உங்களை சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டியது அவசியம். கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்து சரி செய்வது போல இது அவசியம். நீங்கள் செய்யும் வேலையில் ஏற்பட்ட குறையினால் நிறுவனத்திற்கு பிரச்னை ஏற்பட்டால் அதை அந்த அதிகாரி பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. அதுகுறித்து உங்களிடம் அவர் சில கருத்துக்களை எடுத்துரைத்தால் அவர் மீது வெறுப்பு கொள்வது சரியாகாது. அதை விட்டுவிட்டு அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான செயல்பாடுகளில் ஈடுபட்டால் அந்த அதிகாரியின் அன்பைச் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் நல்ல அதிகாரி வேண்டும் என நீங்கள் நினைப்பது போல், உங்கள் மேலதிகாரியும் நல்ல பணியாளர் வேண்டும் என்று நினைப்பார் என்பதை நீங்கள் உணர வேண்டும். அதற்கேற்ற வகையில் உங்களை மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும். உங்களின் செயல்பாடுகள் தெரிந்தும் உங்களை அவர் நிறுவனத்தில் தொடர்ந்து வைத்திருக்கிறார் என்றால் அதுகுறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். அவர் உங்கள் மீது வெறுப்பு கொண்டால், நீங்கள் வேறு வேலையைத் தேடி அல்லவா ஓட வேண்டும்?

அதிகாரி கோபத்தில் ஏதோ தவறாகச் சொல்லி விட்டார் என்றால், அவரிடம் பேசுவதற்கு சரியான தருணத்திற்காகக் காத்திருங்கள். அதன்பின் பேசுங்கள். நிறுவனத்தின் சிக்கலான பிரச்னைகளுக்கு மத்தியில் இது குறித்து மூத்த அதிகாரியிடம் பேசாதீர்கள்.

உங்களைத் தொந்தரவு செய்யும் அனைத்து விஷயங்களையும் மன உறுதியுடன் எதிர்கொள்ளுங்கள். நேர்மையான முறையில் ஒரு விஷயத்தை அணுகி நிறுவனத்திற்கு சரியான வழிகாட்டுதலை நீங்கள் வழங்கினால், அந்த நிறுவனத்தில் நீண்ட தூரம் நீங்கள் பயணிக்க முடியும்.

சிலர் எடுத்த உடனே அதிகாரி சரியில்லை என சொல்லிவிடுவார்கள். அப்படி உடனடி முடிவு எடுக்காமல் தொடர்ந்து அந்த அதிகாரியைக் கவனியுங்கள். அவரிடம் கடினமான வார்த்தைகளைப் பேசுவதற்கு முன்பு நன்கு யோசியுங்கள். அந்த நிறுவனத்தின் நிலைமை தற்போது எப்படி இருக்கிறது என்பது பற்றிய ஆய்வு செய்யுங்கள். அதன் காரணமாகக் கூட அந்த அதிகாரி அப்படி நடந்திருக்கலாம். அந்த நிலைமை சரியான பின் அவர் உங்களிடம் நடக்கும் விதத்தைப் பாருங்கள். அது உங்களுக்கு பிடித்தமானதாகக் கூட மாறிவிடக்கூடும். தங்கள் ஊழியர்களை எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் பணியிலிருந்து வெளியேற்றக் கூடாது என நினைக்கும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஓர் அதிகாரியின் மீது கொண்ட வெறுப்பினால் மட்டுமே அந்த நிறுவனத்தை விட்டு வெளியே செல்ல நினைப்பது தவறு. ஏனெனில் அவருடைய இடத்தில் வேறு ஒருவர் எந்த நேரத்திலும் வரக் கூடும்.

எனவே தனிப்பட்ட நபர்களின் செயல்களினால் ஒரு நிறுவனத்தைவிட்டு ஒருபோதும் வெளியேறக் கூடாது.

நீங்கள் செய்யும் வேலை உங்களுடைய மனதுக்குப் பிடித்தமானதா? உங்களுடைய இயல்பான ஆர்வத்துக்கு உகந்ததா? தொடர்ந்து இந்த வேலையில் நீங்கள் இருந்தால், நீங்கள் வளர்ச்சி அடைய முடியுமா? உங்களுடைய திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியுமா? இந்தப் பணிக்கான எதிர்காலம் எப்படி உள்ளது? என்று பல புறநிலை உண்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நீங்கள் வேலையை விட்டு விலகி, உங்களுக்குப் பிடித்தமான வேலைக்குச் செல்ல முயற்சி செய்யலாம். தனிநபர்கள் எப்போதும் நமது எதிரிகளல்ல.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT