இளைஞர்மணி

ஆராய்ச்சி முடிவு... புகை மனதுக்குப் பகை!

26th Jan 2021 06:00 AM | -ந.முத்துமணி

ADVERTISEMENT

 

புகை மனித உடலுக்குப் பகை என்பது காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் கருத்தாகும். இதை பொருட்படுத்தாத ஏராளமானோர், தொடர்ந்து புகைபிடித்து வருகிறார்கள். புகைபழக்கம், புற்றுநோய் போன்ற தீரா நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகும் புகைக்கும் பழக்கத்தை கைவிடமுடியாமல் தவிப்பவர்கள் ஏராளம் உண்டு.

புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையைச் சுவாசிக்கும் சிறுகுழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இதைத் தடுக்கவே திரையரங்கம், உணவகம், பூங்கா, மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் போன்ற பொது இடங்களில் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டது. மீறி புகைத்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. புகைப்பதால் ஏற்படும் தீயவிளைவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக  சிகரெட்   பெட்டிகள் மீது அதன் ஆபத்தை விளக்கும் புகைப்படங்கள், விழிப்புணர்வு வாசகங்கள் வெளியிடப்படுகின்றன. முடிந்தவரை திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் தவிர்க்கப்படுகின்றன.  "புகைப்பது உடல்நலனுக்கு கேடுவிளைவிக்கும்" என்ற வாசகங்கள் இடம்பெறுகின்றன. இருந்தாலும் புகைபிடிக்கும் பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

இங்கிலாந்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், புகைக்கப்பவர்களில் அதிகமானோரின் உடல் நலனோடு அவர்களுடைய மனநலமும் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. மனநலத்தில் ஏற்படும் பாதிப்பு நேரடியாக குடும்பத்தையும், மறைமுகமாக சமூகத்தையும் பலவாறு மோசமாகப் பாதிக்கும். புகைப்பதற்கான காரணத்தைக் கூறுபவர்கள்,"மனசு சரியில்லை. அதனால் புகைத்து மனதை ஆற்றிக்கொள்கிறேன்' என்பார்கள்.  "புண்பட்ட நெஞ்சைப் புகைவிட்டு ஆற்றுவதாக'  புது பழமொழியையும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் புகைப்பழக்கம் மனநல பாதிப்பை இட்டிப்பாக்கும் என்பது ஆராய்ச்சியில் உறுதியாகியுள்ளது. 

ADVERTISEMENT

லிவிங் வெல் அமைப்பின் தலைவர் ஹாலிபீடன் கூறுகையில்,""மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படாதவர்களைக் காட்டிலும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தான் புகை பழக்கத்திற்கு எளிதில் ஆட்பட்டுவிடுகிறார்கள். எண்ணம், செயல் ஆகியவை மாறுபட்டுச் செயல்படும் மனக் கோளாறால் (ஸ்சிசோஃப்ரெனியா) பாதிக்கப்பட்டிருப்பவர்களில் புகை பழக்கத்திற்கு ஆட்படுவோர் 3 மடங்கு அதிகமாகும். இவர்கள் அளவுக்கு அதிகமாகவும் புகைக்கத் தொடங்கிவிடுகிறார்கள் என்பது பேராபத்தாகும். உண்மையில் புகை பழக்கத்தால் கவலை மற்றும் பதற்றத்தால் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. மூளையில் இயல்பாக மன எழுச்சியை ஏற்படுத்தும் ஆற்றலை புகை பழக்கம் சிதைத்துவிடுகிறது. 

புகை பழக்கம் தொடருமேயானால், அது மூளையின் தற்செயலாக நிகழ்த்து மன எழுச்சியைப் படிப்படியாக குறைத்து, புகைக்கும் பழக்கத்தை அதிகப்படுத்திவிடுகிறது. மன அழுத்தம் கொண்டவர்களால் நினைத்தாலும் அவ்வளவு எளிதில் புகை பழக்கத்தில் இருந்துவிடுபடமுடிவதில்லை. புகை பழக்கத்தில் இருந்துவிடுபட முயற்சிக்கும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கிறது. மனநலனை மேம்படுத்துவதற்காக புகை  பழக்கத்திற்கு ஆட்படுவது நஞ்சை உட்கொள்வதுபோல கொடியதாகும்'' என்கிறார்.

இங்கிலாந்து நாட்டில் புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட்டால் மனநலம் மேம்படுமா? என்பதை ஆராய்வதற்காக  ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைபிடிப்பவர்களையும்,  புகைபிடிப்பதை நிறுத்திவிட்டவர்களையும்  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி இருக்கிறது,  வேப் கிளப் என்கிற அமைப்பு.  புகைபிடிப்பதைக் கைவிட்டதும் புகைபிடிப்பவர்களின் மனநலன் மேம்பட்டு இருப்பதைக் கண்டறிந்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் புகைபழக்கத்தில் இருந்து விடுபடுவோரில் 27 சதம் பேர், புகைபழக்கத்தால் மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். மனநலனை மேம்படுத்துவதற்காகவே புகை பழக்கத்தைக் கைவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் புகை பிடிக்கும் 72 லட்சம் பேரில் 48 லட்சம் பேர் புகை பழக்கம் மனநனை வெகுவாகப் பாதித்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள். புகைபழக்கத்திற்கும் மனநலன் பாதிப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பதை ஆராய்ச்சி உறுதி செய்திருக்கிறது. மனநலனை மேம்படுத்துவதற்காக புகை பழக்கத்தைவிட்டதாக 13 சதம் பேரும், புகைபழக்கத்தில் இருந்து விடுபட்டதால் மனநலம் மேம்பட்டுள்ளதாக 44 சதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள். புகைபழக்கத்தில் இருந்துவிடுபட்ட 2 வாரங்களில் 39 சதம்பேர், நான்கு வாரங்களில் 52 சதம் பேரின் மனநலம் மேம்பட்டுள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. மனநலனுக்கும் புகைபழக்கத்துக்கும் தொடர்பு இருப்பது குறித்த   விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்கள் முன் வர வேண்டும்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT