இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 33: மீளிணக்கத் திறன்  -  3

26th Jan 2021 06:00 AM | சுப. உதயகுமாரன்

ADVERTISEMENT


மீளிணக்கம் என்பது தனிமனித வாழ்வில் மட்டுமல்ல, மனிதக் குமுகங்களிலும் நடக்க வேண்டும். மனிதகுல வரலாற்றில் நடந்தேறியிருக்கும் மாபெரும் கொடுமைகளை எல்லாம் "மறப்போம், மன்னிப்போம்' எனும் மீளிணக்க நடவடிக்கைகளால்தான் கடந்து வந்திருக்கிறோம்.

கடந்த சில நூற்றாண்டுகளில் நமது உலகில் நடந்தேறியிருக்கும் அநியாயங்கள், அக்கிரமங்கள், அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எடுத்துக்காட்டாக, "இந்தியாவைத் தேடிச்செல்கிறேன் பேர்வழி' என்று புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று கதைத்தார்கள். தலைமுறை தலைமுறையாக அங்கே வாழ்ந்துகொண்டிருந்த செவ்விந்தியர்களை கொலம்பஸ் மனிதர்களாக மதிக்கவுமில்லை; நடத்தவுமில்லை. அதன் பின்னர் நடந்த வெள்ளையினக் குடியேற்றத்தால், செவ்விந்தியர்கள் அருகிப் போயினர்.

அதன் பின்னர் 1600-களில் ஆப்பிரிக்க ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மடக்கிப் பிடிக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு, அடிமைகளாக விற்கப்பட்டார்கள். கணவனை ஒருவருக்கும், மனைவியை வேறொருவருக்கும், குழந்தைகளை மற்றொருவருக்கும் ஆடு, மாடுகள் போல விலைபேசி விற்றனர். அப்போது அடிமை வியாபாரம் என்பது சட்டரீதியான வணிகமாக இருந்தது. 

இதேபோன்ற மனோபாவத்துடன்தான் மேற்குலக காலனியாதிக்கச் சக்திகள் ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளைச் சூறையாடினார்கள். இனவெறியோடு கூடிய அந்த வேற்றுமைப்படுத்தும், சுரண்டிக் கொழுக்கும் சித்தாந்தமும், செயல்பாடுகளும் என்னென்ன செய்தன என்று இந்தியர்களாகிய நாம் நன்கறிவோம்.

ADVERTISEMENT

வெறும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், 1948 முதல் 1991 வரை தென்னாப்பிரிக்கா நாட்டில் "அபார்தைட்' என்கிற ஓர் ஆட்சியமைப்பு சட்டபூர்வ
மானதாக இருந்தது. அபார்தைட் என்றால் "தனித்தனி' என்று அர்த்தம். அந்த நாட்டின் பெரும்பான்மை (74.1%) கருப்பின மக்களை  எண்ணிக்கையில் மிகக் குறைவான (14.8%) வெள்ளையர்கள்   அடக்கியாண்ட, வாழ்வின் அனைத்து வளங்களையும், நலன்களையும் தங்களுக்கென அபகரித்து வைத்துக் கொண்ட ஒரு கொடூரமான, அநியாயமான ஆட்சி அமைப்புதான் அபார்தைட்.

சாதி, மதம், இனம், நிறம், பால், தலைமுறை, வகுப்பு, தேசியம் போன்றவற்றின் அடிப்படையில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் (பாரதியார்) என்றுணர்ந்த நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் பிளவுபட்டுக் கிடந்த அவர்களின் நாட்டுக்கு மீளிணக்கம்தான் உடனடித் தேவை என்றுணர்ந்தனர்.

கடந்த 1995-ஆம் ஆண்டு டெஸ்மன்ட் டூட்டூ அவர்களின் தலைமையில் "உண்மை மற்றும் மீளிணக்கக் குழு' ஒன்றை நிறுவி, முறையான விசாரணைகளை மேற்கொண்டார்கள். பெரும் அவலத்துக்குள்ளாகி இருந்த அந்நாட்டு மக்களின் அச்சங்களை, ஆதங்கங்களை, மனக்குறைகளை மறுப்பதோ, மறைப்பதோ, மறப்பதோ நல்லதல்ல; மனம்விட்டுப் பேசி, மன்னித்து, அவற்றைக் கடந்து செல்வதுதான் உகந்த வழி என்று தெளிந்து கொண்டார்கள்.

"அபார்தைட்' ஏற்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மனக்குறைகளை எடுத்துரைக்கவும், குற்றமிழைத்தவர்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டு, அவை அன்றைய அரசியல் அமைப்பால் உந்தப்பட்டவை என்று நிரூபிக்கவும் இந்த விசாரணைக் குழு மிகவும் உதவியது. ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொதுமன்னிப்புக் கோரி விண்ணப்பித்தார்கள்.

அந்த காலகட்டத்தில் ஊடகங்கள் மீளிணக்கக் குழு நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லியவாறே இருந்தன. 

அரசு அதிகாரிகள் கொடுத்த வாக்குமூலங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட  படுகொலைகளை, ஆள்கடத்தல்களை, பாலியல் வன்கொடுமைகளை எல்லாம் பட்டியலிட்டன. அடையாளம் காணப்படாமல் இருப்பதற்காக கொலை செய்யப்பட்டவர்களின் உடல் பாகங்கள் சிதைக்கப்பட்ட வழிமுறைகளை சிலர் சொன்னார்கள். கருப்பினக் கைதிகளின் கழுத்துகளில் பெட்ரோல் நிரப்பிய டயர் குழாய்களைப் போட்டுக் கொளுத்தியதை சிலர் விவரித்தார்கள். 

அரசியல் கைதிகளிடமிருந்து உண்மைகளை வரவழைக்க நடத்தப்பட்ட சித்ரவதைகளை சிலர் விளக்கிச் சொன்னார்கள்.

தங்கள் குற்றங்களை விசாரணைக் குழுவின் முன்னால் விவரிக்கும்போது, பலரும் நிலை குலைந்து, குமுறி அழுதார்கள். நாள்தோறும் இம்மாதிரி அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலங்கள் வெளிவந்து நாடே விக்கித்து நின்றது. பொதுவெளியில் தானிழைத்தக் குற்றங்களை ஏற்று, மன்னிப்புக் கோரியவர்கள் தங்கள் பாதுகாப்புக் குறித்து கவலை கொண்டனர். கொடூரமாகக் கொல்லப்பட்ட, தடயங்கள் ஏதுமின்றி காணாமலாக்கப்பட்ட  உற்றார் உறவினர்கள் குறித்து உண்மைகளைத் தெரிந்து கொண்டவர்கள் மீண்டும் கிளறப்பட்ட தங்கள் மனப்புண்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்தார்கள்.

இந்த "உண்மை மற்றும் மீளிணக்கக் குழு' நடவடிக்கை நடந்து முடிந்த விடயங்கள் மீதே கவனம் செலுத்துகிறது. கடந்த காலத்தில் நடந்தேறிய விடயங்களிலிருந்த முறைகேடுகள், தவறுகள், குற்றங்கள் பற்றி கருத்தூன்றி ஆய்வு செய்கிறது. பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக அணுகி, அவர்களின் அனுபவங்கள், வலிகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கிறது. மேற்படி நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒரு விரிவான அறிக்கையைத் தயாரிக்கிறது. தொடர்புடைய அரசு அங்கீகரிக்கும், ஊக்குவிக்கும் செயல்பாடாக இது அமைவது மிகவும் முக்கியமானது. சமூகத்தில் நிலவும் வெறுப்பு, கோபம், பழிவாங்கல், அச்சம் போன்ற கடின உணர்வுகளைப் புறந்தள்ளி, பொறுப்பேற்பு, மன்னிப்பு, மீளிணக்கம் போன்றவை நோக்கிச் செலுத்தும் நடவடிக்கைதான் இது.

இந்த வெற்றிகரமான தென்னாப்பிரிக்க முயற்சியைத் தொடர்ந்து, உலகெங்குமுள்ள ஏறத்தாழ ஐம்பது இணக்கமற்றச் சமூகங்களில் பெரும் துன்பங்களோடு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் "உண்மை மற்றும் மீளிணக்கக் குழு' முயற்சிகளை மேற்கொண்டார்கள். தங்களின் கசப்பான பழைய வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவர்கள் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, சகவாழ்வு நோக்கி முன்னேறிச் செல்வதற்கு அவை பெரிதும் உதவின.

உண்மை மற்றும் மீளிணக்கக் குழுக்கள் போலவே, பல நாடுகளின் தலைவர்கள் தங்கள் நாடுகளில் நிகழ்த்தப்பட்ட வரலாற்று அவலங்களுக்கு பொதுமன்னிப்புக் கோரினர். இரண்டாம் உலகப் போரின்போது முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட ஜப்பானிய அமெரிக்கர்களிடம் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கடந்த 1988-ஆம் ஆண்டு மன்னிப்புக் கேட்டார். பசிபிக் பெருங்கடலிலுள்ள ஹவாய் தீவுகளை 1893-ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் சட்ட விரோதமாகக் கைப்பற்றியதற்கு அதிபர் பில் கிளிண்டன் 1993-ஆம் ஆண்டு மன்னிப்புக் கோரினார். அதேபோல, அமெரிக்கக் கருப்பின மக்கள் பலரின் மீது அவர்களுக்கே  தெரியாமல் நடத்தப்பட்ட சிஃபிலிஸ் மருத்துவப் பரிசோதனைகளுக்கு 1997-ஆம் ஆண்டு கிளிண்டன் மன்னிப்புக் கேட்டார்.

செவ்விந்தியர்கள் மீது அமெரிக்கர்கள் நடத்திய வன்கொடுமைகளுக்கு, வேற்றுப்படுத்தல்களுக்கு, அழித்தொழித்தலுக்கு அதிபர் பாரக் ஒபாமா 2010-ஆம் ஆண்டு மன்னிப்புக் கோரினார். அதே போல, ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் கெவின் ரட் அந்நாட்டுப் பூர்வகுடியினர் மீது இழைக்கப்பட்ட துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இழப்புக்களுக்கும் மன்னிப்புக் கேட்டார். கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அந்நாட்டு பூர்வகுடி செவ்விந்தியர்களின் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி உண்டுறைப் பள்ளிகளில் சேர்த்துக் கொடுமைப்படுத்தியதற்கு பொதுமன்னிப்புக் கோரினார்.

ஆனால் மேற்படி மன்னிப்புக்கோரல்கள் அனைத்துமே வெறும் காகித நடவடிக்கைகளாகவே அமைந்தன. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதே? அவை உண்மையானவையாக,  அர்த்தமுள்ளவையாக இருக்கவில்லை. பாதிப்புக்குள்ளானவர்களுக்கு, அவர்கள் பட்ட துன்பங்களுக்கு எந்தவிதமான இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை; பிராயச்சித்தங்கள் செய்யப்படவில்லை. குற்றமிழைத்தவர்கள் தயாரித்திருந்த போலி ஆவணங்கள், எழுதி வைத்துக் கொண்ட பொய் வரலாறுகள் போன்றவை மறுதலிக்கப்படவில்லை. நிகழ்ந்த உண்மைகள் உரக்கச் சொல்லப்படவில்லை. குற்றமிழைத்தவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் ஒருங்கிணைந்து மேற்படி குற்றங்களிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் தேடப்படவில்லை.

"குடியை விடுவது எளிது, நான் பலமுறை விட்டிருக்கிறேன்' என்று ஒருவர் சொன்னால் அது அவருடைய தோல்வியைத்தான் கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் மீளிணக்கம் செய்வது எளிது, நான் பலமுறை செய்திருக்கிறேன் என்று ஒருவர் சொன்னால், அது அவருடைய வெற்றிகரமான வாழ்க்கையை விவரிக்கிறது. 

மீளிணங்குவோம், மேன்மையடைவோம்.  நீண்டகாலமாக நீங்கள் முரண்பட்டு, பேசாமலிருக்கும் ஓர் உறவினரை, நண்பரைக் கண்டறிந்து, அவரிடம் பேசுங்கள், அல்லது அவருக்கு ஒரு கடிதமெழுதுங்கள். அந்த உறவைப் புதுப்பியுங்கள்.

உங்களுக்கு யாரோடாவது ஒரு வாக்குவாதமோ, தகராறோ ஏற்பட்டிருந்தால், அதைப்பற்றி கவனமாகப் பரிசீலித்து, அவரோடு மீளிணக்கம் செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் எப்படி மீளிணக்கம் செய்துகொண்டீர்கள் என்பது குறித்த அனுபவத்தை குடும்பத்தாரிடம், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 (தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT