இளைஞர்மணி

மனநலம்... எளிய வழிமுறைகள்!

26th Jan 2021 06:00 AM | -சுரேந்தர் ரவி

ADVERTISEMENT

 

நாம் அனைவரும் ஏதோவொரு குறிக்கோளை நோக்கித் தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தப் பயணம் சிறக்க வேண்டுமெனில், நம் மனம் ஆழ்கடல் போல அமைதியான நிலையில் காணப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது. 

சுவரோ காகிதமோ துணியோ இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நம் மனமும் உடலும் நலமுடன் இருந்தால்தான் அன்றாடப் பணிகளை எந்தவித இடையூறுமின்றி வெற்றிகரமாக முடிக்க இயலும். மனநலத்தை முறையாகப் பேணுவதென்பது அவ்வளவு கடினமான காரியமும் அல்ல. எளிய வழிமுறைகளைப் பின்பற்றி மனதை நலமுடன் வைத்திருக்க இயலும். 

முதலில் நமது அன்றாடப் பணிகளில் ஒழுங்குமுறையைக் கொண்டுவர வேண்டும். இந்த நேரத்தில் இந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்று முறையாகத் திட்டமிட்டு செயல்படுதல் அவசியம். உடற்பயிற்சிக்கான நேரம், அலுவலக நேரம், ஓய்வு நேரம், படுக்கைக்குச் செல்லும் நேரம் என ஒவ்வொன்றையும் திட்டமிட்டு அவற்றில் ஒழுங்குமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

ADVERTISEMENT

அத்திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி வந்தாலே நமது மனம் பெருமளவில் மகிழ்ச்சியடையும். மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றி கண்டால்தான் மகிழ்ச்சியடைவோம் என்பதெல்லாம் இல்லை. மிகச் சிறிய இலக்கில் வெற்றி பெற்றால் கூட மனம் மகிழ்ச்சி காணும். சில சமயங்களில் நாம் திட்டமிட்டபடி நடந்து கொள்ள இயலாமல் போகும். ஆனால், 
அத்தகைய சமயங்களில் தளர்வடையாமல் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பதற்கான செயல்களை முன்னெடுக்க வேண்டும். 

எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பது மனநலத்தைக் காப்பதற்கான மற்றொரு வழியாகும். நாம் தினமும் அனுபவிக்கும் மகிழ்ச்சியான தருணங்களுக்குப் பின்னால் பலரின் உழைப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அவர்களிடம் நன்றி பாராட்ட வேண்டும். உணவை நமது தட்டுக்குக் கிடைக்கச் செய்தவர்கள், குறிப்பிட்ட பொருள்களை நமது கைகளில் கொண்டு வந்து சேர்த்தவர்கள், நாம் வாழ்க்கையை நிம்மதியாக நகர்த்துவதற்குக் காரணமாக இருக்கும் நமக்கு பலவிதங்களிலும் உதவிய அனைவரிடமும் நன்றி பாராட்டுதல் அவசியம். 

அவர்கள் அனைவரையும் நேரில் தேடிச் சென்று நன்றி கூற வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இருக்கும் இடத்திலிருந்து நன்றியை மனதார அவர்களுக்குத் தெரிவித்தாலே போதுமானது. இவ்வாறு அனைத்து விவகாரங்களுக்கும் காரணமாக இருப்பவர்களுக்கு நன்றி செலுத்துவது நம் மனதைத் தூய்மைப்படுத்தி அமைதியடையச் செய்யும். 

நாள்தோறும் சிறு குறிப்பேட்டைப் பயன்படுத்துவது மனதை நிதானமடையச் செய்யும். அன்றாடம் காலையில் எழுந்தவுடன் இன்று என்னென்ன வேலைகள் இருக்கின்றன என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தால், நாள்குறிப்பில் குறித்து வைத்துக் கொள்ளலாம். அவற்றை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்கூட்டிய திட்டமிடுதல் பெரும் பலனளிக்கும். 

அன்றைய தினம் முடிந்த பிறகு இன்று என்ன செய்தோம், எந்தச் செயலைச் செய்தபோது என்ன மாதிரியான உணர்வுகள் தோன்றின என்பன போன்றவற்றை நாள்குறிப்பிலோ சிறு குறிப்பேட்டிலோ எழுதலாம். இதைத்தான் எழுத வேண்டும் என்பதில்லை. மனதில் தோன்றிய உணர்வுகள் எதையும் அந்த சமயத்தில் எழுதலாம். முறையாக, அழகாக பொறுமையுடன் எழுத வேண்டும் என்பது கூட இல்லை. படமாக வரையலாம். கிறுக்கவும் செய்யலாம்.

இந்தச் செயலானது நம் மனதிலுள்ள அதீத உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வடிகாலாக அமையும். இதன் மூலம் நம் மனம் அழுத்தங்களிலிருந்து விடுதலை பெற்று சமநிலையை அடையும். அதீத உணர்வுகள் வாயிலாகத் தோன்றும் விளைவுகள் பெருமளவில் குறையும்.

நம் பெற்றோர், உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்களிடம் நாம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். ஆனால், நம்முடன் நாம் தொடர்பில் இருக்கிறோமா என்பதை ஆராய வேண்டும். நாம் யார், நாம் செய்வது என்ன, செய்ய வேண்டியது என்ன போன்ற சரியான புரிதல்களுடன் நாம் வாழ்க்கையை நகர்த்தி வருகிறோமா என்பதை உற்றுநோக்க வேண்டும். 

நாம் இப்படிப்பட்டவர் என்பதை முதலில் நாமே தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மைச் சுற்றி நிகழும் சூழலுக்கு ஏற்றாற்போல் நம்மை மெருகேற்றிக் கொள்ள முடியும். நம்மை நாமே அறியாமல் இருப்பது தேவையில்லாத மன உளைச்சலுக்கு நம்மை இட்டுச் செல்லும். 

ஒருவேளை உணர்வுகள் பெருக்கெடுத்து தடுமாறும் மனதை சுயமாகக் கட்டுப்படுத்த இயலவில்லை எனில் தகுந்த மருத்துவரை நாடுதல் அவசியம். இதில் அச்சப்படுவதற்கோ நாணம் கொள்வதற்கோ எதுவுமில்லை. மனநல மருத்துவரை நாடுவதால் நாம் "பைத்தியம்' என்றாக மாட்டோம். உடல்நலக் குறைவு ஏற்படும்போது மருத்துவரை நாடுவது போல மனநலத்தைக் காக்க மருத்துவரை நாடுவதும் இயல்பானதே. 

வாழ்வில் மேன்மையடைவதற்காக மனநலத்தைக் காக்க வேண்டியது நமது கடமை.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT