இளைஞர்மணி

ஐஐடி - சென்னை...: புற்றுநோய் சிகிச்சை... கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பம்!

26th Jan 2021 06:00 AM | - ந.ஜீவா

ADVERTISEMENT

 

புற்றுநோயைக் குணப்படுத்த முடியாது என்றநிலை முதலில் இருந்தது. புற்றுநோயை அறுவைச் சிகிச்சை, கீமோ தெரபி, கதிர்வீச்சு முதலிய சிகிச்சைமுறைகளில் குணமாக்கிவிடலாம் என்ற நம்பிக்கை இப்போது பிறந்துள்ளது. என்றாலும் இந்த சிகிச்சைமுறைகளில் பக்கவிளைவுகளும் பாதிப்புகளும் இருக்கவே செய்கின்றன.

புற்றுநோய் சிகிச்சையின்போது அதைக் கண்காணிக்கக் கூடிய புதிய தொழில்
நுட்பம் ஒன்றை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். சோதனை அடிப்படையில் உள்ள இந்த தொழில்நுட்பத்துக்கு, மாணவர்களின் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கு விருதளிக்கும் நிறுவனமான பயோ டெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்ட்டன்ஸ் கவுன்சில்(ஆஐதஅஇ) 2020 - ஆம் ஆண்டுக்கான "காந்தியன் யங் டெக்னாலஜிகல் இனோவேஷன் அப்ரிசியேஷன்' என்ற விருதை வழங்கியுள்ளது.

சென்னை ஐஐடி -யில் இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் பேராசிரியர் அருண் கே.திட்டை. அவரிடம் இந்த ஆராய்ச்சி குறித்துப் பேசினோம்.

ADVERTISEMENT

""எந்த ஓர் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றாலும் பல்வேறு தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம். நம் நாட்டில் இந்த ஒருங்கிணைப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு டாக்டர் - ஓர் இன்ஜினியர் என்று நாம் எடுத்துக் கொண்டால், இருவரின் துறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி துறைகளாகவே பார்க்கப்படுகின்றன.

மருத்துவத்தையும், தொழில்நுட்பத்தையும் இணைத்துப் பார்ப்பது, ஒன்றுக்கொன்று உதவும் என்பதாகப் பார்ப்பது நம்நாட்டில் மிகவும் குறைவு.

2014-இல் சென்னை ஐஐடியில் அப்ளைடு மெக்கானிக்ஸ் (பயோ மெடிகல்) துறையில் பணியில் சேர்ந்தேன். இங்கு பல்வேறு தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு இருக்கிறது. அதனால் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவது இங்கு எளிது.

நாங்கள் உடலில் உள்ள புற்றுநோய், கட்டிகள் ஆகியவற்றைக் குணப்படுத்தும் சிகிச்சையின்போது அவற்றைக் கண்காணிக்கும் முறை ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறோம்.

20 ஓஏக்ஷ் அலை அதிர்வுகளுக்கு (ஃபிரிக்வன்சீஸ்) மேல் உள்ள ஒலி அலைகள் நம் காதுகளுக்குக் கேட்பதில்லை. இதைக் கேளா ஒலி அல்லது அல்ட்ரா சவுண்ட் என்பார்கள். இந்த அல்ட்ரா சவுண்ட்டைப் பயன்படுத்தி உடலில் உள்ள புற்று நோய்க் கட்டி உட்பட பல கட்டிகளைக் குணப்படுத்தும் சிகிச்சையின்போது அவற்றைக் கண்காணித்து உடனுக்குடன் அது தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவுவதே எங்களுடைய கண்டுபிடிப்பு.

உடலுக்குள் ஊடுருவிச் செல்லும் இந்த அல்ட்ரா சவுண்ட், நோய் உள்ள திசுக்களுக்குள் ஊடுருவிச் சென்று எதிரொலிக்கும். நோயற்ற உடல் திசுக்களுக்குள் சென்று எதிரொலிப்பதற்கும், நோயுள்ள திசுக்களுக்குள் சென்று எதிரொலிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அளந்து, உடலில் எந்த இடத்தில் நோயுள்ள திசுக்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

எப்படி சூரிய ஒளியை ஒரு லென்சின் மூலமாக ஓர் இடத்தில் குவிக்கும்போது, அந்த இடம் வெப்பமடைகிறதோ அதைப் போன்று அல்ட்ரா சவுண்ட் ஒரு குறிப்பிட்ட வகையில் ஓர் இடத்தில் குவிக்கும்போது அந்த இடம் வெப்பமடைகிறது. இதை ஹை - இன்டென்சிட்டி ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்ட் என்பார்கள். அதேபோன்று மைக்ரோவேவ் அப்ளிகேட்டர் மூலமாகவும் உடலின் திசுக்களை வெப்பமடையச் செய்யலாம்.

புற்றுநோய் உள்ள பகுதியில் இவற்றைப் பயன்படுத்தி வெப்பநிலையை அதிகப்படுத்தும்போது அந்தப் பகுதியில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திசுக்கள் அழிந்துவிடுகின்றன. இந்த முறையில் புற்றுநோய் உள்பட உடலில் ஏற்படும் பல்வேறு கட்டிகளையும் குணமாக்க முடியும். இந்த மருத்துவமுறை குறித்து கேள்விப்படுகிறவர்களுக்கு சில ஐயங்கள் ஏற்படும்.

நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மட்டும்தான் சூடாக்கப்படுமா? பாதிப்பில்லாத பகுதிகளும் சூடாக்கப்பட்டு பாதிக்கப்படுமா? என்பது அவற்றில் ஒன்று.

இதைத் தெரிந்து கொள்ளவே எங்களுடைய அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதன் மூலம் உடலுக்குள் நிகழ்கிறவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். எந்த இடத்தில் எவ்வளவு வெப்பம் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடிவதால் நோயுள்ள பகுதிகளை மட்டும் வெப்பப்படுத்த முடியும்.

அடுத்து, நோயுள்ள செல்கள் இறந்துவிட்டனவா என்பதை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? என்ற கேள்வி எழக் கூடும். அதையும் இந்த அல்ட்ரா சவுண்ட் மூலமாகக் தெரிந்து கொள்ள முடியும். இறந்த செல்கள் பிற செல்களை விடக் கடினத்தன்மை பெற்றுவிடும். இதனால் உயிருள்ள செல்களினூடே செல்லும் அல்ட்ரா சவுண்ட்டின் எதிரொலிப்பும், இறந்த செல்களினூடே செல்லும் அல்ட்ரா சவுண்டின் எதிரொலிப்பும் வேறு வேறாக இருக்கும். அதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் செல்களில் தேவைக்கு அதிகமான வெப்பநிலை உயர்வு ஏற்படும்போது குமிழிகள் வெளிப்படும். இது அல்ட்ரா சவுண்ட் ஊடுருவிச் செல்லும் பாதையை நேர்கோடாக இல்லாமல் ஒழுங்கற்றதாக மாற்றிவிடும். இதன் மூலமும் அதிக வெப்பம் செலுத்தப்படுவதை உடனுக்குடன் தெரிந்து கொண்டு செலுத்தப்படும் வெப்பத்தின் அளவைக் குறைத்துக் கொள்ள முடியும்.

புற்றுநோய் மற்றும் கட்டிகளை வெப்பப்படுத்துதல் மூலம் குணப்படுத்தும் சிகிச்சையின்போது அதைக் கண்காணிக்கும் முறை குறித்த எங்களுடைய தொழில்நுட்ப ஆராய்ச்சி சோதனைநிலையில் உள்ளது. தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் விரைவில் பயன்பாட்டுக்கு இதைக் கொண்டு வந்துவிடுவோம்.

இதற்குத் தேவையான கருவிகளை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்வது எளிது என்பதால் தேவைப்படும் மருத்துவமனைக்கு - அது தொலைதூர கிராமத்தில் இருந்தாலும் இதனை உடனே கொண்டு செல்ல முடியும்'' என்றார் அருண் கே. திட்டை.

இந்த ஆராய்ச்சியில் இவருடன் இணைந்து ஐஐடி மெட்ராஸின் டிபார்ட்மென்ட் ஆஃப் இன்ஜினியரிங் டிசைன் துறையில் அசோசியேட் புரபெஸராகப் பணியாற்றும் கவிதா அருணாசலம், அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அலி அர்ஷத், டிபார்ட்மென்ட் ஆஃப் இன்ஜினியரிங் டிசைன் துறையில் ஆராய்ச்சி மாணவியாக உள்ள திவ்யா பாஸ்கரன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரும் உள்ளனர்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT