இளைஞர்மணி

செவ்வாயில் 3 ஆயிரம் நாள்கள்!

26th Jan 2021 06:00 AM | -எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் தனது 3 ஆயிரம் செவ்வாய் நாள்களை நிறைவு செய்துள்ளது. பூமியில் ஒருநாள் என்பது 24 மணி நேரம். செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 மணி நேரம் 39 நிமிடங்கள் மற்றும் 35 நொடிகள் ஆகும். அந்த வகையில், 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய கியூரியாசிட்டி விண்கலம், தனது 3 ஆயிரமாவது நாளை கடந்த ஜன. 12-13-இல் நிறைவு செய்தது.

இதையொட்டி, கியூரியாசிட்டியின் பல்வேறு கண்டுபிடிப்புகள், எடுத்த புகைப்படங்கள், சேகரித்த தரவுகள் ஆகியவற்றை நாசா தனது இணையதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளது. செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா, உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறு உள்ளதா உள்ளிட்ட விஷயங்களைக் கண்டறிவதற்காக அனுப்பப்பட்டது கியூரியாசிட்டி விண்கலம். அக்கிரகத்தில் "கேல்' எனப் பெயரிடப்பட்டுள்ள பள்ளத்தாக்கில்தான் அது முதலில் தரையிறங்கியது. அதன் ஆய்வு வாகனம் (ரோவர்) தற்போது பள்ளத்தாக்கின் மத்தியில் உள்ள 5.5 கி.மீ. உயரம் கொண்ட "மவுன்ட் ஷார்ப்' என்கிற மலை மீது ஏறி ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

இந்த 3 ஆயிரம் நாள்களில் கியூரியாசிட்டி கண்டறிந்த விஷயங்கள் ஏராளம். அதில் பல ஆச்சரியமானவை. செவ்வாயில் ஒரு காலத்தில் திரவ வடிவிலான நீர் இருந்தது, உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருந்தது போன்ற ஆய்வு முடிவுகளுக்கு கியூரியாசிட்டியின் கண்டுபிடிப்புகள் முக்கிய காரணம். மேலும், செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் படிந்திருப்பது தொடர்பான ஆதாரத்தை கியூரியாசிட்டி அனுப்பியது. மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தான கதிர்வீச்சு அளவு செவ்வாயில் இருப்பதையும், செவ்வாயின் வளிமண்டலம் தற்போது இருப்பதைவிட கடந்த காலங்களில் தடிமனாக இருந்ததையும் உறுதிப்படுத்தியது.

ADVERTISEMENT

ஆய்வு வாகனத்தின் கண்கள் எனப்படும் மாஸ்ட் கேமரா எடுத்து அனுப்பிய 122 புகைப்படங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொகுக்கப்பட்டன. அதில் ஒரு புகைப்படம் விஞ்ஞானிகளை ஆச்சரியமடையச் செய்தது. மவுண்ட் ஷார்ப் மலையில் பாறை அடுக்குகள் ஒரு பெஞ்ச் போல இருக்கும் புகைப்படம்தான் அது. ஒரே அடுக்கில் மென்மையான மற்றும் கடினமான பாறைகள் உள்ளதை அப்புகைப்படம் காண்பிக்கிறது. மென்மையான பாறைகள் அரிப்புக்குள்ளாகும்போது, கடினமான பாறை ஒரு சிறிய குன்றுபோன்ற அமைப்பை ஏற்படுத்துகிறது. இதனால்தான் பெஞ்ச் போன்ற அமைப்பு உருவாகிறது என விஞ்ஞானிகள் அதற்கு விளக்கம் அளித்தனர்.

சுமார் 10 ஆண்டுகளாக செவ்வாயில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள கியூரியாசிட்டியுடன் வரும் பிப்ரவரியில் இணையப் போகிறது பெர்செவரன்ஸ் விண்கலம். நாசாவால் கடந்த ஆண்டு ஜூலை 30 -ஆம் தேதி செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம், வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி செவ்வாயில் ஜேசேரோ பள்ளத்தாக்குப் பகுதியில் தரையிறங்குகிறது. செவ்வாய் கிரகத்திலிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு பூமிக்குத் திரும்புவதே இந்த விண்கலத்தின் பிரதான பணியாகும்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT