இளைஞர்மணி

பாரம்பரிய நெல் விவசாயம்... இளைஞர்களுக்கு  வாய்ப்பு!

19th Jan 2021 06:00 AM | சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் அருகேயுள்ளது கீழம்பி கிராமம். இந்த கிராமத்தில் வாழும் பி.காம் பட்டதாரியான கே.எழிலன் பல ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இயற்கை முறையில் எந்தவித ரசாயனமும் கலக்காமல், பூச்சிக்கொல்லி மருந்துகள் எதையும் தெளிக்காமல், அதிக சத்துள்ள அரிசி வகைகளை உற்பத்தி செய்து வருகிறார். அவரது வயல்களில் விதம் விதமான உயரங்களில், பசுமை வண்ணங்களில் பாரம்பரிய நெல் ரகங்கள் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன.

""கரும்பச்சை நிறத்தில் இருப்பது மிளகுச்சம்பா, மிளகு வடிவத்தில் உருண்டையாக இருப்பது கொத்தமல்லிச்சம்பா, இது மாப்பிள்ளைச் சம்பா, இது தங்கச்சம்பா'' என ஒவ்வொரு பாரம்பரிய நெல்ரகங்களையும் காண்பித்தார்எழிலன்.

ADVERTISEMENT

அவரிடம் பேசியதிலிருந்து...

""நான் மொத்தம் 48 ஏக்கரில் 100 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்கிறேன். எனது உறவினர்கள் இருவருக்கு புற்றுநோய் வந்து மிகவும் அவதிப்பட்டனர். அவர்களுக்கு எதனால் புற்றுநோய் வந்தது என்று ஆய்வு செய்த போது சத்து இல்லாத அதே நேரத்தில் ரசாயன உரமும், பூச்சிக் கொல்லி மருந்தும் தெளித்த அரிசி உணவுகளைச் சாப்பிட்டது என்பது தெரிய வந்தது. பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்தால் சத்துள்ளதாகவும் இருக்கும், நோய் எதுவும் வராது என்பதால் அவற்றை நம் வயலில் பயிரிட்டால் என்ன எனத் தோன்றியது.

ஆனால் அவற்றை எப்படிப் பயிரிடுவது? அதற்கான விதைகள் எங்கு கிடைக்கும் என்பதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. பலரிடமும் இது பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

ஆந்திராவில் நாகி ரெட்டி என்பவர் பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டேன். உடனே அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று அவரிடம் பேசினேன். அங்கிருந்து அவரை எனது வயலுக்கு அழைத்து வந்தேன்.

அவரின் வழிகாட்டுதலின் மூலமாக முதலில் 10 ரகங்களை மட்டுமே பயிர் செய்தேன். அவர் பூச்சிக்கொல்லிக்குப் பதிலாக பூச்சி விரட்டி பயன்படுத்துவதைப் பற்றி என்னிடம் சொன்னார். பூச்சிவிரட்டியைத் தயாரிக்கும் முறையையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவரின் ஆலோசனைப்படி இன்று வரை பாரம்பரிய நெல்ரகங்களைஉற்பத்தி செய்து வருகிறேன்.

அதுமட்டுமல்ல, பாரம்பரிய நெல் ரகங்களைப் பற்றிய புத்தகங்களைத் தேடிப் பிடித்து படித்தேன். வடஇந்தியாவைச் சேர்ந்த பாலேக்கர் என்பவர் பாரம்பரிய நெல்ரகங்களின் உற்பத்தி குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதையும் படித்து அதன் மூலமும் நிறையத் தெரிந்து கொண்டேன்.

பூச்சிக் கொல்லி மருந்துகள் மனிதனுக்கு தீங்கு தரக்கூடியவை. ஆடாதொடை, பிரண்டை, எருக்கஞ்செடிஉள்ளிட்ட சில மூலிகைகளைப் பசுவின் கோமியத்தில் நன்றாக ஊற வைத்து, கரைசலை உண்டாக்கி பூச்சி விரட்டியைத் தயாரித்தேன். அதையே பூச்சிக் கொல்லிக்குப்பதிலாக இப்போது வயல்களில் தெளிக்கிறேன்.

சிறு தானியங்களை முதலில் வயலில் விதைத்து, அவை ஒரளவு வளர்ந்த பின், அதையே மடித்து, உழுது வயலில் கலக்கச் செய்கிறேன். சிலநாட்களில் அவை உரமாகிவிடுகிறது. அப்படி உழுத வயலில் நெற்பயிர்களைப் பயிரிடுகிறேன்.

எந்த நெல் பயிரையும், எந்த ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி மருந்தோ பயன்படுத்தாமல் வளர்ப்பதால், இயற்கை முறையில் வேளாண்மை செய்வதால் மனித உடல் நலம், மண்வளம் பாதுகாக்கப்படும். பாரம்பரிய நெல் ரகங்களின் அரிசிகளை உணவாகச் சாப்பிடும் போது எளிதில் ஜீரணமாகும்; மலச்சிக்கலை நீக்கும்; நரம்புகளைப் பலப்படுத்தும். கருப்புக்கவுனி அரிசி சர்க்கரை நோய்க்கும் நிவாரணி, நரம்புகளையும், உடலையும் வலுவாக்குகிறது. மாப்பிள்ளைச் சம்பா அரிசி பற்களையும், இதயத்தையும் வலுவாக்கி, தோல் நோய்களையும் குணப்படுத்துகிறது. தங்கச்சம்பா அரிசி விஷக்கடிகளுக்கும், தோல் வியாதிகளுக்கும் சிறந்தது. இப்படியாக ஒவ்வோர் அரிசியும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.

நாங்கள் உற்பத்தி செய்யும் நெல் ரகங்களின் அரிசிகளை உயர் அதிகாரிகள் முதல் சாதாரண மக்கள் வரை நேரில் வந்து வாங்கிச் செல்கிறார்கள். பாரம்பரிய நெல் விவசாயம் செய்தால் அவை விற்பனை ஆகாமல் இழப்பு ஏற்பட்டுவிடுமோ என்று யாரும் பயப்படத் தேவையில்லை. தேவைப்படும் அளவுக்கு உற்பத்தி செய்ய எங்களால் தற்போது இயலவில்லை. தேவையான வேலையாள்கள் கிடைப்பதுதான் கடினமாக இருக்கிறது. பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயம் செய்ய முன்வரக் கூடிய இளைஞர்களுக்கு எப்படி விவசாயம் செய்வது என்று சொல்லித் தரவும் தயாராக இருக்கிறேன். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் கற்றுத் தர தயாராக இருக்கிறேன்'' என்றார்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT