இளைஞர்மணி

வெற்றிக்கு அடிப்படை... நல்ல மனிதனாக இருப்பது!

19th Jan 2021 06:00 AM | - ந.ஜீவா

ADVERTISEMENT


தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனித வாழ்க்கையைப் பல்வேறுவிதங்களில் மாற்றி அமைத்துவிட்டது. கரோனா தொற்று ஏற்பட்டதால் வெளியே செல்ல முடியாமல் பலர் வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய சூழல். ஆனால் அப்படி முடங்கிக் கிடக்காமல் பலர் தங்களைப் புதிய வடிவங்களில் வெளிப்படுத்திக் கொண்டனர்.

யூ டியூப் சேனல்களைத் தொடங்கி நடத்தினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் பல யூ டியூப் சேனல்கள் தொடங்கப்பட்டன.

இல்லத்தரசிகள் பலர் யூ டியூப் சேனல்களைத் தொடங்கி சமையல் கலை நிபுணர்களாக உலா வரத் தொடங்கினார்கள். அது தொடர்பான தகவல்களை பல சமூக ஊடகங்களிலும் பரப்பி விளம்பரமும் செய்தார்கள். எதிர்பார்த்த வருமானம் எல்லாருக்கும் கிடைக்கவில்லை என்பதால், தொடங்கிய யூ டியூப் சேனல்களுக்குச் சொல்லாமலேயே மூடுவிழா நடத்தி வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றவர்களும் அதிகம்.

கரோனா தொற்று ஏற்பட்டு இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியபோது, அப்போதைய தனது ஒரு மாத வருமானமான 10 லட்சம் ரூபாயை பிரதமரின் நிவாரண நிதி திட்டத்துக்காக புவன் பாம் என்ற இளைஞர் அளித்தார். கரோனா தொற்று ஏற்பட்ட அப்போது, ஒரு மாதத்தில் ரூ.10 லட்சம் வருமானம் வரும் அளவுக்கு அவர் செய்தது யூ டியூப் சேனல் நடத்தியதுதான். "பிபி கி வைன்ஸ்' என்ற அவருடைய யூ டியூப் சேனலின் சந்தாதாரர்களாக 20 லட்சம் பேர் இருக்கின்றனர். யூ டியூப் சேனல் நடத்துவதன் மூலமாக சம்பாதிக்கிற அந்த 26 வயது இளைஞருடைய தற்போதைய சொத்து மதிப்பு ரூ.22 கோடி. இந்தத் துறையில் மிக அதிகம் சம்பாதிக்கும் நபர்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.

ADVERTISEMENT

புவன் பாமின் சொந்த ஊர் குஜராத் மாநிலத்தின் வதோதரா. எல்லாப் பெற்றோர்களும் நினைப்பதைப் போலவே, அவருடைய பெற்றோரும் புவன் பாம் நன்கு படித்து பட்டம் வாங்கி, நல்ல வேலையில் அமர்ந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றே நினைத்தனர்.

படிப்பில் அவ்வளவாக புவன் பாமுக்கு ஆர்வமில்லை. வேறுவழியின்றி பெற்றோரின் விருப்பத்துக்காக புதுதில்லியில் உள்ள ஷாகித் பகத்சிங் கல்லூரியில் பட்டப் படிப்பில் சேர்ந்தார். என்றாலும் பட்டப்படிப்பின் முதல் ஆண்டிலேயே அவருடைய சொந்த விருப்பப்படி நடக்கத் தொடங்கினார்.

புவன் பாமுக்கு பாடுவதில் ஆர்வம். பாடகராகி புகழ் பெற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவருடைய குடும்பம் அவரைப் பாடக் கூடாது என்று தடுத்தது. அதனால் யூ டியூப் சேனல்களின் மூலம் இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார்.

முதன்முதலாக ஒரு பாடலைப் பாடி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்தப் பாடலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "ஃபாக்ஸ் ஸ்டார் கம்பெனி' ஒரு பாடலைப் பாடுவதற்கு அவருக்கு அழைப்பு விடுத்தது. புவன் பாம் மிகுந்த ஆர்வத்துடன் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பத்துநாள்களில் ஏழு பாடல்களை அந்த நிறுவனத்துக்காகப் பாடினார். எனினும் அவர் பாடியது அந்த நிறுவனத்துக்குத் திருப்தி அளிக்கவில்லை. அதனால் பாடுவதை நிறுத்திக் கொண்டார்.

""எதற்காகவும் எந்தப் பயனுமின்றி நம் விருப்பத்துக்கு மாறாக யாருக்கும் வேலை செய்யக் கூடாது என்பதை நான் முதலில் தெரிந்து கொண்டது அப்போதுதான்'' என்கிறார் அவர்.

புவன் பாம் ஒரு செல்போனை வாங்கினார். அதனுடைய செல்ஃபி எடுக்கும் திறனைத் தெரிந்து கொள்ள ஒரு குறும்புத்தனமான விடியோவை எடுத்தார். அதை தனது "பிபி கி வைன்ஸ்' யூ டியூப் சேனலில் வெளியிட்டார். ஆனால் அந்த விடியோவுக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் சோர்ந்துவிடவில்லை.

தொடர்ந்து பல குறும்புத்தனமான விடியோக்களை எடுத்து தனது யூ டியூப் சேனலில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அவருடைய நண்பர்கள் பலர் அவர் வெளியிட்டுள்ள விடியோக்கள் நன்றாக இல்லை என்றனர். எதற்கு வீண் வேலை என்றனர்.

புவன் பாம் அதனாலெல்லாம் சோர்ந்துவிடவில்லை. அவர் நான்காவதாக வெளியிட்ட விடியோவுக்கு 15 பேர் லைக் போட்டார்கள். அது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர் வெளியிட்ட விடியோவைப் பலர் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதே அதற்குக் காரணம்.

அதற்குப் பிறகு அவர் வெளியிட்ட பல விடியோக்கள் லைக்குகளை அள்ளிக் குவித்தன. அவருடைய குறும்புத்தனமான விடியோ ஒன்று பாகிஸ்தான் யுனிவர்சிடியில் வைரலானது. புவன் பாமுவுக்கோ இந்தியாவில் தனது விடியோக்கள் வரவேற்பைப் பெற வேண்டும் என்பதே விருப்பம். சில நாட்களிலேயே அவருடைய விருப்பம் நிறைவேறியது. இந்தியாவில் அவர் வெளியிட்ட விடியோக்கள் பலராலும் பார்க்கப்பட்டன. அவர் பிரபலமான யூ டியூப் பிரமுகராகிவிட்டார்.

புவன் பாம் "பிளஸ் - மைனஸ்' என்ற ஒரு குறும்படத்தை எடுத்தார். 18 நிமிடங்கள் ஓடும் அந்த குறும்படத்தில் திவ்யா தத்தா நடித்திருந்தார். அது "ஃபிலிம் ஃபேர்' விருதை வென்றது. பலரால் ரசிக்கப்பட்ட குறும்படமாக அது பிரபலமடைந்தது.

புவன் பாமின் "பிபி கி வைன்ஸ்' யூ டியூப் சேனலின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2017 - ஆம் ஆண்டிலேயே 20 லட்சத்தைத் தாண்டிவிட்டது. தற்போது அவர் வெளியிட்டுள்ள விடியோக்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 500 லட்சமாக உயர்ந்திருக்கிறது. அதனால் அவருடைய மாத வருமானம் ரூ. 25 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.

யூ டியூப் சேனலில் வெளியிடப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை கூகுள் நிறுவனம் அந்த யூ டியூப் சேனலை உருவாக்கியவர்களுக்குத் தருகிறது. யூ டியூப் சேனலைப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க விளம்பரங்களைப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதனால் அதிக வருமானம் யூ டியூப் சேனலை நடத்துகிறவர்களுக்குக் கிடைக்கிறது. ஒரு லட்சம் பேர் ஒரு யூ டியூப் சேனல் வெளியிட்டுள்ள விடியோவைப் பார்த்தால், அந்தச் சேனலை நடத்துகிறவருக்கு கிட்டத்தட்ட ரூ.2500 தரப்படுகிறது. புவன் பாமின் மாத வருமானம் ரூ.25 லட்சத்தை எட்டிவிட்டது என்றால் அவருடைய யூ டியூப் சேனலை எவ்வளவு பேர் பார்த்திருப்பார்கள் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள்.
இவ்வளவுபேர் பார்க்க அவர் என்ன செய்தார்?

அவர் வெளியிட்டுள்ள விடியோக்கள் மிகவும் சிந்திக்கக் தூண்டுபவை அல்ல. சிரிக்க வைப்பவை; குறும்புத்தனமானவை. அவருடைய விடியோக்களில் ததும்பும் நகைச்சுவை உணர்வுகளுக்கு அவர் அதில் அளிக்கும் இசை உயிர்ப்பூட்டுவதாக உள்ளது. நகைச்சுவையின் ஊடே அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் பலரையும் ஈர்க்கின்றன. இவைதான் அவருடைய வெற்றிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

""மனித உறவுகளைப் பற்றியே நான் எப்போதும் என் ரசிகர்களிடம் விடியோக்களின் மூலமாகப் பேசிக் கொண்டு இருக்கிறேன். அதனால் ரசிகர்கள் என் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறார்கள். என் குறும்புத்தனமான பதிவுகளில் இருந்து என் முதிர்ச்சியான தன்மையை அவர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். பிபி கி வைன்ஸ் கேமரா மூலமாக நான் காட்டிய காட்சிகள், கதாபாத்திரங்களின் மூலமாக, ஒரு நல்ல மனிதனாக நான் இருப்பதை அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். அதனால்தான் எனக்கு ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். எந்த வெற்றிக்கும் அடிப்படை ஒரு நல்ல மனிதனாக நாம் இருப்பதிலேயே உள்ளது'' என்கிறார் புவன் பாம்.

அவர் தற்போது நிறையப் பாடல்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறார். பாடல்களுக்கான வங்கியை ஏற்படுத்துவதே அவருடைய நோக்கம்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT