இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 32: மீளிணக்கத் திறன் - 2

19th Jan 2021 06:00 AM | சுப. உதயகுமாரன்

ADVERTISEMENT

 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதலாளித்துவம் போற்றிய அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், பொதுவுடமை போற்றிய சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குமிடையே நடந்த பனிப்போர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். 

ஏராளமான அணு ஆயுதங்களோடும், சக்திவாய்ந்த ஏவுகணைகளோடும், நவீன போர்க்கருவிகளோடும் முறைத்துக் கொண்டிருந்த இவ்விரு தரப்பும், நேரடியாக மோதிக் கொள்ளாமல் ஆதரவு நாடுகளில் மறைமுகமாக அடித்துக் கொண்டார்கள்.

அப்படி அனல் பறக்கும் யுத்தங்களாக வடிவெடுத்த பனிப்போர் சண்டைகளுள் ஒன்றுதான் வியட்நாம் போர். கடந்த 1955-ஆம் ஆண்டு முதல் 1975 வரையிலான பத்தொன்பது ஆண்டு காலகட்டத்தில் இந்தப் போர் நடந்தது.

ADVERTISEMENT

காலனியாதிக்க பிரெஞ்சுக்காரர்கள் 1954-ஆம் ஆண்டு வியட்நாமை விட்டு வெளியேறியபோது, கம்யூனிச வட வியட்நாம், சனநாயக தென் வியட்நாம் என்று அந்நாடு பிரிக்கப்பட்டது. அமெரிக்கா தென் வியட்நாம் நாட்டுக்கு ஆயுதங்களும், பயிற்சியும், நிதியுதவியும் அளித்தது. சோவியத் ஒன்றியமும், சீனாவும் வட வியட்நாமை ஆதரித்தன. வட வியட்நாமின் ஆதரவுடன் "வியட் காங்' எனும் கொரில்லாப்படை தென் வியட்நாமில் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடியது.

டிராங் பாங் எனும் தென் வியட்நாம் நாட்டிலிருந்த ஒரு குக்கிராமத்தை வட வியட்நாமியப் படைகள் தம் வசமாக்கியிருந்தன. அந்த கிராமத்தை மீண்டும் பிடித்தெடுக்கும் நோக்கத்துடன் ஜூன் 8, 1972 அன்று தென் வியட்நாமின் விமானப்படை குண்டுவீசித் தாக்கியது. அவை சாதாரண குண்டுகள் அல்ல, நேபாம் குண்டுகள். நேபாம் என்பது பெட்ரோலைக் கடினப்படுத்தி, அதனுடன் சில இடுபொருட்களைச் சேர்த்து, வெள்ளை பாஸ்பரஸ் போன்றவற்றுடன் கலந்து உருவாக்கப்படுவது. அது தோலோடு ஒட்டிக் கொண்டு, நீடித்து எரியும் தன்மை வாய்ந்தது. இந்தக் கொடூரமான நேபாம் குண்டுகளை அமெரிக்கா முப்பது ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தது.

ஒரு கோயிலில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களும், தென் வியட்நாம் படையினரும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து  தப்பித்து ஓடும்போது, தென் வியட்நாம் விமானங்கள் எதிரிகள்தான் ஓடுகிறார்கள் என்று தவறாகக் கருதி தன் மக்கள் மீதே நேபாம் குண்டுமழை பொழிந்தது.

அப்படி தப்பி ஓடியவர்களில் கிம் பூக் எனும் ஒன்பது வயது சிறுமியும் இருந்தாள். தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருவரும் இன்னும் சிலரும் உயிரிழந்த சூழலில், சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்த தனது உடைகளைக் கழற்றி எறிந்துவிட்ட நிலையில், முழு நிர்வாணமாக, பெரும் தீக்காயங்களுடன் ""எரியுது, எரியுது'' என்று கூக்குரலிட்டவாறே கிம் பூக் ஓடிக்கொண்டிருந்தாள். ஒற்றைக் கண்ணை இழந்துவிட்ட அவளது தம்பியும், படுகாயமடைந்த இன்னொரு கடைக்குட்டித் தம்பியும், சில உறவுக்காரக் குழந்தைகளும் அவளோடு சேர்ந்து உயிரைக் காக்க ஓடினர்.

இந்த படுபாதகத்தை, மாபெரும் அவலத்தைக் கண்டு அதிர்ந்துபோன நிக் உட் எனும் இருபது வயது வியட்நாமிய அமெரிக்கப் புகைப்பட நிபுணர் அந்த காட்சியைப் படம்பிடித்தார்.

"நியூ யார்க் டைம்ஸ்' நாளிதழ் அந்தப் படத்தை முதற்பக்கத்தில் பிரசுரித்து, நேபாம் குண்டுவீச்சுக் கொடுமையை உலகின் கவனத்துக்குக் கொணர்ந்தது.

படம் பிடித்த  கையோடு, அந்த இளம் புகைப்படக்காரர் கிம் பூக் உள்ளிட்ட குழந்தைகளை சைகான் நகரிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு இட்டுச்சென்றார். கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்த கிம் பூக் பிழைப்பதற்கு வாய்ப்பேயில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பதினான்கு மாதங்கள் அந்த மருத்துவமனையில் தங்கியிருந்த கிம் பூக், பதினேழு அறுவை சிகிச்சைகள் செய்துகொண்ட பிறகு, தோல்மாற்று சிகிச்சையும் பெற்ற பின்னர் ஆறாத ரணங்களோடு, ஆற்றுப்படுத்தப்பட முடியாத வேதனைகளோடு வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய மகளிடம் வியட்நாம் பத்திரிகை ஒன்றிலும் வெளிவந்திருந்த அந்தப் படத்தை அவளது அப்பா காட்டினார். ""எனக்கு மிகவும் கேவலமாக இருந்தது. அந்த தருணத்தில் அந்தப் படத்தை எடுத்திருக்கக் கூடாது என்று தோன்றியது. நான் நிர்வாணமாக அழுதுகொண்டிருந்த படம் மோசமானதாக இருந்தது'' என்று பின்னொருநாளில் கருத்துத் தெரிவித்தார் கிம் பூக்.

நிக் எடுத்த அந்தப் படம் மனித மனசாட்சியை உலுக்கியது. ஆடைகளைத் துறந்து, அழுகையும் அவலமுமாக கிம் பூக்கும் மற்ற குழந்தைகளும் ஓடும் காட்சியைப் பார்த்தவர்கள், தங்கள் தோலே தீப்பற்றி எரிவதைப் போன்று உணர்ந்தார்கள். வேக வேகமாக இயங்கிய ஐ.நா. மன்றம், மனிதர்களை எரித்தழிக்கும் ஆயுதங்களை உடனடியாகத் தடைசெய்தது.

ஆனால் கிம் பூக்கின் துன்பங்கள் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தன. பத்தாண்டுகளுக்குப் பிறகு 1982-ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனி நாட்டிலிருந்த சிறப்பு மருத்துவமனை ஒன்றில் கூடுதல் சிகிச்சைப் பெற்றார் கிம் பூக். நீண்ட நெடிய சிகிச்சைக்குப் பிறகுதான் அவரால் சாதாரணமாக எழுந்து நடமாட  முடிந்தது.

இத்தனை துன்பங்களை, துயரங்களை, தொடர் வேதனைகளை அனுபவித்த அந்த பதின்வயதுப் பெண் குழந்தை எவ்வளவு கோபத்துக்கும், வெறுப்புக்கும், வன்மத்துக்கும், வன்முறை உணர்வுகளுக்கும் ஆளாகியிருக்க வேண்டும்? ஆனால் கிம் பூக் அப்படி உணரவில்லை. அதுதான் மீளிணக்கத் திறன்.

""நாமெல்லாம் அன்போடும், நம்பிக்கையோடும், மன்னிக்கும் திறனோடும் வாழப் பயின்றால், இந்த உலகம் எத்தனை அழகானதாயிருக்கும்?'' என்று கேட்டார் கிம் பூக் ஒரு பத்திரிகை  பேட்டியில். 

""இந்தப் புகைப்படத்திலிருக்கும் இந்தச் சிறுமி அதைச் செய்ய முடிந்தால், அனைவராலும் அதனைச் செய்ய முடியும். சிறந்த நண்பர்களாக, சிறந்த மனிதர்களாக இருக்கும் வாய்ப்பு ஒவ்வொரு நாளும் நமக்கு அமைகிறது. நம்மால் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும்'' என்றார் கிம் பூக். தற்போது தனது குடும்பத்துடன் கனடா நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கிம் பூக், அண்மையில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். தீப்பாதை: போர்க்கொடுமைகளின் ஊடாக நம்பிக்கை, மன்னிப்பு, சமாதானம் நோக்கிச் செல்லும் நேபாம் சிறுமியின் பயணம்' எனும் அந்தப் புத்தகம் 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ஆம், மீளிணக்கம் என்பது ஒரு பயணம். 

தகராறு கட்சிகளின் உறவை மீட்டெடுக்கும், மறுசீரமைக்கும், மறுமலர்ச்சி கொள்ளச் செய்யும் ஓர் இலட்சியப் பயணம். மருத்துவ சிகிச்சையில் நடப்பது போலவே, துன்புறுத்தும் நோயை முடிவுக்குக் கொணர்ந்து, அதை நிரந்தரமாகக் குணமாக்கும் ஒரு கடினமான  பயணம்.

நேரடி மீளிணக்கம் என்பது எதிர்த்தரப்பையும் சேர்த்துக் கொண்டு நெஞ்சிணைவது. மறைமுக மீளிணக்கம் என்பது எதிர்த்தரப்பை இணைத்துக் கொள்ளாத நிலையிலும், கிம் பூக் செய்வது போல, தன் நெஞ்சோடு இணங்கி தனக்குள்ளேயே சமாதானம் ஏற்படுத்திக் கொள்வது.

மீளிணக்கம் என்பது சரணடைவதோ அல்லது சமரசம் செய்து கொள்வதோ அல்ல. மாறாக, தகராறுக்குப் பின்பான உறவு நிலையில் சனநாயகம், சகவாழ்வு, சமூக நீதி போன்ற விழுமியங்களோடு வாழ்வதென  தீர்மானித்துக் கொள்ளும் ஒரு சமூக ஒப்பந்தம் அது.

சேர்ந்து வாழ வேண்டியிருப்பவர்களோடுதான் மீளிணக்கம் செய்து கொள்கிறோம். 

கவனமாய்க் கேட்கும் திறனும், கருத்தாழமிக்க அறிதலும், உறவுகளை மீட்பதில் உண்மையான ஈடுபாடும், உளப்பூர்வமான உறுதிப்பாடும் உடையவர்கள் மத்தியில்தான் மீளிணக்கம் செம்மையாக நடக்கிறது. அதற்கு தார்மீகத் திடமும், வெளிப்படைத்தன்மையும், தெளிவான  பார்வையும், ஏராளமான  பொறுமையும் தேவைப்படுகின்றன.

மீளிணக்கத்தின் மூலம் ஒரு புதிய அரசியல் சமூகத்தைக் கட்டமைக்கவும், ஒரு புதிய சமாதான மொழியைப் பேசவும், கருணைமிக்க சிந்தனைகளை வளர்த்தெடுக்கவும், மறக்கும் தன்மை, 

மன்னிக்கும் இயல்பு போன்றவற்றை வளர்த்தெடுக்கவும், ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கவும் தகராறு கட்சிகள் கடிதில் முயற்சிக்கின்றனர்.

டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொல்வது போல, ""பழமைக்கும் புதுமைக்கும் இடையே, நீதிக்கும் அநீதிக்கும் இடையே தகராறுகள் தோன்றுகின்றன. இவை முரண்பாடுகளை வாழ்வின் இன்றியமையா அங்கங்களாக மாற்றுகின்றன. ஒரு தகராறை ஆபத்தாக இருக்கும் நிலையிலிருந்து வாய்ப்பாக மாறும் திசை நோக்கிச் செலுத்துவது மாந்தநேயம்தான். அதுதான் மீளிணக்கம்''.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT