இளைஞர்மணி

முகநூலில் இனி "லைக்' இல்லை!

19th Jan 2021 06:00 AM | அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

 

முகநூலில் புகைப்படங்களையும், கருத்துகளையும் பதிவு செய்து ஏராளமான "லைக்'குகள் பெறவேண்டும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பாகும். இதற்காக சிலர் சாகச செல்ஃபி மோகத்தில் உயிரையே விட்டுவிடுகிறார்கள். 

பிரபலங்களோ தங்களின் முகநூல் பதிவுகளில் ஏராளமான "லைக்'குகள் பெறுவதை கௌரவமாக எண்ணி போட்டா போட்டி போடுகின்றனர். சிலர் "லைக்'குகளை அதிகரிக்க பணத்தையும் செலவிடுகின்றனர். இவற்றைத் தடுக்க பிரபலங்களின் பொது  பக்கங்களில் "லைக்' பொத்தானை நீக்க  முகநூல் முடிவு செய்துள்ளது. நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும், விளம்பரங்களிலும் இந்த "லைக்'-ஐ நீக்கி விட்டு பின்பற்றுபவர்கள் (ஃபாலோவர்ஸ்) என்பதை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இத்துடன் சேர்த்து பல்வேறு புதிய மாற்றங்களுடன் முகநூல்  பக்கம் முழுவதும் மாற்றியமைக்கப்படும் என்று  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் எத்தனை ரசிகர்கள் தங்களைப் பின்தொடர்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். பிரபலங்களுடன் ரசிகர்கள் உரையாடவும், அந்த உரையாடல்களைப் பின்பற்றுபவர்கள் "நியூஸ் ஃபீட்' எனும் தங்களுடைய குழு தகவல்களில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

மேலும், பின்பற்றுபவர்களிடம் இருந்து கேள்விகளையும் பிரபலங்கள் எடுத்து பதிலளிக்கவும் புதிய சேவை வழங்கப்பட உள்ளது. 

"டிரன்டிங்'காகும் விவகாரங்களுக்கு "நியூஸ் ஃபீட்'களில் முன்னுரிமை அளித்து அவரவர்களுக்குக் காண்பிக்கப்படும்.

பொது, தனி என்ற சுயவிவரங்களில் இருந்து முகநூல் பக்கங்களுக்குள் பயன்பாட்டாளர்கள் எளிதாக நுழையும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரபலங்களின் கணக்குகளைப் பிறர் கையாளும் போது சர்ச்சைக் கருத்துகளுக்கு "அட்மின்'தான் பொறுப்பு என்ற பிரச்னை எழுகிறது. இதைத் தடுக்க, வாட்ஸ் அப் அட்மின்களுக்கு புதிய அதிகார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரபலங்கள் தங்களது பக்கத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக அல்லாமல் பாதியாக அட்மின்களிடம் அளிக்க முடியும்.

மேலும், வெறுப்பைத் தூண்டும் கருத்துகள்,  வன்முறை, போலி தகவல்கள் போன்றவற்றைக் கண்காணித்து தடுக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளதாகவும், இந்த புதிய மாற்றங்கள் பயன்பாட்டாளர்களுக்கு மேலும் எளிமையானதாக இருக்கும் என்றும் முகநூல் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. 

இந்த புதிய மாற்றங்கள் வரும் மாதங்களில் ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT