இளைஞர்மணி

கடிகாரம் ஓடுதே...  வேலையும் கூடுதே!

கே.பி. மாரிக்குமார்

இந்த உலகத்தை வெல்வதை விட,
உங்களை முதலில் வெல்லுங்கள்.

- ரெனே டெஸ்கார்ட்டஸ்

"வேலைகள் குவிந்து கிடக்கு. நேரமேயில்லையே' என்கிற அங்கலாய்ப்பை அதிகம் கேட்டிருப்போம். ஏன், நாமே பேசியுமிருப்போம். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பது எங்கேயும், எப்போதும், எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அப்புறம் யாருக்கு, எதற்குத்தான் இந்த அங்கலாய்ப்பு?

துருக்கி நாட்டு கதை ஒன்றை சமீபத்தில் கேட்டேன். அந்நாட்டு மன்னன் ஒருவன் வேட்டைக்குச் சென்றானாம். வேட்டையாடுவதில் திளைத்துப் போன மன்னன் நேரம் கடந்து போனதையே கவனிக்கவில்லை. சூரியன் மறைந்து மாலை மங்கி இரவு ஆகிவிட்டதால், மன்னனால் அரண்மனைக்குத் திரும்ப முடியவில்லை. வழியில் இருந்த ஒரு நெசவாளரின் வீட்டில் மன்னன் தங்கினானாம். அந்த நெசவாளருக்கு தன் வீட்டிற்கு வந்து தங்கியிருப்பவர் நாட்டின் மன்னன் என்று தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என்று எண்ணியிருந்தான்.

அரசன் காலையில எழுந்தபோது, நெசவாளி நூல் நூற்றுக் கொண்டிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்து. ""அந்தக் கயிறு எதற்கு?'' என்று அரசன் கேட்டதற்கு, ""தொட்டியில் இருக்கிற குழந்தைய ஆட்டுறதுக்கு. குழந்தை அழுதுச்சுன்னா... நெய்துக்கிட்டே குழந்தைய ஆட்டிவிடுவேன்'' என்று நெசவாளி சொன்னானாம். அவனருகில் ஒரு நீண்ட குச்சி ஒன்று இருந்தது.

""இது என்ன குச்சி?'' என்று மன்னன் கேட்டானாம். ""வெளியில என் மனைவி தானியங்களைக் காயப்போட்டிருக்கா. இந்தக் குச்சியின் அடுத்த முனையில கருப்புத் துணிய நான் கட்டியிருக்கேன். இதை அசைச்சா பறவைகள் பக்கத்தில வராது'' என்று நெசவாளன் சொன்னானாம்.

அந்த நெசவாளர் இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ""இது எதுக்குப்பா?'' என்று மன்னன் கேட்க, ""வீட்டுல ஒரு எலி இருக்குது, அப்பப்ப இந்த மணிகளை அசைச்சா அந்த சத்தத்தில எலி ஓடிரும்'' என்றானாம். அவன் வீட்டு ஜன்னலுக்கு வெளியே நான்கைந்து சிறுவர்கள் முகம் தெரிந்தது. ""அவர்கள் யார்?'' என்று மன்னன் கேட்டபோது, ""நெசவு செய்யிறப்ப வாய் சும்மாதான இருக்குது. அதனால எனக்குத் தெரிஞ்ச பாடங்களை அந்த சிறுவர்களுக்கு நடத்துவேன்'' என்றானாம். ""சரி, அதுக்கு அவங்க எதுக்கு வெளியில நிற்கிறாங்க'' என்று மன்னன் கேட்க, ""வீட்டுக்கு முன்னால இருக்கிற மண்ணை காலால குலைச்சுகிட்டே... காதால என் பாடத்தை கேட்டுக்குவாங்க'' என்றானாம். ""அது மட்டுமில்ல, என் மனைவி கிரேக்கத்துப் பெண். அவள் தினமும் எனக்கு பத்து கிரேக்க வார்த்தைகளை ஒரு தாளில் எழுதி தந்துவிட்டு செல்வாள். என் வேலைகளை செய்துகிட்டே அதையும் படிக்கிறேன்'' என்று சொன்னானாம். வியந்து போனான் மன்னன்.

ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்துல கற்றுத்தரவும், கற்றுக்கொள்ளவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்கவும் முடியம். கவனமான கடின உழைப்பு எப்போதுமே பலன் தரும். வயதும், இளமையும் இருக்கின்றபோது வருகின்ற வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழிக்காமல் பணியாற்றும், எந்தவொரு மாணவனும், இளைஞனும் அவனது நடுத்தர வயதுகளிலேயே உச்சம் தொட்டிருப்பான். இதுவே வாழ்வின் நியதி.

"நேரமே இல்லை' என வேலைகளை ஒத்திப்போடுதல் ஒரு மாயை. அது எப்படி... சுறுசுறுப்பானவர்களுக்கு மட்டும் நேரம் இருந்து கொண்டே இருக்கிறது? சோம்பல் உள்ளவர்களுக்கு சோம்பல் முறிக்கவே நேரம் இருக்காது. ஒரு காரியத்தை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று கடமையில் இருந்து நழுவுகிறவர்கள் சோம்பலால் மடிகிறார்கள். பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டு விட்டு, அதை முடிக்க முடியவில்லையே என்று மனதால் அலட்டிக் கொள்ளாமல், உரிய காலத்தில் பணிகளை முடித்து மனதுக்குப் பூரண ஓய்வு கொடுத்து, அடுத்த வேலைக்குத் தயாராகின்ற சுறுசுறுப்பு மந்திரமே வெற்றிக்குத் துணை செய்யும்.

அறிஞர் எமர்சனை பார்த்து ஒருவர் கேட்டாராம், ""உங்கள் வயது என்ன?'' என்று. ""360 ஆண்டுகள்'' - இது எமர்சனின் பதில். ""என்னால் நம்ப முடியவில்லை. இது இயலாத காரியம். உங்களுக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்காது'' என்று கேள்வி கேட்டவர் அலறினார். எமர்சன் சொன்னார்: ""நீங்கள் சொல்வது சரிதான். எனது உண்மையான வயது அறுபதுதான். ஆனால் உங்களைவிட 6 மடங்கு அதிகமாக வாழ்ந்திருக்கிறேன். 360ஆண்டுகள் எப்படி வாழ முடியுமோ, அவ்விதம் இந்த 60 ஆண்டுகளைப் பயன்படுத்தி இருக்கிறேன்'' என்றாராம். நாம் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நாம் நமது நேரத்தை உழைப்பில் விதைக்க, ஒவ்வொரு நாளின் பணிகளையும் முந்தைய நாளே திட்டமிட்டுக் கொள்வது சிறப்பு. செய்வதற்கு வேலைகள் இருந்தால் மனம் எப்போதும் சுறுசுறுப்போடும், உற்சாகத்தோடும் தானே இருக்கும்? உண்மையான பரவசம் என்பது ஒரு வேலையை ஈடுபாட்டோடு, துரிதமாக, சரியாகச் செய்வதுதான். இதுவே உற்சாகம். படைப்பாளி, ஆராய்ச்சியாளர், தொழில்முனைவோர் மற்றும் விற்பனையாளர்களின் மந்திரமூலிகை இதுதான். ஒருவர் அதிக நேரம் தூங்குவது தேவையினால் அல்ல. பழக்கத்தினால்தான். துôங்கும் நேரத்தை வரையறை செய்து வெற்றி பெற்று வரலாறு படைத்தவர்கள் ஏராளம்.

வேலைப்பளுவும், வேலைகளின் எண்ணிக்கையும், பொறுப்புகளும் கூடக் கூட, மிரண்டுபோய், அயர்ச்சியில் நேரமில்லை என்று பேசும் வெட்டிப் பேச்சுகள், ஒரு நாளைக்கு "24 மணிநேரம்' என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களின் மடமைக் கூற்று.வேலைகள் அதிகரிக்கின்றபோது, கடிகாரம் நிற்காது. கடிகாரத்தோடு ஓடிக்கொண்டே நாமும் நம் பணிகளைத் துரிதபடுத்த... நமக்கான நேரமும் கூடுதலாகும் என்கிற இரகசியம் அறிந்துகொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT