இளைஞர்மணி

ஆ‌க்​க‌ப்​பூ‌ர்​வ​மாக மா‌ற்​று‌ங்​க‌ள்!

ந.முத்துமணி

கரோனா தீநுண்மி பெருந்தொற்று தந்திருக்கும் துன்பங்கள், கவலைகள், அச்சங்கள் மனித மனங்களில் தடுமாற்றத்திற்கு வித்திட்டுள்ளன. இதில் இருந்துவிடுபட பெரியவர்களே சிரமப்படும்போது, இளம் வயதினரின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் மனக்குழப்பங்கள் இளம் வயதினரிடையே பல்வேறு உணர்ச்சிகள் ஏற்பட காரணமாக உள்ளன. உணர்ச்சிகளின் பெருவெள்ளத்தில் உடைந்துபோகாமல், ஆக்கப்பூர்வமான பேராற்றலாக அவற்றை மாற்றுவது அவசியம். 

உணர்ச்சிகளின் பேராற்றல்:

நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பெரியவர்களைக் காட்டிலும், இளம் வயதினரின் மனதில் அழுத்தமான பல எண்ணங்கள் எழும். கரோனா போன்ற சிக்கலான காலகட்டங்களில் மனநலக்குறைவு ஏற்படும்போது, இதுபோன்ற எண்ணங்கள் பன்மடங்காகப் பெருகும். இவற்றில் இருந்து விடுபடுவதற்கு மகிழ்ச்சியான, இன்பம் தரக்கூடிய தருணங்கள் உறுதுணையாக இருக்கும். மகிழ்ச்சி தரக்கூடியவை, சின்னஞ்சிறு விஷயங்களாக இருக்கின்றன. இது பெரியவர்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியைத் தராது. இளம் வயதினருக்கோ சின்னச்சின்ன விஷயங்கள் கூட இன்பம் தரக்கூடியவையாகவும், குதூகலத்தை ஏற்படுத்தக்கூடியவையாகவும் இருக்கும். எனவே, மனதிற்கு எழுச்சி தேவைப்படும்போது, உணர்ச்சிகளின் பேராற்றலை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தவறக்கூடாது.

எவற்றை செய்யும்போது, மனம் எழுச்சி அடைகிறது என்பது தனிப்பட்ட அனுபவத்தைச் சார்ந்தது. காலார நடப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவது, இசையில் மூழ்குவது, இயற்கைசூழ்ந்திருப்பது, வளர்ப்புபிராணிகளுடன் விளையாடுவது, வித்தியாசமான உணவைச் சுவைப்பது, வேடிக்கை பார்ப்பது, மிதிவண்டியில் சுற்றித்திரிவது...இப்படி எவற்றில் மகிழ்ச்சியும் இன்பமும் கிடைக்கிறதோ, அங்கு உணர்ச்சிகளின் பேராற்றலை அனுபவிக்கலாம். பார்த்த திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகளை திரும்பத் திரும்ப பார்ப்பதும் ஒருசிலரின்மன எழுச்சிக்கு வித்திடும். எதை செய்தாலும், மனதிற்கு இதமாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் இருந்தால் அதை செய்து கொண்டே இருக்கலாம்.

உணர்ச்சிகளை நம்புங்கள்:

கவலை, சோகம், நெருக்கடி, அழுத்தம், கோபம், உளைச்சல் அல்லது வேறு ஏதாவது ஏற்பட்டாலும், அது சரியான உணர்வு தான்  என்று நம்ப வேண்டும். கோபம் போன்ற விரும்பத்தகாத உணர்ச்சிகள் குறித்து தேவையில்லாமல் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.    உணர்ச்சிவசப்படுவது நொறுங்கிப் போகக் கூடிய மனநிலையின் அறிகுறியாகும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இது உண்மை அல்ல.  அந்த உணர்ச்சிகள் வலிமிகுந்ததாக இருந்தாலும், சூழ்நிலைக்குத் தகுந்ததாகவும், நடைமுறைக்கு உகந்ததாகவுமே பல நேரங்களில் இருக்கின்றன.

மனநிலை நன்றாக இருந்தால், அதையும் நம்புங்கள். உலகமே கொந்தளிப்பில் இருக்கும்போது, மனதில் எழும் எண்ணங்களுக்கு தகுந்தபடி இருப்பது நல்லதா? என்று குழப்பிக்கொள்ள தேவையில்லை. பெரும் சூறாவளிக்கு பிறகு தான் மனம் அமைதியை அடையும். அதனால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, அவற்றில் இருந்துவிலகியிருக்க முற்படாதீர்கள். சோகம், வேதனை, சங்கடங்களை அதன் போக்கில் ஏற்றுக்கொள்வதும், கடந்துசெல்வதும் தான் சரியானதாக இருக்கும்.

உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள்:

ஒரு சில நேரங்களில் விரும்பத்தகாத எண்ணங்களுக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்வோம். மின்கம்பியில் அதன் தாங்குதிறனை தாண்டி அளவுக்கு அதிகமாக மின்சாரம் கடத்தப்படும்போது, அது தன்னை தானே சுட்டுக்கொண்டு மின் கடத்தலை துண்டித்துக்கொள்ளும். அதுபோல தான் நமது உணர்ச்சிகளும். நம்மால் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு உணர்ச்சிகள் இருக்கும்போது அவற்றை அடக்கி வைக்க முயற்சிப்போம். முடியாதபோது வெடித்துவிடுவோம். கட்டுக்கடங்காமல் உணர்ச்சி வெடித்து கிளம்புவது, மனநலனை பேணுவதற்காக இயல்பாக நடக்கக் கூடிய பாதுகாப்பு நடவடிக்கையாகும். வலி நிறைந்த உண்மையை மனம் ஏற்க மறுத்தால், அது மனநலனை வெகுவாகப் பாதிக்கும். அந்தநிலையில், அழுது புலம்பி வலியின் உண்மைநிலையை உணர்ச்சிகளால் வெளிப்படுத்திவிட்டால், அது மனநலனுக்கு உறுதுணையாக இருக்கும். இதுபோன்ற நிகழ்வுகளின்மூலம், எவ்வளவு மோசமான நிலைமையையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையை பெற்று, உணர்ச்சிகளை சீராக்க உதவியாக இருக்கும். உணர்ச்சிகளை அடக்கி வைப்பது நல்லதல்ல, ஆள்வது சிறந்தது.

இணையவழி வகுப்புகளில் உட்கார்ந்துகொண்டிருப்பதால் ஏற்படும் கோபத்தைக் கட்டுப்படுத்த, சக மாணவர்களுடன் நகைச்சுவையைப் பகிர்ந்துகொள்ளலாம். கோபத்தை வெளிப்படுத்துவது போல, அதை மடைமாற்றி நகைச்சுவையாக மாற்றுவதும் ஒன்றுதான்.

இப்படி உணர்ச்சிகளைச் சீராக்கி, ஒழுங்குபடுத்துவதன் மூலம் இக்கட்டான காலகட்டத்தில் எளிதில் கடந்து செல்ல முடியும்.  

மனநலம் பேணல்:

மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு, நமது மனநிலையை மேம்படுத்திக்கொள்வதற்கு ஆழ்ந்த உறக்கமும், உடற்பயிற்சியும் உதவியாக இருக்கும். உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தக் கூடிய, உற்சாகமூட்டக் கூடிய சூழலில் நம்மை வைத்துக்கொள்ள வேண்டும். உணர்ச்சியை தூண்டக் கூடியவர்களிடம் இருந்துவிலகி இருக்கப் பழகுங்கள். மன ஆற்றலை சீராகப் பயன்படுத்துங்கள். மனக்கசப்புகள், ஆற்றாமைகள், சோகங்கள், சவால்கள் கடந்துபோகும். அதுவரை பொறுமை காப்பது அவசியமாகும். உணர்ச்சிகளின் பேராற்றலை தேக்கிவைத்து, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துங்கள். உங்கள் திறனுக்கு தகுந்த செயல்களில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். முடிந்ததைச் செய்யுங்கள், அது நம்பிக்கையை பலப்படுத்தும்.

அசாதாரண சூழ்நிலைகளைச் சமாளிப்பது அல்லது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவற்கு, பெற்றோர், மூத்தோர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகளின் ஆலோசனையை நாடலாம். உணர்ச்சிகளை ஆக்கவும் பயன்படுத்தலாம், அழிக்கவும் பயன்படுத்தலாம். உணர்ச்சிகளின் வலிமையைப் புரிந்துகொண்டு, அதை பேராற்றலாகப் பயன்படுத்தினால், நமது மனநலனை மட்டுமல்லாமல், உடல்நலனையும், சமூக நலனையும் அது பாதுகாக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

SCROLL FOR NEXT