இளைஞர்மணி

இளம் வயது மேனேஜரா? சமாளிக்கலாம்... நீங்கள்!

12th Jan 2021 06:00 AM | -சுரேந்தர் ரவி

ADVERTISEMENT


வயது எதற்கும் தடையாக அமைந்துவிட முடியாது. தற்காலத்திய தொழில்நுட்ப வளர்ச்சி இளைஞர்களிடையே மிகப் பெரும் மாற்றங்களைப் புகுத்தியுள்ளது. பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும் இளைஞர்கள் முன்னிலையில் உள்ளனர். 

அவற்றின் காரணமாக இளம் வயதிலேயே பலர் உயர்ந்த பதவிகளை அடைந்து விடுகின்றனர். உதாரணமாக பல்வேறு நிறுவனங்களில் இளம் வயதினர் மேலாளர் பதவிக்குக் கூட உயர்ந்து விடுகின்றனர். இது அவர்களது திறமைக்குக் கிடைத்த வெற்றியாக ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் வயதில் மூத்தவர்களுக்குக் கட்டளை பிறப்பித்து அவர்களிடம் வேலை வாங்கும் சூழலை பெரும்பாலான இளைஞர்களால் வெற்றிகரமாகக் கையாள முடிவதில்லை.

இந்த விவகாரத்தில் பெரும் ஏமாற்றத்தை அவர்கள் சந்திக்கின்றனர்.  வயதில் மூத்தவர்களைக் கட்டுப்படுத்தி அவர்களிடம் வேலை வாங்குவது சற்று நெருடலை ஏற்படுத்தும் என்றாலும், அத்தகைய சூழலைத் திறம்படவும் வெற்றிகரமாகவும் கையாளுவதற்கு சில உத்திகள் உள்ளன.

உங்கள் திறமை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.  நீங்கள் வெளிப்படுத்திய முழுத் திறமையின் காரணமாகவே மேலாளர் பதவி வரை உயர்ந்துள்ளீர்கள் என்பதில் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும். குழுவில் உள்ளோர் உங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றால், அவர்களுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். 

ADVERTISEMENT

குறிப்பிட்ட பணிகளைக் குழுவினரோடு சேர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், அக்குழுவைத் தலைமையேற்று வழிநடத்தும் ஆற்றலையும் மேலாளர் பெற்றிருக்க வேண்டும். 

தலைமைப் பண்பை இளம் மேலாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் போதிய முக்கியத்துவம் அளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். 

குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் கருத்துகளுக்கும் யோசனைகளுக்கும் செவிசாய்க்க வேண்டியது கட்டாயம். குழுவில் உள்ள வயதில் மூத்தோர் அனுபவம் நிறைந்தவராக இருப்பார். எனவே, குறிப்பிட்ட பணியைச் செய்வதில் எத்தகைய இடர்பாடுகள் ஏற்படும் என்பதைக் கணிப்பதில் அவர் கெட்டிக்காரராக இருப்பார். அவருடைய கருத்துகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். 

"நான் தான் குழுவின் மேலாளர். நான் எடுப்பதே இறுதி முடிவு' என்று நீங்கள் நடந்து கொண்டால், அது ஒட்டுமொத்த குழுவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்; பணியும் திருப்திகரமாக நிறைவேறாது. எனவே, குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுவதில், குழுவில் உள்ள அனைவரையும் பங்குபெறச் செய்ய வேண்டும். திறந்த மனதுடன் யோசனைகளை வெளிப்படுத்துவதற்கான சூழலை இளம் மேலாளராகிய நீங்கள் உருவாக்கித் தர வேண்டும். 

அதேபோல், வயதில் மூத்தோரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நீங்கள் சிறிதளவும் தளரக் கூடாது. அவர்களது அனுபவம் உங்களுக்கு சிறந்த பாடமாக அமையும். எனவே, தேவை ஏற்படும் சமயங்களில் அவர்களிடம் தனியாக உரையாடுவதும் நல்லதே. இதன் மூலமாக உங்கள் மீதான அவர்களின் மதிப்பு உயரும். உங்களை அவர்கள் மேலும் நேசிப்பார்கள்.  

நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் இருக்கும்போது ஒருமாதிரி நடந்து கொள்வதும், உறுப்பினர்கள் சென்ற பிறகு வேறு மாதிரி நடந்து கொள்வதும் சரியாக இருக்காது. உங்களின் நடிப்பு சில நாள்களிலேயே அம்பலமாகிவிடும். அதனால், குழுவின் உறுப்பினர்களுடன் வெளிப்படையாகவும் தாராளத்தன்மையுடனும் செயல்பட வேண்டும். 

"குழுவில் உள்ள மூத்தோரை ஒருபோதும் சமாளிக்க முடியாது' என்ற எண்ணத்தைக் கைக்கொள்ள வேண்டாம். குறிப்பிட்ட விவகாரத்தில் நீங்கள் எந்தவிதமான கருத்தைக் கொண்டுள்ளீர்கள் என்பதைத் தெளிவுபட  குழு உறுப்பினர்களிடம் தெரிவித்து விடுங்கள். அதுவே புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கும். அது தொடர்பாக உறுப்பினர்களின் கருத்தையும் கேட்டறிந்த பிறகு குழுவினருடன் சேர்ந்து தீர்க்கமான முடிவை எடுங்கள். 

அனைத்து விவகாரங்களிலும் குழு உறுப்பினர்களை ஒன்று சேர்த்து செயல்படுங்கள். இத்தகைய செயல்முறை, பணியின் மீதான பிடிப்பை குழுவினருக்கு ஏற்படுத்தும். மேலாளருடன் இணைந்து நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செயல்படுகிறோம் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைக்கும். இது பல்வேறு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். 

வயதில் மூத்தவர்கள் உள்ளிட்ட குழுவினர் அனைவரையும் அடிக்கடி பாராட்டுங்கள். பாராட்டை விரும்பாத நபர்கள் மிகவும் குறைவே. உங்கள் மீதான மதிப்பு உயர்வதற்கு அதுவும் ஒரு காரணமாக அமையும். 

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT