இளைஞர்மணி

மத்திய அமைச்சகத்தின் ஸ்டார்ட்- அப் விருது!

வி.குமாரமுருகன்


வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, தேசிய அளவிலான ஸ்டார்ட்அப் விருதுகளை நிகழாண்டும் (2021) வழங்குகிறது. இந்த விருது பெறத் தகுதியுள்ளவர்கள் ஜனவரி 31- ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு, குடிநீர், கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட 15 துறைகளில் 49 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. கரோனா தொற்று காரணமாக, கோவிட்-19 தொற்றுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்புகள், செயல்பாடுகள் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் நிகழாண்டு சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மேற்கொண்ட மிகச்சிறந்த நடவடிக்கைகள், முன்முயற்சிகள் ஆகியவற்றைக் கெளரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கூடுதலாக பல புதிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் முக்கிய அத்தியாவசியப் பொருள்கள் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இந்த வருடம் முக்கியத்துவம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுவோருக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசாக அளிக்கப்படும். வெற்றியாளரும், இரண்டாம் இடம் பெறுபவரும், தங்களது கண்டுபிடிப்பை தகுந்த நிறுவனங்களின் முன் செயல் விளக்கம் அளித்து அதன் மூலம் புதிய வாய்ப்புகளை பெற்று தொழில்துறையில் பிரகாசிக்கவும் ஏற்பாடு
செய்யப்படும்.

விருது பெறுவதற்கான விதிகள்: தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளில் பங்கேற்பவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்க வேண்டும். 2020 தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளில் வெற்றி பெற்றவர்கள் 2021 விருதிற்கு விண்ணப்பிக்க கூடாது. ஒருவர், அதிகபட்சமாக 2 பிரிவுகளில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவத்தை ஆங்கிலத்தில் மட்டுமே நிரப்ப வேண்டும். தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளில் பங்கேற்பவர்களின் விவரங்களை விளம்பர நோக்கிற்காக அமைப்பு பயன்படுத்திக் கொள்ளும். நடுவர் குழு மற்றும் அமலாக்கக் குழுவின் முடிவுகள் இறுதியானவை என்பன போன்ற விதிகளை மத்திய தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

விருதிற்கு விண்ணப்பிக்கும் ஸ்டார்ட்-அப்பிற்கான தகுதிகள்: விண்ணப்பிக்கும் நிறுவனம் டிபிஐஐடி-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் ஆக இருக்க வேண்டும். நிறுவனம் ஹார்டுவேர் அல்லது சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமாகவோ அல்லது சந்தையில் உள்ள ஒரு செயல்முறைத் தீர்வை உருவாக்கும் நிறுவனமாகவோ இருக்க வேண்டும். அந்நிறுவனமானது வர்த்தகம் சார்ந்த அரசு விதிமுறைகளுடன் செயல்படக் கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும்(ஜிஎஸ்டி பதிவு செய்தல் உள்ளிட்டவை) .நிறுவனம் கடந்த மூன்று நிதி ஆண்டுகளுக்காக (நிதியாண்டு 2017-18, 18-19, 19-20) தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். நிதியாண்டு 2019-20 க்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் கிடைக்கவில்லை என்றால், நிறுவனம் ஒரு பட்டயக் கணக்காளரால் வழங்கப்பட்ட நிதியாண்டு 2019-20 க்கான தற்காலிக நிதி அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம் என்பன போன்ற விதிகளையும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விருதிற்கான பிரிவுகள்: வேளாண்மைத் துறையில் உற்பத்தி, உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் விருதிற்கு விண்ணப்பிக்கலாம். கால்நடை துறையில் 2 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம். குடிநீர் தொடர்பான துறையில் 2 பிரிவுகளிலும், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் 5 வகைகளிலும் விண்ணப்பிக்கலாம். இது போல் போக்குவரத்து, சுற்றுலா, சுற்றுச்சூழல் போன்ற 15 துறைகளின் கீழ் 49 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தவிர, சிறப்புப் பிரிவின் கீழ் மகளிர் தொழில் முனைவோர்கள், கோவிட்-19 தொற்று தொடர்பான கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு dipp} startups@nic.in என்ற
இணையதளத்தைப் பார்வையிடலாம்.

விருதிற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.startupindia.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT