இளைஞர்மணி

முந்தி இருப்பச்செயல் - 31: மீளிணக்கத்திறன்-1

சுப. உதயகுமாரன்


"சனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனம்' 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச மீளிணக்க நிபுணர்களின் வலைப்பின்னல் (ரெக்கன்சிலியேஷன் எக்ஸ்பெர்ட்ஸ் நெட்வொர்க்) கூட்டம் ஒன்றை ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் நடத்தியது. இந்தியாவிலிருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுமோனா தாஸ் குப்தா என்கிறஅருமைத் தோழியும், நானும் பங்கேற்றோம்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் "ரெக்கன்சிலியேஷன்' எனும் ஆங்கில வார்த்தைக்கான அவரவர் மொழி வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டோம். பெரும்பாலான தெற்கு நாடுகளைச் சார்ந்தவர்களின் பதில்கள் ஒன்றாகவே இருந்தன. எங்கள் கலாசாரத்தில் இது தொன்றுதொட்டே நடந்து வந்திருந்தாலும், இதற்கென தனி வார்த்தை ஏதுமில்லை என்றார்கள்.

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளே எனக்கு நினைவுக்கு வந்தன:

தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே.

அந்த தன்னலமற்ற தாயுள்ளத்தின் தகைமைசால் செயல்பாட்டை எப்படி ஒரே வார்த்தையில் குறிப்பது?

இணக்கமான ஓர் உறவில் ஒரு பிணக்கு எழுகிறது; அதன் பிறகு அந்த பிணக்கைத் தீர்த்துக் கொண்டு மீண்டும் புதுப்பித்துக் கொள்ளப்படும் இணக்கத்தை "மீளிணக்கம்' என்று குறிப்பிடுகிறோம். சமாதானம் செய்தல், சரிக்கட்டுதல், விட்டுக் கொடுத்தல் போன்ற சொற்களை நாம் பயன்படுத்தினாலும், மீளிணக்கம் என்கிற வார்த்தைதான் மிகத் துல்லியமாக இதனைக் குறிக்கிறது.

அன்றாட வாழ்வில் அவ்வப்போது நிகழும் "அல்லறை சில்லறை' பிரச்னைகள் தொடர்பாக நாம் மீளிணக்கம் பற்றிப் பேசுவதில்லை.

ஊடலை நாம் மீளிணக்கம் என்றழைப்பதில்லை. கொலை, இனப்படுகொலை, வன்புணர்வு, சித்திரவதை, ஆள்கடத்தல், அடிமைப்படுத்தல், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற பெரும் குற்றமிழைத்தவரும், அதனால் பெருமளவு பாதிப்புக்குள்ளானவரும் தங்களின் ஆறா ரணங்களை, அழியா வடுக்களை, ஆழமான கசப்புக்களை கடந்து செல்வதைத்தான் மீளிணக்கம் எனும் சொல் மற்றும் விழுமியத்தின் மூலம் விளக்குகிறோம்.

மீளிணக்கம் என்பது உடைந்து கிடக்கும் ஓர் உறவின் புத்தாக்கத்தைக் குறிக்கிறது. மீட்டெடுப்பு மற்றும் மறு சீரமைப்பு போன்றவற்றை நோக்கிச் செல்லும் ஓர் ஆன்மப் பயணம் அது. அந்த கடினமான பயணத்தில் பிரச்னையை முடித்துக் கொள்ளல், ரணங்களைக் குணப்படுத்துதல் எனும் இரண்டு முக்கியமான அம்சங்கள் இடம் பெறுகின்றன.

இந்த "குற்றமிழைத்தவர்-பாதிப்புக்குள்ளானவர்' உறவு என்பது மிகவும் நுண்மமானது, சிக்கலானது.

குற்றமிழைத்தவர் சரணாகதி அடைவதன் மூலம், பிராயச்சித்தம் தேடிக் கொள்வதன் மூலம், அல்லது உரிய தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொள்வதன் மூலம் தன்னுடைய குற்றத்திலிருந்து, குற்றவுணர்விலிருந்து விடுதலையடைய முயற்சிக்கிறார். அவர் உள்ளுக்குள் கடினமான பிரயத்தனங்களை மேற்கொண்டு,

ஆன்மத் தேடல்களில் ஈடுபட்டு, தன் தவறுகளை உணர்ந்து, ஆத்மார்த்தமாக வருத்தம் தெரிவிப்பதன் மூலம், மன்னிப்புக் கோருவதன் மூலம் மனிதனாய் மீண்டு வர எத்தனிக்கிறார்.

பாதிப்புக்குள்ளானவரோ தான் அனுபவித்த தீங்குக்கு பரிகாரம் கோருகிறார். குற்றமிழைத்தவர் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறார். அவரைப் பழிவாங்குவதன் மூலம் ஆத்மதிருப்தியும், அமைதியும் பெற முனைகிறார். தான் அனுபவித்த அதிர்ச்சியிலிருந்து, தற்போதும் அனுபவித்துக்கொண்டிருக்கும் வலிகளிலிருந்து, வேதனைகளிலிருந்து விடுபட முயல்கிறார்.

இப்படியாக குற்றமிழைத்தவரும் பாதிப்புக்குள்ளானவரும் எதிரும் புதிருமாக, தாழ்ச்சியும் உயர்ச்சியுமாக, கீழ்-மேலாக இருக்கும் நிலையில், அவர்களுக்குள்
எப்படி ஒரு மீளிணக்கத்தை ஏற்படுத்த முடியும்? எப்படி அந்த உறவை சமன்பாடடையச் செய்ய முடியும்? ஒரு சில வழிமுறைகளை மட்டும் இங்கே சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்:

1.பழுதுநீக்கல், மறுசீரமைத்தல், மீட்டெடுத்தல் அணுகுமுறை: குற்றமிழைத்தவர் தானிழைத்த கெடுதிக்கு, அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு போதிய இழப்பீடு வழங்கி, அல்லது அதற்கு ஈடாக வேறு ஏதாவது பரிகாரங்கள் செய்து, தன்னை அக்குற்றச் செயலிலிருந்து, குற்றவுணர்விலிருந்து விடுவித்துக் கொள்வது.

2.வருந்துதல், மன்னித்தல் அணுகுமுறை: குற்றமிழைத்தவரும் பாதிப்புக்குள்ளானவரும் ஒருங்கிணைந்து, "மறப்போம், மன்னிப்போம்' என்று கூட்டாக முடிவெடுத்துத் தொடர்வது. மறப்பது என்பது இழைக்கப்பட்ட குற்றத்தை மீண்டும் மீண்டும் நினைபடுத்திக் கொண்டிருக்க மாட்டோம் என்று முடிவெடுப்பது. மன்னிப்பது என்பது மேலும் ஒருபடி சென்று குற்றமிழைத்தவரை மன்னித்துவிடுவது. இது கருணையும், கரிசனமும் மிளிரும், மனதளவிலான, ஆன்மரீதியிலான ஆழமான நடவடிக்கை. இதில் குற்றமிழைத்தவர் மன்னிக்கத்தக்கவராக இருப்பது மிகவும் முக்கியம்.

3.இறையியல், நோன்பு அணுகுமுறை: குற்றமிழைத்தவர் தன் தவறை உணர்ந்து, பாதிப்புக்குள்ளானவரிடமோ அல்லது மதகுரு ஒருவரிடமோ சரணடைந்து, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, மனம் வருந்தி,
மன்னிப்புக் கேட்டு, பிரார்த்தனை, உண்ணாநிலை போன்றவற்றின் மூலம் தன்னோடும், இறைவனோடும் மீளிணக்கம் செய்து, நிவாரணம் பெற முயல்வது. ஆழமான ஆன்மீக நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே இம்முறை பயனளிக்கும்.

4.நீதிபரிபாலனம், தண்டனை அணுகுமுறை: மேற்குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிமுறை போலவே, குற்றமிழைத்தவர் நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்து, தானிழைத்த குற்றத்தை ஒத்துக் கொண்டு, சட்டம் வழங்கும் தண்டனையை ஏற்றுக் கொள்வது.

5.வரலாற்று, உண்மை தேடும் அணுகுமுறை: என்ன நடந்தது எனும் உண்மைகளை உரியவர்களோடு பகிர்ந்துகொண்டு, அதைப் பற்றி விளக்கமாகப் பேசி, கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுவது. மாற்று வரலாற்றுக் கதையாடல்களை நடத்தி, நிகழ்ந்துவிட்ட தவறுகளை வருங்காலத்தில் எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து சிந்திப்பது. 

மீளிணக்கம் பண்பும் பயனுமாக, வழியும் இலக்குமாக அமைகிறது. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' எனும் பாரதியாரின் இலக்கணம்தான் இங்கே அடிப்படையாக அமைகிறது. மனித மாண்பை நொறுக்கியவரும், நொறுக்கப்பட்டவரும் ஒன்றுபட்டு, தங்களுக்கென ஒரு புதிய வாழ்வை அமைத்துக் கொள்வதுதான் மீளிணக்கம்.

ஆனாலும் தாங்க முடியாத கொடுமையை நிகழ்த்தியவரோடு, மீளமுடியாத சோகத்தை இழைத்தவரோடு எப்படி முழுமையாக மீளிணக்கம் செய்து கொள்ள இயலும்? அப்படிப்பட்ட தருணங்களில், முதற்கட்டமாக நல்லுறவு பூணுவது பற்றி மட்டும் பேசலாம். முதலில் அனுசரணை ஏதுமின்றி அப்புறமாக விலகி நின்று அவரவர் வாழ்க்கையைத் தனித்தே வாழ்வது; இரண்டாவதாக, அந்நியோன்யம் ஏதுமின்றி அருகமைந்து வாழ்வது; மூன்றாவதாக, அனுசரணையோடும் அந்நியோன்யத்தோடும் ஒன்றுபட்டும், ஒன்றிணைந்தும் வாழ்வது எனும் மூன்று நிலைகளில் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளலாம். இப்படி படிப்படியாக நகர்வதும் மேன்மையான மீளிணக்கத்துக்கு இட்டுச்செல்லும்.

இந்த மீளிணக்க நுண்மத்தை ஓர் எளிய கவிதையில் இனிமையாக எடுத்துரைக்கிறார் கவிஞர் கண்ணதாசன்:

""உன் கூட டூ''
என்று இரண்டு விரலை
சுட்டிக்காட்டித் துவங்குகிறது
பிள்ளை பிராயத்து சண்டைகள்.
கொஞ்ச நேரத்துக்குள்ளாகவே,
""உன் கூட பழம்'' என்று
புன்னகைப்பூ பூக்க சமாதானப் பேச்சு...
பிள்ளை பிராயத்தில்
எல்லாமே
சுலபமாகத்தான் உள்ளது.
சண்டையானாலும் சரி,
சமாதானங்களானாலும் சரி...
வருஷக்கணக்காய்
பார்த்தும், பார்க்காமல்
போகும் முன்னாள் நண்பன்...
சோறாக்கியாச்சு -
சாப்பிட வரலாம்...
விட்டத்தைப் பார்த்து சொல்லும் மனைவி.
சிறிய கடனுதவி -
செய்ய மறுத்ததால்
முகத்தைத் தூக்கி
வைத்துக் கொண்டிருக்கும் சகோ...
எழுதும் எழுத்துகள்
கோணலாக இருந்தாலும் -
நேராக உள்ளது
பிள்ளை பிராயத்துச் சிந்தனைகள்.
வளர வளர எல்லாமே
வளர்கிறது...
மனஸ்தாபங்களும், பேதங்களும்...
அறிவு மட்டும் குறைவாக.
யாரிடமும்
சுலபமாக
சொல்ல முடியாமலே போகிறது -
""பழம்'' என்று.

பழகும் மனிதரிடமெல்லாம் "பழம்' என்று சொல்வோம், பழம் நழுவி பாலில் விழும் நலம் பெற்று வாழ்வோம்!

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ஜான் பண்டிகை: தேர்வு தேதி மாற்றம்

சேலம்: நடைப்பயிற்சியில் டி.எம். செல்வகணபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாடு உடைய கட்சிகள்தான்: சீமான்

புனித அந்தோணியாா் ஆலயத்தில் திருச்சிலவை திருப்பயண ஊா்வலம்

அரிகேசவநல்லூா் இந்து நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா

SCROLL FOR NEXT