இளைஞர்மணி

பேஸ்புக்கின் ஸ்மார்ட் வாட்ச்!

23rd Feb 2021 06:00 AM | - அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

 

கைக்கடிகாரம் (வாட்ச்) என்றவுடன் இன்றைய இளைஞர்களுக்கு தங்களது தாத்தா பயன்படுத்தியதுதான் நினைவுக்கு வரும். தற்போது கைக்கடிகாரங்களைப் பயன்படுத்துவது மிகவும் குறைந்துவிட்டது.

கைக்கடிகாரங்களின் பயன்பாட்டை ஸ்மார்ட் போன்கள் நிறுத்திவிட்டன. மணி பார்க்க போன் இருக்கும்போது எதற்கு இரண்டாவதாக ஒரு கருவி என்று நினைத்தே மக்கள் கைக்கடிகாரத்தை ஓரங்கட்டிவிட்டனர்.

தற்போது இந்நிலை மாறி வருகிறது. ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு மக்களிடம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும், இணைய இணைப்புக்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் ஸ்மார்ட் போனின் உதவி தேவை என்றாலும், அதிகவிலை என்பதால் ஸ்மார்ட் வாட்ச் மக்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு பயன்பாட்டுக்கு வரவில்லை.

ADVERTISEMENT

இந்த தொழில்நுட்ப இடைவெளியைப் போக்க உலகின் முன்னணி சமூக ஊடகமான பேஸ் புக் மும்முரமாகப் பணியாற்றி வருகிறது. ஸ்மார்ட் வாட்சிலேயே இணைய வசதியை ஏற்படுத்தி, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்மார்ட் வாட்ச் நமது உடலுடன் இணைந்துள்ளதால், உடலின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளும் செயலிகளும், உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளும் செயலிகளும் இதில் அதிக அளவில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

எனினும், ஸ்மார்ட் போனுடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட் வாட்ச்- இன் திரை சிறியதாக இருக்கும்.

இதைப்போக்க ஸ்மார்ட் வாட்சில் உள்ள தகவல்களை ஸ்மார்ட் மூக்குக்கண்ணாடி மூலம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தையும் பேஸ்புக் நிறுவனம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஸ்மார்ட் வாட்சுக்கு உலக சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்து ஆண்டு இந்த ஸ்மார்ட் வாட்சை பேஸ்புக் நிறுவனம் வெளியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.

Tags : பேஸ்புக்கின் ஸ்மார்ட் வாட்ச்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT