இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 37: ஆவதறியும் திறன்- 2

சுப. உதயகுமாரன்

பல்லாண்டுகளுக்கு முன்னால் மிகக் கடுமையாக மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் வயதான தம்பதியர் இருவர், பிலடெல்ஃபியா நகரிலிருந்த அந்த சிறிய தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர். தொடர்ந்து பயணிக்க இயலாத அவர்கள், அந்த கனமழையிலிருந்து தப்பித்துக் கொள்ள முயன்றனர்.
""இந்த இரவுப் பொழுதைக் கழிக்க எங்களுக்கு ஓர் அறை கிடைக்குமா?'' என்று வரவேற்பாளரிடம் அந்த முதியவர் கேட்டார்.
நகரில் மூன்று மிகப் பெரிய மாநாடுகள் நடப்பதால், தங்கள் ஓட்டல் அறைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன என்பதை நட்புணர்வுமிக்க அந்த வரவேற்பாளர் பணிவுடன் விவரித்தார்.
""ஆனாலும் உங்களைப் போன்ற இனிமையான தம்பதியரை இந்த பேய்மழை பெய்யும் நள்ளிரவில் திருப்பி அனுப்ப நான் விரும்பவில்லை. என்னுடைய அறையில் தங்கிக் கொள்கிறீர்களா? அது ஒன்றும் சொகுசான அறையல்ல; ஆனால் இந்த இரவைக் கழிப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் இருக்கும்'' என்றார் வரவேற்பாளர்.
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட அந்த தம்பதியர் வேண்டாமென்று மறுத்தார்கள். ஆனால் அந்த இளைஞரோ, ""என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள், நான் சமாளித்துக்கொள்வேன்'' என்று வற்புறுத்தவே, தம்பதியர் இசைந்தனர்.
மறுநாள் காலை பணம் செலுத்திவிட்டு விடைபெறும்போது, அந்தப் பெரியவர், அந்த இனிய வரவேற்பாளரிடம் சொன்னார்: ""உங்களைப் போன்ற ஒருவர்தான் அமெரிக்காவின் ஆகச் சிறந்த உண்டுறை விடுதியின் மேலாளராக இருக்க வேண்டும்'' மூன்று பேரும் வாய்விட்டுச் சிரித்தவாறே விடைபெற்றார்கள்.
தங்கள் மகிழுந்தை ஓட்டிக்கொண்டே அந்த விடுதியிலிருந்து வெளியேறிய அந்த தம்பதியர் இம்மாதிரி நட்பார்ந்த, உதவும் மனப்பான்மை கொண்ட ஊழியர்கள் அரிதானவர்கள் என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.
ஒரு சில ஆண்டுகள் கழித்து அந்தப் பெரியவரும், அதே இளைஞரும் நியூ யார்க் மாநகரின் புகழ்பெற்ற ஐந்தாவது அவென்யூவில் சந்தித்துக் கொண்டனர். விலையுயர்ந்த சிவப்புக் கற்களால் விசாலமான மாடங்களுடனும், கோபுரங்களுடனும் கட்டப்பட்ட அந்த அற்புதமான கட்டடத்தைச் சுட்டிக்காட்டிய பெரியவர் சொன்னார்: ""என்னுடைய இந்த உண்டுறை விடுதியை நீங்கள்தான் மேலாண்மை செய்ய வேண்டும்''
அந்தப் பெரியவரின் பெயர் வில்லியம் வால்டார்ஃப் அஸ்டர்; அந்தக் கட்டிடத்தின் பெயர் வால்டார்ஃப்-அஸ்டோரியா ஓட்டல். அந்த இளைஞரின் பெயர் ஜார்ஜ் போல்ட். உலகின் ஆகச் சிறந்த ஓட்டல் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக தான் மாறப் போகிறோம் என்று ஜார்ஜ் கிஞ்சிற்றும் எதிர்பார்த்திருக்கவேயில்லை.
கடந்தகாலத்தை விட்டு, நிகழ்காலத்துக்குள் நுழைந்து "ஜெட்' வேகத்தில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நமது வாழ்வை எதிர்காலம் எப்படியெல்லாமோ தொடுகிறது. நாம் விழிப்புடன், விழைவுடன், முனைப்புடன் இருந்தால், அது நம்மை ஒரு கனவுலகத்துக்கு அழைத்துச் செல்கிறது.
முக்காலங்களை நாம் நேற்று-இன்று- நாளை என்று குறிப்பிட்டாலும், இவற்றுக்கிடையே தெளிவான எல்லைக்கோடுகள் இல்லை. நேற்றைய நினைவுகளும், அனுபவங்களும், நாளையக் கனவுகளும், எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து இன்றைய நிகழ்கால வாழ்வியல் தளத்தில் சந்தித்துக் கொண்டே இருக்கின்றன. இவற்றுள் எது முக்கியமானது என்று தீர்மானிப்பது கடினமான செயல். ஆனால் எது தவிர்க்கவே இயலாதது என்பதை நாம் தெளிவாக உணர முடியும்.
கடந்தகாலம் அதன் நினைவுகளோடு நம்மைவிட்டு விலகிவிடுகிறது என்று வையுங்கள். நாம் ஒருவித விலங்குகளாகிப் போவோம், அவ்வளவுதான். நிகழ்காலம் விலகிப்போனால், நாம் தூக்கம், கோமா, பைத்தியம், (போதை) மயக்கம் போன்றதொரு நிலைக்குள் விழுந்து செயலிழந்து விடுவோம். ஆனால் எதிர்காலம் நம்மைவிட்டு விலகிப் போனால், நாம் செத்தே போவோம். எனவே முக்காலங்களிலும் முக்கியமானது எதிர்காலம்தான்.
இவ்வளவு முக்கியமான எதிர்காலத்தை நாம் முறைப்படி படிக்கிறோமா, பார்க்கிறோமா, பாங்காகத் தகவமைக்கிறோமா என்றால், இல்லை என்பதுதான் பதிலாகிறது
எதிர்காலத்தை அறிவியல்ரீதியாக ஆய்வு செய்கிறவர்களை, அனுமானிக்கிறவர்களை, அள்ளித்தருகிறவர்களை "எதிர்காலர்' (ஃபியூச்சரிஸ்ட்ஸ்) என்றழைக்கிறோம். ஆனால் எதிர்காலர் என்பவர் பளிங்குப் பந்தைப் பார்த்து குறி சொல்லும் மந்திரவாதி அல்ல. தத்துவஞானி, ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், கலைஞர்,
ஓவியர், சிற்பி, மருத்துவர், பொறியாளர், ஊட்டச்சத்து நிபுணர், நீங்கள், நான் எல்லாருமே எதிர்காலர்தான்.
உடலைப் பேணும் அனைவருமே ஊட்டச்சத்து பற்றி அறிந்திருந்தாலும், அதனை ஊன்றிப் படிப்பவர் மட்டுமே ஊட்டச்சத்து நிபுணர் ஆவதுபோல, எல்லாருமே எதிர்காலம் குறித்து கரிசனம் கொண்டிருந்தாலும், அதுபற்றிய சிறப்புப் பயிற்சிகளும் திறன்களும் பெற்றிருப்போரையே எதிர்காலர் என்றழைக்கிறோம். ஓர் எதிர்காலர் எதிர்கால நிகழ்வுகளில் சாத்தியமானவற்றை எல்லாம் விவரித்து, அவற்றுள் சாசுவதமான சிலவற்றை
உற்றுநோக்கி, சாதகமானவற்றை நாம் அமல்படுத்த உதவுகிறார்.

ஒரு தனி மனிதனோ, அல்லது ஒரு மனித சமூகமோ, அவரவர் எதிர்காலம் அவரவரின் கைகளுக்குள்ளேதான் கட்டுண்டு கிடக்கிறது. அவர்கள் தமது எதிர்காலங்களை ஒரு வரைபடத்தில் தோராயமாக குறித்துக் கொள்ளலாம். ஒரு சமூகத்தை எடுத்துக்காட்டாகக் கொள்வோம்.

முதலில், இரு துருவ நிலைகளை அடையாளப்படுத்தலாம். இடது கோடியில் உலகிலேயே எங்குமில்லாத, ஏற்ற தாழ்வுகளற்ற, சமத்துவ சமதர்மம் மிக்க, அநியாயங்களே இல்லாத, அற்புதமான கனவுச் சமுதாயமாக இருப்போம் எனும் ஆசை.
வலது கோடியில் இப்போது இருப்பதை விட மோசமாகி, அடிமைத்தனம் மிகுந்து, அநியாயங்கள் மலிந்து, நாசமாகி, நலிவடைந்து போவோம் எனும் பயம். இவ்விரு துருவங்களுக்கிடையே பல சாத்தியமான காட்சிக் கூறுகளை நாம் நமது மனக்கண்ணின் உதவியுடன் கண்டறியலாம்.

மேற்கண்ட காட்சிக்கூறுகளில் எது விரும்பத்தக்கது, எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பதை முடிவுசெய்வது எதிர்காலங்களியலின் இரண்டாவது நிலை.

அந்த உற்றதோர் எதிர்காலத்தை எந்த ஆண்டுக்குள் அடைய விரும்புகிறோம் என ஒரு கால நிர்ணயம் செய்துகொள்வது அவசியம். நமது உன்னத சமூகம் 2030-ஆம் ஆண்டுக்குள் கைகூடவேண்டும் என நாம் இலக்கு நிர்ணயிக்கலாம்.

மூன்றாவதாக, அந்த எதிர்கால கனவு நனவாக, எந்தெந்த காலகட்டத்தில் என்ன என்ன வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்பதை பின்னோக்கி நடந்துவந்து குறித்துக் கொள்வோம். அதாவது 2029, 2028, 2027, 2026 போன்ற வருடங்களுக்குள் என்ன என்ன பணிகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என திட்டமிட்டுக் கொள்வோம். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் இப்போது 2021-ஆம் வருடம் நாம் என்னென்ன வேலைகளைத் தொடங்கவேண்டும் என்பதைத் தீர்மானித்துவிட்டு, அந்த வருங்கால கனவுப் பயணத்தை நாம் தொடங்கலாம்.

இந்த எதிர்காலங்களியல் முயற்சிக்கு, கனவு காண்பது என்பது மிகவும் முக்கியமானது. நாம் எதை அடையவேண்டும் என உண்மையாக, ஆழமாக, தீவிரமாக நினைக்கிறோமோ, விரும்புகிறோமோ, ஆசைப்படுகிறோமோ அதை நிச்சயம் அடைவோம். அதற்கான அடிப்படை ஆதாரம் கனவு காண்பதுதான்.

கற்பனை, கனவு, பகற்கனவு, மிகுபுனைவு, மனக்கண் பார்வை , மனத்தோற்றம்/ படிமம்/ உருவம், பிரமை/ தோற்ற மயக்கம் என பல வடிவங்களில் வனப்பான வருங்காலத்தை தகவமைக்கும் பார்வை அமையலாம். அது எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமானதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கைகூடும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.


கீழ்க்காணும் திரைப்படப் பாடலைக் கவனியுங்கள்:

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது,
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது.


என்று பாடும் நாயகன், தான் சென்றடைய விரும்பும் எதிர்காலத்தை இங்கே நிகழ்காலத்துக்குக் கொணர்ந்து, அதனை வாழத் தொடங்கிவிட்டார் என்பதை
உணருங்கள்.

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வைப் பற்றி இவர்கள் "இங்கே, இப்போது நிகழ்காலத்தில் ஆழமாகக் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இப்படி திரும்பத் திரும்ப, தெள்ளத் தெளிவாக உயிரோட்டத்துடன் கனவு காணும்போது, ஆழ்மனம் இதை உள்வாங்கி உயிர்ப்பிக்கிறது. இதுதான் எதிர்காலங்களியல் குறித்த முயற்சி, பயிற்சி ஆகிய அனைத்தின் அடிப்படை!
(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: s‌p‌u‌k2020@‌h‌o‌t‌m​a‌i‌l.​c‌o‌m
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT