இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 35: மீ‌ட்பு​நீ​தி‌த் திற‌‌ன் - 2

9th Feb 2021 06:00 AM | சுப. உதயகுமாரன்

ADVERTISEMENT


மீளிணக்கமும், மீட்புநீதியும் பெரும் குற்றமிழைத்தவர்களுக்கும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே மட்டுமே நடப்பவையாக நாம் நினைக்கிறோம்.   ஆனால் நமது அன்றாட வாழ்வில் இவற்றை நாம் அளவின்றிக் கையாள்வதையும், இவை நம்முடைய அடிப்படைக் கலாசாரக் கூறுகள் என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும். 

கணவன்-மனைவி உறவில் குற்றமிழைத்தவர்-

பாதிக்கப்பட்டவர் என்று பார்க்க முடியாதென்றாலும், அன்றாடம் நடக்கும் உறவுப் பரிவர்த்தனைகளில் மீளிணக்கமும், மீட்புநீதியும் முக்கியமானவை. 

"சந்திரோதயம்' திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய  பாடல் ஒன்று மனைவியை விட்டுப் பிரிய முனையும் கணவனுக்கும், அவரது நண்பனுக்குமான உரையாடலாக அமைகிறது:

ADVERTISEMENT

காசிக்கு காசிக்கு காசிக்குப் போறேன் ஆள விடு,
என்னை இனிமேலாவது வாழ விடு!
ஆதரவான வார்த்தையைப் பேசி,
அருமை மிகுந்த மனைவியை நேசி.
அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி,
அவளை விடவா உயர்ந்தது காசி?
சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ?
அவள் துணையினைப் பிரிவது முறையோ?
பகைதான் வளரும்!
பகையே அன்பாய் மலரும்!
பிரிந்தவர் இணைந்திடப் படுமோ?
மணந்தவர் பிரிந்திடத் தகுமோ?
இல்லறம் நல்லறமே!

ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தார்களாம். "சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்று வாழ்கிறார்களோ என்றெண்ணிய அந்த  தெருக்காரர்கள், அந்தத் தம்பதியினரின் சிரிப்பு வாழ்க்கையின் சிறப்பு பற்றி அவர்களிடம் விசாரித்தார்கள். அவர்கள் சொன்னார்கள்: 

""எங்களுக்குள் அடிக்கடி சண்டை  வந்து கைகளில் கிடைப்பவற்றை அடுத்தவர் மீது தூக்கி எறிவோம். அவை குறி தவறாமல் தாக்கினால், எறிந்தவர் சிரிப்போம்; குறி தவறிவிட்டால் தப்பித்தவர் சிரிப்போம்''.” 

"தில்லிக்கு இராஜாவானாலும், வீட்டுக்குப் பிள்ளைதானே' என்பது போல, நாட்டுக்கு இராணியென்றாலும், வீட்டுக்கு மனைவிதானே? பிரிட்டிஷ் இராணி 
விக்டோரியாவுக்கும், அவரது கணவர் இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் ஒரு தகராறு எழுந்தது. வார்த்தைகள் தடித்து, ஒரு கட்டத்தில் ஆல்பர்ட் தனது அறைக்குள் சென்று கதவை ஓங்கியறைந்து உள்ளுக்குள் பூட்டிக்கொண்டார். இராணியார் கத்தினார்; கதவைத் தட்டினார்; எதுவும் பலனளிக்கவில்லை. 

""நான் - இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து நாடுகளின் இராணி, இந்தியா உள்ளிட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பேரரசி, பிரிட்டானியப் படைகளின் தலைமைப் படைத்தலைவர்- கதவைத் திறக்க ஆணையிடுகிறேன்!'' என்று உத்தரவிட்டார். எதிர்வினை ஏதுமிருக்கவில்லை. இறுதியில், அமைதியான  குரலில், ""ஆல்பர்ட், நான் மிகவும் வருந்துகிறேன். உங்களை நேசிக்கிறேன்'' என்று சொன்னார். கதவு திறந்தது. மனம் வருந்துவதும், மன்னிப்புக்  கேட்பதும்தான் உறவுக் கதவுகளைத் திறக்கும் உன்னதச் சாவிகள்.

நன்கு அறிமுகமான இளம் தம்பதியரிடம் நான் பேசும்போது, அவர்களுக்குள் நடந்த "முதல் சண்டை'  பற்றி கேட்டறிவதுண்டு. "ஆசை அறுபது நாள், மோகம் 
முப்பது நாள்' என்பது நம் முன்னோர் வகுத்த இலக்கணம். எனவே தொண்ணூறு நாட்கள் தாண்டிய பிறகாவது, எங்கேயாவது, எப்போதாவது சண்டைத் தொடங்கியாக வேண்டுமே? 

இந்த கருத்துப்பரிமாற்றத்தின் அடிப்படையில், இளம் தம்பதியருக்குத் தேவைப்படும் கருத்துகள் அடங்கிய "ஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்' (வல்லமை, 2017) எனும் நூலை எழுதினேன்.

எனக்கும் என் மனைவிக்கும் சண்டையே வருவதில்லை என்று எந்த ஆணோ, அல்லது எனக்கும் என் கணவருக்கும் பிரச்னைகளே கிடையாது என்று எந்த பெண்ணோ சொன்னால், அது பச்சைப்பொய் என்பதை நாமறிவோம். உண்மை என்னவென்றால், தினமும் சண்டை போடுகிறோம். ஆனால் தவறாமல் மீளிணக்கம் செய்கிறோம்; மீட்புநீதியைக் கைக்கொள்கிறோம் என்பதுதான்.

வீடுகளில் விதைப்பதைத்தானே, நாடுகளில் அறுவடை செய்ய முடியும்? கடந்த 2002-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ரஷ்யாவின் செசன்யா மாகாணத்தில் விடுதலைக்காகப் போரிட்டுக் கொண்டிருந்த ஆயுதப் படையினர் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ நகருக்குள் ஊடுருவி ஒரு கலையரங்கை ஆக்கிரமித்து, அங்கிருந்தோரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.

அப்போது கழிப்பறைக்குள் இருந்த ஓல்கா ட்ரைமேன் என்கிற 18 வயது இளம் கர்ப்பிணிப் பெண் லேசாக கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தார். ஆயுதங்களேந்திய  படையினர் அங்குமிங்கும் ஓடுவதையும், தனக்குப் புரியாத மொழியில் அவர்கள் உரக்கக் கத்துவதையும் கேட்டார். சத்தமின்றிக் கழிப்பறைக் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே உட்கார்ந்துகொண்டார் ஓல்கா. அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எதுவுமே நடக்கவில்லை. 

திடீரென யாரோ வந்து கதவைத் திறக்க முயன்றுவிட்டு, திரும்பிப் போய்விட்டார். சற்று நேரம் கழித்து, கடினமான ஒரு பொருளால் கதவில் பலமாக இடித்து, உடைக்க முயன்றார்கள். அச்சத்தால் உறைந்துபோன ஓல்கா அசையவேயில்லை. 

கதவை உடைத்து உள்ளே சென்ற ஆயுதமேந்திய அந்த நபரிடம் அழுகை கலந்த நடுங்கும் குரலில் சொன்னார் ஓல்கா: ""என்னைச் சுடாதே, நான் நிறைமாத கர்ப்பிணி!''

முகமூடி அணிந்திருந்த அந்த உயரமான ஆயுதப் போராளி சொன்னார்: ""என்னோடு வா. பயப்படாதே. உன்னைத் துன்புறுத்த மாட்டேன்''

""எனக்கு பனிக்குடம் உடைந்துவிட்டது, நான் எந்நேரமும் பிரசவிக்கலாம்'' என்று ஓல்கா சொன்னதும், அந்த நபர் தன்னுடைய தோழர் ஒருவரிடம் ஏதோ சத்தமாகச் சொல்லிவிட்டு, ""வா, போகலாம்'' என்று ஓல்காவை விரைவுபடுத்தினார்.

அவசரம் அவசரமாக ஓல்காவை வாகனமொன்றில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். செசன்யாப் போராளிகள் ஓல்காவையும், அவர் வயிற்றுக்குள்ளே இருந்த அந்தக் குழந்தையையும் ரஷ்ய எதிரிகளாக அல்லாமல், மனிதர்களாகவே  பார்த்தார்கள். 

தங்கள் பாதுகாப்பு குறித்து  கூட அஞ்சாமல், கவலைப்படாமல், இரண்டு எதிரிநாட்டு உயிர்களைக் காப்பற்றுவதில் அவர்கள் குறியாயிருந்தனர். வாகனம் சீறிப் பாயவிருந்த நிலையில், ஆயுதப் போராளிகளின் தலைவர் ஓல்காவிடம் ஒரு விண்ணப்பம் வைத்தார்: ""செசன்யாவில் என் மக்கள் பலரும் அன்றாடம் கொல்லப்படுகிறார்கள் என்கிற செய்தியை உலகுக்குச் சொல்லுங்கள்''

கணவன்-மனைவி போன்ற தனிமனித உறவுகளில் எழும் பிரச்னைகளை முடித்து வைத்தலும், ரணங்களைக் குணப்படுத்தலும் ஒப்பீட்டளவில் எளிதானவை. ஆனால் ரஷ்யர்-செசென்யர் போன்ற இரு குமுகங்களின் சமூக உறவில் காணப்படும் பிரச்னைகளை முடித்து வைத்தலும், ரணங்களைக் குணப்படுத்தலும் மிக மிகக் கடினமானவை. வரலாற்று நீக்குப்போக்குகள், அரசியல் மனமாச்சரியங்கள், அடையாளக் கரடுமுரடுகள், தலைமைகளின் தகிடுதத்தங்கள், காலத்தின் கோலங்கள் என எத்தனை எத்தனை  தடைக்கற்கள்?

கிரேக்கர்களுக்கும், துருக்கியர்களுக்கும் இடையேயான  பகைமை உலகறிந்தது. ஒரு துருக்கியர் மீது காதல்கொண்ட ஒரு கிரேக்க இளம்பெண் தன் மனதுக்கு உகந்தவரை மணம் முடித்துக் கொள்ள, தன் பெற்றோரிடம் அனுமதி  கேட்டாளாம். இரண்டு இனத்தவரின் வரலாற்றுப் பகைமையைச் சொல்லி வானுக்கும் மண்ணுக்குமாய் குதித்தாராம் அப்பா. விரக்தியடைந்த மகள், ""நம்மிரண்டு இனங்களுக்குள் அப்படி என்னதான் பிரச்னை?'' என்று குமுறினாளாம். வெகுண்டெழுந்த அப்பா வெடித்தாராம்: ""ஆயிரம் ஆண்டு பகைமைக்குப் பிறகு, வேறென்ன காரணம் வேண்டும்?''

ஒரு விடயம் நமக்குத் தெளிவாகிறது. தனிமனித உறவுகளில் காட்டப்படும் மீளிணக்கமும், மீட்புநீதியும் ஓரளவு எளிதானவை. ஆனால் இரண்டு குமுகங்களின் உறவில் கைக்கொள்ளப்படும் மீளிணக்கமும், மீட்புநீதியும் 
மிகவும் நுண்மமானவை, சிக்கலானவை.  

நற்செய்தி என்னவென்றால், இரண்டு தளங்களிலுமே மீளிணக்கத்தின், மீட்புநீதியின் அடிப்படைகள் கருணையும், நேயமும், பொறுமையும்தான்!   கவிமணி தேசிக

விநாயகம் இதை மிக  அழகாகச் சொல்கிறார்:
நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு,
நேயம் கொண்ட நெறியோர்க்கு,
விஞ்சும் பொறுமை யுடையவர்க்கு,
வெல்லும் படைகள் வேறுளவோ?
இன்னும் சுருக்கமாக, நறுக்கென மீட்புநீதியை விளக்குவதென்றால், இந்தக் குறளைத்தான் குறிப்பிட வேண்டும்:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
நன்னயம் செய்வதுதான் மீட்புநீதி. அது உண்மைகளை, உறவுகளை, உயிர்களை, ஏன், உலகையே மீட்கிறது.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

ADVERTISEMENT
ADVERTISEMENT