இளைஞர்மணி

ஐசிடி அகாதெமி: புதிய திறன்களைப் பெற்று சாதிக்கலாம்!

9th Feb 2021 06:00 AM | வி.குமாரமுருகன்

ADVERTISEMENT


நாள்தோறும் எண்ணற்ற புதுப் புது விஷயங்கள் உலகில் வந்தவண்ணம் இருக்கின்றன. போட்டி நிறைந்த உலகில் போட்டியே இல்லாத துறைகள் இல்லை என்று அடித்துக் கூற முடியும். அந்த அளவிற்கு எல்லாத்துறைகளிலும் போட்டியும், போட்டியில் வெற்றி பெறுவதற்கான திறன் படைத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நானோ நொடிகளில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும் காலகட்டமிது. எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒருவரால் மட்டுமே இந்த உலகில் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும். அத்தகைய சூழலில் தங்கள் திறன்களை மெருகேற்றிக் கொண்டு வாழ்க்கையை வசமாக்க பல நிறுவனங்கள் பல்வேறு பயிற்சிகளையும், திறன் சார்ந்த வகுப்புகளையும் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் "ஐசிடி அகாதெமி ஆப் தமிழ்நாடு' ஒவ்வொருவரின் திறனையும் வளர்த்துக் கொள்வதற்கான பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

புதிய தலைமுறையைத் திறன் சார்ந்த தலைமுறையாக உருவாக்கும் முயற்சியை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் ஐசிடி அகாதெமி, இந்திய அரசின் வழிகாட்டுதலுடன் மாநில அரசு மற்றும் பல்வேறு மிகப் பெரும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த அகாதெமி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகச் சிறந்த பயிற்சி அளித்து வருகிறது.

சிறந்த ஆசிரியர்களை உருவாக்குதல், மாணவர்களின் திறன்களை வளர்த்தல், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல், தொழில் நிறுவனங்களையும் கல்வி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்தல், டிஜிட்டல் மயம் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பயிற்சிகளை இந்த அகாதெமி மேற்கொண்டு வருகிறது.

மேலும் ஐசிடி அகாதெமி , இந்திய அரசின் தேசிய திட்டமிடல் அமைப்பான "நிதி ஆயோக்' -குடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா என்பதை நோக்கி பயணிக்கும் வகையிலான பயிற்சிகளையும் இந்த அகாதெமி வழங்கிவருகிறது.

இத்தகைய பயிற்சிகளை உலகின் மிகச் சிறந்த மென்பொருள் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், ஐசிடி அகாதெமியின் கல்வியாளர்கள், புகழ் பெற்ற பட்டயக் கணக்காளர்கள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர். மிகப்பெரிய 27 நிறுவனங்கள் இதன் கார்ப்பரேட் பார்ட்னர்களாக உள்ளன.

தமிழகத்தில் உள்ள 10 முன்னணி பல்கலைக்கழகங்கள் ஐசிடி அகாதெமியின் நோடல் பல்கலைக்கழகங்கள் ஆக செயல்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு வகைகளில் திறன் பெற்றவர்களுக்கான விருதினையும் நிறுவனம் வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டின் ஐசிடி அகாதெமி, பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், மற்ற நிறுவனங்களுக்கும், பிபிஓ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் வளாக ஆட்சேர்ப்பு மூலம் பணியாளர்களைத் தந்து கொண்டிருக்கும் சேவையையும் செய்து வருகிறது. தமிழகத்தில் 350 - க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் இந்தியாவில் பெருகி வரும் இளைஞர்களின் திறன்களை வளர்ப்பதற்கும், சரியான கல்வி உள்கட்டமைப்பு மற்றும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கும், தொழில் முனைவோரை உருவாக்குவதற்கும் தேவையான பயிற்சிகளை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.

எனவே, இளைஞர்கள் வெற்றியை தனதாக்கிக் கொள்ள அத்தகைய பயிற்சிகளைப் பெறுவது அவசியம்.

மேலும் விபரங்களுக்கு: www.ictact.in என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT