இளைஞர்மணி

ஒலிம்பியாட்  போட்டிக்குத் தேர்வான மாணவர்!

எஸ்.​ பால​சுந்​த​ர​ராஜ்

சதுரங்க விளையாட்டு இருவர் விளையாடும் விளையாட்டு. விளையாடும் ஒவ்வொருவருக்கும் 16 காய்கள் என 32 காய்கள் இருக்கும். பலகையில் 64 கட்டங்கள் இருக்கும். மதியூகம், தந்திரம் இந்த விளையாட்டிற்கு தேவை. கலை மற்றும் அறிவியல் விளையாட்டு எனவும் இதைக் கூறலாம். மூளைசார்ந்த போர்க்கால விளையாட்டு என அரசர்கள் காலத்தில் கூறப்பட்டது. சதுரங்கம் 6 - ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தது என கூறப்படுகிறது.

15-ஆம் நூற்றாண்டில் சதுரங்க காய்களை நகர்த்துதல் குறித்த வரைமுறை வகுக்கப்பட்டது. தற்போது உள்ள சதுரங்க விதிமுறைகள் 19 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவு செய்யப்பட்டவை.

ஒலிம்பிக் விளையாட்டு போல மாற்றுத்திறனாளிகளுக்கு ஒலிம்பியாட் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. இதில் சதுரங்கப் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16 - ஆம் தேதி முதல் 27 - ஆம் தேதி வரை கிரீஸ் நாட்டில் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் சதுரங்க விளையாட்டுப் போட்டியில் குஜராத், மகாராஷ்டிரா, ஒரிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 5 சதுரங்க வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக வீரராக விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த கே.மாரிமுத்து பங்கேற்கிறார். இவர் தற்போது சென்னை லயோலா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஒலிம்பியாட் சதுரங்க விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""நான் பிறந்தபோது எனக்கு இரு கண்களின் பார்வையும் நன்றாக இருந்தது. சிவகாசியில் உள்ள சிவகாசி இந்துநாடார்கள்விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து படித்தேன். எனது 14- ஆவது வயதில் விருதுநகர் மாவட்ட சதுரங்க கழகம் நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு நான்காமிடம் பெற்றேன். எட்டாம் வகுப்பு படித்தபோது கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டது.

தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டும், நரம்புமண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்றுமருத்துவர்கள் கூறிவிட்டனர். அப்போது 75 சதம் பார்வை பறி போனது. கண்கண்ணாடி அணிந்து கொண்டேன்.

இதையடுத்து நான் 9 ஆம் வகுப்பு பாளையங்கோட்டை பார்வையற்றோர்பள்ளியில் சேர்ந்து படித்தேன். எனக்கு 6 வயது ஆகும்போதே
சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டதால் எனக்கு அதில் தொடர்ந்து ஆர்வம் இருந்தது. பாளையங்கோட்டைக்குச் சென்ற பின்னரும் சதுரங்கம் விளையாடுவதைநிறுத்தவில்லை. எனது 15 -ஆவது வயதில் அதாவது 2015 -ஆம் ஆண்டு "தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம்' வேலூரில்நடத்திய சதுரங்கப்போட்டியில் கலந்து கொண்டேன். அதில் மாநில அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்தேன். தொடந்து அந்த விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டேன்.

அதன் பின்னர் 2017, 2018, 2019 - ஆம் ஆண்டுகளில் பார்வையற்றவர்களுக்கான தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். 2020 - ஆம் ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றேன். அதே ஆண்டு இணையதளம் மூலம் சர்வதேச அளவிலான பார்வையற்றோர் சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 63 நாடுகள் பங்கேற்றன. அப்போது "அகில இந்திய பார்வையற்றோர் கழகம்' நடத்திய தேர்வில் நான் தேர்ச்சி பெற்று, இந்திய அணிக்கு கேப்டனாக பணி புரிந்தேன். அப்போது இந்தியாவிலிருந்து 24 பேர் 4 குழுக்களாக போட்டியில் கலந்து கொண்டனர். அந்த குழுக்கள் சர்வதேச அளவில் 33- ஆவது இடத்தைப் பிடித்தன. தொடந்து பொதுமுடக்கம் காரணமாக சிவகாசிக்கு வந்தேன். பாடங்களை ஆன்லைன் மூலம் படித்து வந்தேன். சிவகாசியில் உள்ள சர்வதேச சதுரங்க நடுவர் அனந்தராமன் என்பவரிடம் சதுரங்கப் பயிற்சி பெற்று வருகிறேன்.

2021-ஆம் ஆண்டு கிரீஸ்நாட்டில் நடைபெற உள்ள ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தேர்வு செய்யும் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் பலமாநிலங்களிருந்தும் 12 பார்வையற்றோர் வந்திருந்தார்கள். நானும் கலந்து கொண்டேன். போட்டியில் கலந்து கொண்ட 12 பேரில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

இந்தியாவிற்காக ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் எதிராளியை ஜெயிக்க வேண்டும் என நினைப்பதில்லை. போட்டியில் நான் வெற்றி பெற வேண்டும் என நினைப்பேன். எனக்கு தற்போது 75 சதம் பார்வைதெரியாது. எனினும் விடாமுயற்சியுடன் கல்லூரிப் பாடங்களை படிக்கிறேன். தொடர்ந்து சதுரங்க விளையாட்டில் பயிற்சியும் எடுத்து வருகிறேன். காலையில் படிப்பு. மாலையில் பயிற்சி என பழக்கப்படுத்திக் கொண்டேன். தினசரி யோகாசனப் பயிற்சிகளும் செய்கிறேன்.

தமிழ்நாடு பார்வையற்றோர் சங்க செயலாளர் விக்னேஷ் எனக்கு ஊக்கமளித்து வருகிறார். ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்றுப் வெற்றி பெறுவேன் என நான் மிகுந்த நம்பிக்கையுடன் பயிற்சி பெற்று வருகிறேன். வெற்றி எனக்கு மிக அருகில் உள்ளது என நான் உணருகிறேன். நிச்சயமாக இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும். ஒலிம்பிக் போட்டியைப் போல ஒலிம்பியாட் போட்டிகளுக்கும் அனைவரும் மேலும் ஒத்துழைப்பு கொடுத்தால் எதுவே எங்களுக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்'' என்றார் மாரிமுத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

SCROLL FOR NEXT