இளைஞர்மணி

மாமரத்தில் ஆன்லைன் வகுப்பு!

ந. ஜீவா


கரோனா தொற்று ஏற்படுத்திய மாற்றங்களுள் ஒன்று, ஆன்லைன் வகுப்பு. எல்கேஜி, யுகேஜி படிக்கும் குழந்தைகளில் இருந்து கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வரை ஆன்லைன் மூலம் படித்து வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் கற்க அவசியம் தேவைப்படுவது செல்லிடப் பேசி. லேப்டாப், கம்ப்யூட்டர் என்று அவரவர் வசதிக்கேற்ப ஆன்லைன் கல்வியைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலானது, தேவைப்படுவது செல்லிடப் பேசிக்கான, வலைதளத்துக்கான சிக்னல். சிக்னல் இன்றி எதுவும் செயல்படாது.

நகரங்களில் வேண்டுமானால் சிக்னல் கிடைக்கலாம். கிராமப்புறங்களில், மலைப்பிரதேசங்களில் செல்லிடப் பேசி சிக்னல் கிடைப்பது மிகவும் சிரமம்.

அப்படியானால் அங்குள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பது எப்படி? நடைமுறை சார்ந்த இந்தப் பிரச்னைக்கு ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் வித்தியாசமான தீர்வு கண்டிருக்கிறார். வீட்டிற்கு அருகில் இருந்த மாமரத்தின் கிளையிலிருந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறார்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் சோமவார்ப்பேட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது முள்ளூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் சி.எஸ்.சதீஷா.

கரோனா தொற்றின் காரணமாக வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டிய பொறுப்பு சதீஷாவுக்கு. அவர் ஒன்றாம் வகுப்பிலிருந்து 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். இந்தப் பகுதியில் செல்லிடப் பேசிக்கு சிக்னல் கிடைப்பதில்லை. இந்தப் பிரச்னைக்கு என்ன செய்வது என்று தலையைப் பிய்த்துக் கொண்டார் சதீஷா.

சாதாரணமாக செல்லிடப் பேசிக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்றால் செல்லிடப் பேசியை சில நிமிடங்கள் தலைக்கு மேலே உயர்த்திப் பிடிக்கும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. இது சதீஷாவுக்குத் தோன்றியதும் அவருடைய மூளை பரபரப்பாக வேலை செய்யத் தொடங்கியது.

""உயரமான இடத்திலிருந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்தினால் செல்லிடப் பேசிக்கு சிக்னல் நன்றாகக் கிடைக்கும் என்று தோன்றியது. எங்களுடைய வீடோ மங்களூர் ஓடுகள் வேய்ந்த ஓட்டு வீடு. மாடி வீடாக இருந்தாலாவது அங்கே இருந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம். வீட்டின் உள்ளே இருந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்தினால் சிக்னல் கிடைக்காது. அதுமட்டுமல்ல, வீட்டில் குழந்தைகள் போடும் சத்தம், டிவியின் ஒலி எல்லாமும் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைஞ்சலாகவே இருக்கும். அப்படியானால் என்ன செய்வது? ஊரில் வேறு மாடிவீடுகளும் இல்லை. அப்போதுதான் தோன்றியது, மரத்தின் மீதேறி ஆன்லைன் வகுப்புகளை நடத்தினால் என்ன? என்று. உடனே செயலில் இறங்கினேன்.

மூங்கில், மரச்சட்டங்களைக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வெளியே உள்ள மாமரத்தின் கிளைகளில் ஆன்லைன் வகுப்பறை ஒன்றை கட்டத் தொடங்கினேன்.

மலைப்பிரதேசமான இந்தப் பகுதியில் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. நானாகவே மாமரம் அருகே பூமியில் குழிகளைத் தோண்டி 20 அடி உயரம் வரை - மாமரக்கிளையின் அருகே வரும் வரை, மரச்சட்டங்களை நட்டேன். மாமரக்கிளையில் ஓர் வகுப்பறையை உருவாக்கினேன். வகுப்பறையின் மேலே உள்ள கூரைக்கு இரண்டு அடுக்குகள் கொண்ட தார்ப்பாய்களைப் பயன்படுத்தினேன். மழை நேரத்தில் வகுப்பறைக்குள்ளே மழை நீர் வராமலும், கோடைகாலத்தில் வெப்பம் தெரியாமலிருக்கவும்தான் இந்த ஏற்பாடு. இந்த மாமரக் கிளை வகுப்பறையைக் கட்டி முடிக்கவே எனக்கு இரண்டு மாதங்களாகிவிட்டன. எனக்கு உதவியாக ஒரே ஒரு கார்பென்டர் எப்போதாவது வருவார்'' என்கிறார் சதீஷா.

சதீஷாவுக்குப் பெரிய அளவுக்கு வருமானம் இல்லை என்றாலும் இதற்கான செலவுகளை எல்லாம் தானே செய்திருக்கிறார். ஆன்லைன் வகுப்புகளை நடத்த மூன்று கரும் பலகைகள், மொபைல் ஸ்டாண்ட், நன்றாக வெளிச்சம் தெரிய ஃப்ளாஷ் லைட்கள் என வாங்கியிருக்கிறார். வகுப்பறையை மஞ்சள் வண்ணத்தில் பெயிண்ட் அடித்திருக்கிறார். வகுப்பறையை அலங்கரிக்க தொட்டியில் நடப்பட்ட செடிகள். வகுப்பறைக்குள்ளே பல வண்ணங்களில் நாற்காலிகள். எந்தக் கரும்பலகையின் முன் நின்று வகுப்பு எடுத்தாலும், நல்ல வெளிச்சம் இருப்பதைப் போன்று அமைத்திருக்கிறார்.

""என்னிடம் 1-ஆம் வகுப்பிலிருந்து 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆன்லைனில் பயில்கின்றனர்.

கன்னடம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை எடுக்கிறேன். ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும்போது கரும் பலகையில் எழுதி வகுப்புகளை நடத்துவதோடு மட்டும் அல்லாமல், நிறைய அட்டைகளில் பாடம் தொடர்பான படங்களை, தகவல்களை எழுதி கேமராமுன் காட்டுகிறேன். இது மாணவர்களின் மனதில் "பளிச்'சென்று பதிந்துவிடுகிறது. அதுமட்டுமல்ல, மாணவர்களுடன் உரையாடல் மூலமாகவே பாடங்களை நடத்துகிறேன். நான் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதில்லை. வீட்டுப் பாடங்களை மாணவர்கள் எழுதி ஆன்லைன் மூலமாகவே காட்டுகிறார்கள்.

என்றாலும் என்னிடம் படிக்கும் மாணவர்கள் சிலருடைய வீட்டில் செல்லிடப் பேசி இல்லை. அவர்களுக்குத் தேவையான பாடங்கள் எழுதப்பட்ட அட்டைகளை, பேப்பர்களை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று கொடுக்கிறேன். ' என்கிறார் சதீஷா.

இப்படி புதுமையான முறையில் பாடம் நடத்தும் சதீஷா இதற்காகவே மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருதைப் பெற்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் செய்த முயற்சிகள் வித்தியாசமானவை. ஒவ்வொரு மாணவரும் ஏதேனும் பழ மரக்கன்றுகளை நட வேண்டும். அந்த மரக்கன்று மரமாக வளர்ந்தால் என்ன பழத்தைத் தரும், அதன் பயன்கள் எவை என்று மாணவர்கள் விளக்க வேண்டும். அதை விடியோ எடுத்து வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். சதீஷாவின் இந்த முயற்சிக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.

அதுபோன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, மாணவர்களுக்கு 2 வார யோகாசனப் பயிற்சி வகுப்புகளை தினமும் 30 நிமிடங்கள் ஆன்லைன் மூலம் சதீஷா நடத்தியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT