இளைஞர்மணி

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 8 : துணிவு மனிதர்க்கழகு!

ஆர். நட​ராஜ்

தைரியம் என்ற நற்பண்பு  தான் மற்ற  எல்லா குணங்களைக் காட்டிலும் சிறந்தது. ஏனைய குணங்களுக்கு ஊற்றாக அமைகிறது. "தைரியமே புருஷ லக்ஷணம்' என்பது முதுமொழி. தைரியம் என்பது சினிமாவில் வருவது போல் ஹீரோ எதிரிகளை வீழ்த்தி காதலியைக் காப்பாற்றுவது மட்டும் அல்ல!
எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் கோழைகளே. ஆபத்து வரும் போது விட்டு விட்டு ஓடத்தான் தோன்றும். ஆனால் தைரியசாலி ஒரு கணம் மற்றவர்களை விட நின்று ஆபத்தை எதிர்கொள்கிறான். அந்த ஒரு கணம் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் பண்பை எல்லாரும் வளர்த்துக் கொள்ளலாம்.
இருந்த இடம் பள்ளம் என்று பலர் தமது முழுத் திறமையை வெளிக் கொணராமல் இருந்து விடுகிறார்கள்.  அதில் எவ்வளவு குறை இருந்தாலும் அது போதும் என்று தற்போதைய சுகம் கருதி சோம்பி விடுகிறார்கள். எவன் ஒருவன் அந்த மந்தமான சுகத்திலிருந்து வெளியுலகை எதிர்கொள்ளத் தயராகிறானோ அவனே சாதனையாளன், தைரிய சாலி!
""இருபது வருடங்களுக்குப் பிறகு நாம் சாதித்ததை விட செய்யத் தவறியதுதான் நமக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும். ஆகையால் பாதுகாப்பான கரையிலிருந்து கப்பலை விடுவியுங்கள்.  படகின் பாய்களை விரியுங்கள். வர்த்தகக் காற்றின் துணையோடு பயணியுங்கள். கண்டுபிடிக்க, கனவு காண, புதியன சுவாசிக்க,  புது உலகம் காத்திருக்கிறது'' 
இது அமரிக்க எழுத்தாளர், சிந்தனையாளர் மார்க் ட்வெய்னின் அறிவுரை. நாமே ஏற்படுத்திய பாதுகாப்பு வளையத்திலிருந்து நாமே நம்மை விடுவித்துக் கொள்ள ஒரே வழி!
சாதாரண மனிதர்கள் அசாதாரண தீர, வீர செயல் புரிகிறார்கள். ஏதோ ஒரு சக்தி அவர்களை ஆட்டிப் படைக்கிறது. அதனால் தான் துணிச்சல் மற்ற எல்லா நற்பண்புகளை விட உயர்ந்தது என்று சான்றோர் கூறுகின்றனர்.
ரஷ்ய நாட்டில் செர்னோபில் என்ற இடத்தில் உள்ள அணுசக்தி மின் நிலையம்  1986- ஆம் ஆண்டு சில பாகங்கள் பழுதடைந்ததால் வெடிப்பு ஏற்பட்டு கதிர் அலைகள் பரவி அபாயகரமான நிலை ஏற்பட்டது. 
விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். முழு நிலையமும் வெடித்திருந்தால் மிகப் பெரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
ஆலையின் அடிப் பாகத்தில் ஏற்பட்ட நீர்க்கசிவு மேலும் பரவினால் அமிலங்களோடு கலந்து மிக பெரிய விபத்து ஏற்படக் கூடும். இதை தவிர்க்க ஒரே வழி 
அடித்தளம் சென்று அடைப்பான்களை மூட வேண்டும். மிக அபாயகரமான செயல். துணிச்சலுடன்  அலக்சி அனானிகோ, வலரி பெஸ்போலோவ், போரிஸ் பரனாவ் ஆகிய மூன்று டெக்னீசியன்கள்  இப்பணியை மேற்கொள்ள முன் வந்தனர். "ஸ்கூபா' சூட் அணிந்து ஆழ் கிணறில் சென்று வெற்றிகரமாக அடைப்புகளை அடைத்து இயந்திரத்தை செயலிழக்கச் செய்தனர் . மிகப் பெரிய விபத்திலிருந்து சுற்று வட்டாரம் காப்பாற்றப்பட்டது. துரதிருஷ்டவசமாக கதிர் அலை பாதிப்பால் மூவரும் உயிரிழந்தனர். ஆனால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினர்.
அமரிக்காவில் கருப்பர்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்ற போராட்டம் பல வருடங்களாக இருந்து வந்தது. அதில் ரோசா பார்க்ஸ் என்ற பெண்ணின் துணிச்சலான செயல்கள், சமூக உரிமைகளுக்குப் போராடிய முதல் பெண்மணி என்ற பெயரை ஈட்டித் தந்தது. பேருந்துகளில் வெள்ளையருக்குத் தனி இடம் கருப்பருக்கு தனி இருக்கை என்று பாகுபாடு அமெரிக்காவில் பல மாநிலங்களில் இருந்த காலம்.  
அலபாமா மாநிலத்தை சேர்ந்த ரோசா பார்க்ஸ் இன வேறுபாட்டை ஏற்காது 1955-ஆம் வருடம் டிசம்பர் ஒன்றாம் நாள் எப்போதும் போல் பேருந்தில் பயணிக்கையில் வெள்ளையருக்கான இருக்கையில், பஸ் ஓட்டுநர், நடத்துநர் எச்சரிக்கையை மீறி, அமர்ந்தார்.  கைது செய்யப்பட்டார். இன வெறியர்களிடமிருந்து வந்த பல கொலை மிரட்டல்களுக்கு அஞ்சாமல் உரிமைகளுக்காகப் போராடினார். கருப்பரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. கருப்பர்களின் சம உரிமைப் போராட்டத்திற்கு ஜவுளி தொழிற்சாலையில் சாதாரண தையல்காரி ரோசா பார்க்ஸ் செய்த துணிச்சலான செயல் அடித்
தளமாகவும், சம உரிமை முடிவில் கிடைத்ததற்கும் வழி வகுத்தது. அவர் கைது செய்யப்பட்ட நாள் டிசம்பர் ஒன்று. "ரோசா பார்க்ஸ் உரிமை நாளாக' கலிபோர்னியா மாநிலத்தில் அனுசரிக்கப்படுகிறது.   சாதாரண செயல், பஸ்ஸில் விதி மீறி அமர்ந்தது. சாதாரண பெண்மணி ரோசா செய்தது. ஆனால் அசாதாரண மாற்றம் விளைந்தது ஒரு துணிச்சலான செயலால்!  
கல்பனா சாவ்லாவை யாரும் மறக்க முடியாது. விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்த இந்திய பெண்மணி. 
அரியானா மாநிலத்தில் பிறந்து வளர்ந்த கல்பனா, பொறியியல் படிப்பு முடித்து விட்டு உயர் கல்விப் படிப்பிற்கு அமெரிக்கா சென்று அப்துல் கலாம் வழியில் ஏரோனாடிக்ஸ் என்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டமும் விண்வெளிக்கலங்கள் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்து பணியாற்றினார். 
முதல் விண்வெளி பயணம் 1997-இல் "கொலம்பியா' என்ற விண்வெளிக்கலத்தில், இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம் செய்த பெண் என்ற சாதனை. பின்பு இரண்டாவது முறையாக 2003-இல் விண்வெளியில் ஆறு சக விண்வெளி நிபுணர்களுடன் வெற்றிகரமாகப் பயணம் முடித்து திரும்புகையில் பூமியின் மேல் வளி மண்டலத்தைக் கடக்கும்போது விண்கலம் நொறுங்கி, பயணித்த ஏழு வீரர்களும் உயிரிழந்தனர். வீர மரணம். ஆனால் அதற்குள் அவர்களது சாதனை அளவிட முடியாதது. அவர்களது தியாகம் வீணாகவில்லை . விண்விளியில்  பூமி, பூமியின் வளி  மண்டலம், விண் வெளி பிரயாணத்தின்போது தேவையான உடல் நலம், உயிர்ப்  பாதுகாப்பு சம்பந்தமான எண்பது நுணுக்கமான தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேற்கொண்டனர் .
கல்பனா சாவ்லா ஒரு கோடி மைல்களுக்கு மேலாக விண்விளியில் பூமியை 252 முறை சுற்றி விண்வெளியில் 37 நாட்கள் 14 மணிநேரம் வளைய வந்துள்ளார்.
கல்பனா சாவ்லாவின் துணிச்சலான பணி உலக அளவில் போற்றப்படுகிறது. தமிழக அரசு கல்பனா சாவ்லா பெயரில் வீ,ர தீர செயல்களுக்கான விருது வருடந்தோறும் வழங்குகிறது. 
குலாம் தஸ்தகீர் போபால் ரயில் நிலைய உதவி ஸ்டேஷன் மாஸ்டர். 1984 டிசம்பர் 3-  ஆம் தேதி போபால் விஷ வாயு விபத்தின் போது அவர் இரவில் பணியில் இருந்தார். போபால் ரயில் நிலையத்தில் 1000 பயணிகளுடன் மும்பையில் இருந்து கோரக்பூர் செல்லும் ரயில் நின்று கொண்டிருந்தது. ஸ்டேஷன் அலுவலகத்திலிருந்து வெளியில் வந்தபோது உடம்பில் அரிப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுவதை உணர்ந்த தஸ்தகீர் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை யூகித்தார். விஷ வாயு விபத்து  பற்றி அப்போது செய்தி வரவில்லை. பணியில் இருந்த தஸ்தகீர் அபாயகரமான நிலையை உணர்ந்து இன்னும் இருபது நிமிடங்களுக்குப் பிறகு புறப்பட நின்று கொண்டிருந்த ரயிலை, உடனே புறப்பட உத்தரவிட்டு அதற்கு வழியைச் சரி செய்து கொடுத்தார். அதனால் மிக பெரிய உயிரிழப்பு தடுக்கப்பட்டது. 
தஸ்தகீர் தனது குடும்ப நலனையும்  பாராது தனக்கேற்படும் பாதிப்பையும் பொருட்படுத்தாது கடமையாற்றியதால் சுமார் ஆயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. பிரமிக்க வைக்கும் இந்த சமயோஜித துணிச்சல் காலம் தோறும் போற்றப்பட வேண்டும். 
வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது முடிவு எடுக்க வேண்டிவரும். எதைப் படிக்க வேண்டும்;  எந்த வேலை செய்ய வேண்டும்;  எங்கு செல்ல வேண்டும்; யாரிடம் எதனை, எப்படிப் பேச வேண்டும் - இது போன்ற எவ்வளவோ முடிவுகள் நாம் எடுக்கிறோம். நாம் எடுக்கும் முடிவுகள் சில சமயம் சாதகமாகவும், பல சமயங்களில் பாதகமாகவும் முடிகிறது. ஆனால் சில சமயம் ஒரு முக்கியமான முடிவு எடுக்க நேர்கையில் பயம் நம்மை ஆட்கொள்கிறது. தைரியம் வராமல் முடிவு எடுக்க தாமதிக்கிறோம் .
""நாம் எடுக்கும் முடிவுகள் எந்த ஆதாரத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கு எளிதான யுக்தி இருக்கிறது'' என்கிறார் மனித உரிமைப் போராளி மார்டின் லூதர் கிங்க்.  முடிவு எடுக்கும் முன்னால் நம்மில் உள்ள கோழைத்தனம்  "இது பாதுகாப்பானதா' என்ற கேள்வியை எழுப்பும். பயந்தாங்கொள்ளிகள் சுய பாதுகாப்பு கருதி மழுப்பலாக மொளனம் காப்பார்கள். சந்தர்ப்பவாதம் "இது கண்ணியமானதாக இருக்குமா' என்று கேட்கும் கேள்வி மூன்றாவதாக நம்மில் உள்ள அகந்தை "இது பிரபலமாக இருக்குமா' என்ற கேள்வி எழுப்பும். ஆனால் நாம் பதில் சொல்ல வேண்டியது மனசாட்சிக்கு. எந்த முடிவு நியாயமானதோ சரியானதோ அதுவே உகந்த முடிவாக இருக்கும்.
இராணுவ தளபதி மானெக்ஷா  படை வீரர்களுக்கு அறிவுறுத்தியது தார்மீக துணிச்சல். எது  சரி, தவறு என்பதை ஆராய்ந்து தைரியமாக சரியானதைச் சொல்வதுதான் தார்மீக துணிச்சல். இதையே தான் "எண்ணித்துணிக கருமம்' என்கிறார் வள்ளுவர்.
மானெக்ஷா ராணுவத்தினர் பணிசெய்யும் எல்லைப் பகுதிகளுக்கு சென்று பார்வையிடுவாராம். தளபதியாக உள்ளவர்,  படைகள் செய்தவை, செய்யத் தவறியவை இரண்டையும் ஆராய வேண்டும். ஆனால் மானக்ஷா வீரர்களின் சிறு சிறு செய்கைகளையும் பாராட்டி விட்டுச் சென்றுவிடுவார். அந்த பாராட்டே வீரர்களுக்கு  உந்துதலாகவும் தவறுகளைத் திருத்திகொள்ள வழியாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும், முடிவாக துணிச்சலுக்கும் வழி வழிவகுக்கும். மானெக்ஷாவின் தலைமைப் பண்புதான் இந்திய ராணுவர்களின் சாகச சாதனைகளுக்கு அடித்தளம் என்றால், அது  மிகையாகாது. 
""சாதாரண சந்தர்ப்பங்களில்- நிகழ்வுகளில் - ஒரு நிலைப்பாட்டை எடுப்பது எளிது. ஆனால் அசாதாரண நேரங்களில் நடுநிலையாக தீர்க்கமான முடிவுகள் எடுப்பது தான் ஒருவரது உயர்ந்த நற்பண்பை நிலை நிறுத்துகிறது. அதுவே உண்மையான தைரியம்'' என்கிறார் மார்டின் லூதர் கிங்க். விட்டில் பூச்சிகள் போல எங்கு வெளிச்சம் தெரிகிறதோ, அங்கு சென்று மடியும் வேடிக்கை மனிதர்கள்தாம் சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் போல் வலம் வருவதை பார்க்கிறோம்! 
"அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே' என பாரத மக்களின் நிலைமையைப் பற்றி நெஞ்சு பொறுக்காமல் வெதும்பிப் பாடியவர் பாரதி. அந்த நிலையில் பலர் இன்னும் இருக்கின்றனர் என்பது தான் வேதனை. 
"அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச  வருவதும் இல்லை' என்ற தேவாரப் பாடலை மனதில்  இருத்தி நெஞ்சை நிமிர்த்தி வெற்றி நடை போடுவோம்! 
போன வார கேள்விக்குப் பதில்:
ஐக்கிய நாடுகள் சபை 2014 - ஆம் வருடம் 
இளைஞர்கள் திறன் மேம்பாட்டு தினம்  உலகெங்கிலும் அனுசரிக்கும்படி அறிவித்தது.
இந்த வார கேள்வி: 
போபால் விஷ வாயு எந்த தொழிற்சாலையிலிருந்து கசிந்தது? விஷ வாயுவின் இரசாயனப் பெயர் என்ன?
(விடை, அடுத்த வாரம்)

கட்டுரையாளர்:

மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT