இளைஞர்மணி

எதிர்கொள்ளுங்கள்...  பிரச்னைகளை!

27th Apr 2021 06:00 AM | வி.குமாரமுருகன்

ADVERTISEMENT


புதிய புதிய கோணத்தில் புதிய புதிய வடிவங்களில் நாள்தோறும் பிரச்னைகள் வருவது இயற்கை. அப்படி பிரச்னைகள் வரும்போது அதை எதிர்கொள்வதற்குத் தேவையான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் எல்லாப் பிரச்னைகளுமே தீர்க்கக் கூடிய ஒன்றாக மாறிவிடும்.

இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கரோனா என்ற பெருந்தொற்று இந்த உலகில் ஏற்படும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

இப்போது கரோனா என்ற வார்த்தையை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த நிலையில் உலகம் அந்தப் பிரச்னையை எதிர்கொண்டு சமாளித்து வருகிறது.

கடந்த ஆண்டில் கரோனா நோய்த்தொற்று தொடக்கநிலையில் இருந்த போது அதைக் கண்டு உலகமே பயந்தது. "ஐயோ என்ன செய்யப் போகிறோம்' என்று உலகத் தலைவர்கள் விழிபிதுங்கி நின்றனர். அந்த வைரஸின் வித்தியாசமான தன்மையை சமாளிக்கக்கூடிய தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் உள்ள சிரமங்களை உலக நாடுகள் அறிந்து இருந்தன.

ADVERTISEMENT

இருப்பினும் உலக நாடுகள் தன்னம்பிக்கையுடன் அந்த வைரûஸ எதிர்த்துப் போராடக்கூடிய தடுப்பூசியை கண்டுபிடித்தன. அதன் விளைவாக மக்கள் மத்தியில் பதற்றம் தணிந்து ஓரளவு இயல்பான நிலை உருவானது.

சரி இத்துடன் பிரச்னை தீர்ந்து விடும் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில் உருமாறிய கரோனா என்ற இரண்டாவது அலை வீசத் தொடங்கிவிட்டது. இப்போதும் "ஐயோ பிரச்னை வந்து விட்டதே' என்று கருதாமல் அதை முறியடிக்கக் கூடிய நடவடிக்கைகளில் அரசும், விஞ்ஞானிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி உலகமே ஒரு குறிப்பிட்ட வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பிரச்னையே இல்லாமல் ஒரு மனிதன் வாழ நினைத்தால் அது சாத்தியமில்லை என்பதை உணர வேண்டும். இன்றைய சூழலில் அதுபோன்ற வாய்ப்பு மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை . ஏதோ ஒரு வகையில் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொருவரும் பிரச்னைகளைச் சந்தித்து தான் ஆக வேண்டும்.

ஏழை முதல் பணக்காரர் வரை ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். எல்லாப் பிரச்னைகளுக்கும் நிச்சயம் ஒரு தீர்வு உண்டு.

அதனால்தான் கணித பாடத்தில் கூட கணக்குகளை "பிராப்ளம்' என்றே கூறுகின்றனர். கணிதத்தில் எல்லா பிராப்ளங்களுக்கும் தீர்வு இருப்பது போல மனித வாழ்க்கையின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதில் தான் நமது திறமை அடங்கி இருக்கிறது.

அதைவிட்டு விட்டு பதற்றத்துடன் அந்தப் பிரச்னையைப் புறக்கணித்து நகர்ந்தால் அந்த பிரச்னை நம்மை புறக்கணிக்காமல் நம்மைத் தொடர்ந்து வரும். அதோடு மட்டுமன்றி வேறு, வேறு வடிவங்களில் நம்மைப் பின்தொடர்ந்து சிக்கலைப் பெரிதாக்கவும் செய்யும்.

எனவே பிரச்னைகள் வரும்போது சற்று நிதானத்துடன் அதை அலசி ஆராய்ந்து அது போன்ற பிரச்னைகள் வேறு எவருக்கும் வந்திருக்கிறதா என்பது குறித்து அறிந்து கொண்டு அதற்கு அவர்கள் கையாண்ட வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு செயல்படலாம்.

இல்லை என்றால் அவர்கள் அந்த பிரச்னையைக் கையாளும்போது ஏற்பட்ட தோல்விகள் எவை என்பதைத் தெரிந்து கொண்டு, அந்த தோல்விகள் நேராத வண்ணம் நாம் இப்போது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைத் திட்டமிடலாம்.

இப்படி ஒருவரின் தோல்வியிலிருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அல்லது தொழிலில் வெற்றி பெற்றவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவோ பிரச்னைகளைக் கடந்து தான் உயர்ந்த நிலையை எட்டியிருப்பார்கள். அவர்களின் அந்த வெற்றிக்கான காரணங்களை நாம் உன்னிப்பாக கவனித்தால் அவர்கள் ஒவ்வொரு நாளும் மேற்கொண்ட செயல்கள் எவை? அவற்றில் ஏற்பட்ட பிரச்னைகள் எவை ?

அடுத்த முறை அந்த பிரச்னை ஏற்படாமல் செய்ய வேண்டிய மாற்றங்கள் எவை? என்பதைத் திட்டமிட்டு செய்திருப்பார்கள் என்பதை உணர முடியும்.

எனவே தன்னம்பிக்கையும், திட்டமிட்டு செயல்படும் தன்மையும் மிகப்பெரிய முன்னேற்றத்தை நமக்கு அளிக்கும்.

பிரச்னைகள் இருந்தால் தான் புதிய வழிகள் தோன்றும். புதிய வழிகள் பிறந்தால்தான் பயணமும் எளிதாகும் பாதையும் புதிதாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT