இளைஞர்மணி

புத்தகங்கள்... நல்ல நண்பர்கள்!

27th Apr 2021 06:00 AM | - கோமதி எம்.முத்துமாரி

ADVERTISEMENT

 

"ஒரு நல்ல புத்தகம், நூறு நண்பர்களுக்குச் சமம்' என்பார்கள்.

புத்தகங்களை வாசிப்பது அறிவைப் பெருக்குகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையைச் சீராக்குகிறது. மொழித்திறனை வளர்க்கிறது. நினைவுத்திறனை அதிகரிக்கிறது. பகுத்தாராயும் திறனை வளர்க்கிறது. கவனச்சிதறலை தவிர்க்கிறது. எழுத்துத்திறனை மேம்படுத்துகிறது. மன அமைதியை ஏற்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கிறது.

இலக்கியம் சார்ந்த புத்தங்களை வாசிப்பதுதான் வாசிப்பு என்று பொதுவான கருத்து நிலவுகிறது. உண்மையில் வாசிப்பு என்பது எந்தத் துறை சார்ந்தும் இருக்கலாம். ஆனால், பலதரப்பட்ட பன்முக புத்தகங்களை வாசிப்பது ஒரு நல்ல வாசிப்பாளனாக உங்களை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ADVERTISEMENT

உங்கள் வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்க , வாழ்வில் வெற்றி பெற வாசிப்புப் பழக்கம் நிச்சயம் உதவும்.

உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றுவதற்கும் ஆரோக்கியமான புதிய சிந்தனைகளை வளர்ப்பதற்கும் புதியனவற்றைக் கற்றுக் கொள்வதற்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தேவை வாசிப்பு.

ஒருவர் அறிவுரீதியாக தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனில் தொடர்ந்து படிக்க வேண்டும். புதிய நுட்பங்களையும் உத்திகளையும் கற்றுக்கொள்வதன் மூலமே உங்கள் துறையில் திறமையை மேம்படுத்திக் கொண்டு, சாதிக்க முடியும். நீங்கள் பிறரிடமிருந்து வித்தியாசமானவராகவும் அறிவானவராகவும் காட்சியளிப்பீர்கள்.

வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், ஏற்கெனவே வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் அதை மேம்படுத்திக் கொள்வதற்கும் இதோ சில வழிகள்:

வாசிப்புக்கு முன்னுரிமை

உங்கள் அன்றாடச் செயல்களில் வாசிப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை வாசிப்புக்கு என்று ஒதுக்குங்கள்.

நீங்கள் எவ்வளவு பிசியாக இருந்தாலும், என்ன வேலையில் இருந்தாலும் குறைந்தது 20 நிமிடங்களாவது படிக்க வேண்டும் என முடிவெடுத்து வாசிப்பு பழக்கத்திற்கான முதற்படியை எடுத்து வையுங்கள்.

நல்ல புத்தகங்களைக் கண்டுபிடியுங்கள்

நல்ல தரமான புத்தகங்களைக் கண்டுபிடிப்பது உண்மையில் சவாலான செயலாகும். உலகம் முழுவதும் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. இவ்வளவு புத்தகங்களை எப்படிப் படிப்பது, நமக்குரியதை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று சோர்வடைய வேண்டாம். இது நீங்கள் படிக்கத் தொடங்குவதற்கு முன்பே சோர்வை உண்டாக்கும். அனைவராலும் அனைத்து புத்தகங்களையும் படித்து முடிக்க முடியாது என்பதே உண்மை.

எனவே, புத்தகங்களைத் தேர்வு செய்வது படியுங்கள். இதற்கு இரண்டு வழிகளை கையாளலாம். ஒன்று நீங்கள் முதலில் எதைப்பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறீர்களோ அதை நோக்கிச் செல்லலாம். உதாரணமாக வரலாறு குறித்து அறிய விரும்பினால் அது தொடர்பான புத்தகங்களைத் தேடிப் படிக்கலாம்.

இரண்டாவதாக, உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரைத் தேர்வு செய்து கொண்டு அவர் எழுதிய புத்தங்களைப் படிக்கத் தொடங்கலாம். நல்ல தரமான, சுவாரசியமான புத்தகங்கள் உங்களுக்கு வாசிப்பின் மீதான காதலை உண்டாக்கும்.

வாசிப்பை ரசிப்பது எப்படி?

எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இருந்தால் மட்டுமே அதில் வெற்றி காண முடியும். எனவே, வாசிப்பில் ஆர்வம் அதிகரிக்க வேண்டுமெனில் வாசிப்பை ரசிக்க வேண்டும். உங்களுக்கு எவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கிறதோ அவை சார்ந்த புத்தங்களைப் படியுங்கள். அவ்வாறு படிக்கும்போது அவற்றைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் உண்டாகும்.

நேரத்தைத் திட்டமிடுங்கள்

உங்களுடைய ஒருநாள் 24 மணி நேரத்தை எதற்குச் செலவிடுகிறீர்கள் என்று பட்டியலிடுங்கள். அதில் தேவையில்லாமல் செலவழிக்கும் நேரத்தை கண்டறிந்து அந்த நேரத்தை வாசிப்புக்கு ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் அலாரம் வைத்துக்கொள்ளுங்கள். "நீ படிக்க வேண்டிய நேரம் இது' என்று அந்த ஒலி உங்களுக்கு நினைவுபடுத்தும்.

இப்போது அனைவரும் டிவி, செல்போன்களில் மூழ்கியிருக்கிறார்கள். இதனால் உடல்நலமும் மனநலமும்தான் பாதிக்கப்படுகிறது. எனவே, உங்களுடைய நேரத்தை வீணடிக்கும் அந்த செயல்களைத் தவிர்த்து உங்களுடைய பொன்னான நேரத்தை அனைத்து விதத்திலும் பயன்தரும் வாசிப்புக்குப் பயன்படுத்துங்கள்.

முடிந்தவரை படியுங்கள்!

ஒவ்வொரு நாளும் உங்களால் எவ்வளவு நேரத்தை வாசிப்புக்கு என ஒதுக்க முடியுமோ அவ்வளவு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். உதாரணமாக வேலைக்குப் போகும் நாள்களில் 30 நிமிடங்கள் வாசிப்புக்கு என நீங்கள் திட்டமிட்டுக்கொண்டால் வேலை இல்லாத அல்லது விடுமுறை நாள்களில் அதனை பல மணி நேரமாகக் கூட மாற்றிக் கொள்ளலாம்.

அதிகாலையில் வாசிப்பது நல்ல பழக்கம்!

தூங்கி எழுந்தபின் அதிகாலையில், உங்கள் மனம் தெளிவாகவும், உடல் நிதானமாகவும் இருக்கும். உங்களுக்கான அறிவை முதலீடு செய்வதற்கான சரியான தருணம் இது.

உங்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்களை நீங்கள் அதிகாலையிலே செய்ய வேண்டும். அது முக்கியமானதும் கூட. பெரிய சாதனைகளை அடைய சிறிய மாற்றங்களை மேற்கொண்டால் போதுமானது. எனவே, அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

வேகமாக வாசிக்க பயிற்சி செய்யுங்கள்

உங்கள் கவனத்தைத் திசைதிருப்பும் அனைத்தையும் உங்களைவிட்டு தூரத்தில் வைத்துவிடுங்கள். இதுவும் உங்களுடைய வாசிப்பை வேகப்படுத்தும். முடிந்தவரை அமைதியான சூழ்நிலையில் படித்தால் வேகமாகப் படிக்கலாம்.

இதற்கு ஒருபடி மேலாக, நீங்கள் மெதுவாக வாசிக்கும் நபராக இருந்தால், நாள் ஒன்றுக்கு 10 அல்லது 20 நிமிடம் மட்டும் வேகமாக படிக்க தினமும் முயற்சி செய்து வாருங்கள். இது விரைவில் உங்களுக்கு ஒரு நல்ல பலனைத் தரும்.

இன்னும் சில...

புத்தகங்களை தேடும்படி வைத்திருக்க வேண்டாம். உங்களுக்கு மிக அருகிலேயே அவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

புத்தகங்களின் அடுக்கில் ஒரு பேனா மற்றும் நோட்புக் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் படிப்பதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை எழுதி வையுங்கள் அல்லது புத்தகங்களில் கோடிட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

குறைந்தது 20 நிமிடங்களாவது நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த ஓர் எச்சரிக்கை அலாரத்தை வைத்துக் கொள்ளுங்கள். இந்த கால நேரத்தை படிப்படியாக அதிகரிக்கவும் முயற்சி செய்யுங்கள். கால நேரம் அதிகமாக அதிகமாக உங்களுக்கு வாசிப்பின் மீதான ஆர்வம் கூடுவதை நீங்களே கவனிக்கலாம்.

பயணத்தில் இருக்கும்போது கண்டிப்பாக ஒரு புத்தகத்தை கையில் வைத்திருங்கள். வீணாகும் நேரத்தை புத்தகத்தைக் கொண்டு நிரப்பலாம்.

புத்தகங்கள் மீது ஆர்வமுள்ளவர்களிடம் நீங்கள் படித்த புத்தகங்கள் குறித்து பேசுங்கள். நல்ல புத்தகங்களைப் பரிந்துரைக்க கேளுங்கள்.

வாசிப்பின் மீதான உங்களுடைய அனுபவங்களையும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களையும் வாசிக்கச் செய்யுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT