உலகம் முழுவதும் 15 வயதிலிருந்து 24 வயது வரையுள்ள இளம் பருவத்தினரை இளைஞர்கள் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், இந்தியாவில் 15 வயதிலிருந்து 35 வயது வரையுள்ள, திருமணமாகாத அனைவரும் இளைஞர்கள் என்றே கருதப்படுகின்றனர். சிறுவர்களாக இருக்கும்போது, பெற்றோரை அதிகமாகச் சார்ந்து வாழும் இளம் பருவத்தினர், 15 வயதிலிருந்து சுயமாக முடிவெடுக்கத் தொடங்குகின்றனர். இந்த வயதில், பெற்றோரைத் தவிர்த்து, நண்பர்கள், நடிகர்கள், தலைவர்கள், மனதிற்குப் பிடித்தவர்கள் என அவர்களின் மேல் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இளம் வயதினரின் ஆர்வம் எதில் அதிகமாக செல்கிறதோ, பிற்காலத்தில் அதன் வழியிலேயே அவர்கள் பயணிக்கத் தொடங்குகிறார்கள். இளம் வயதில் அவர்கள் தவறான வழியைத் தேர்வு செய்து, அதன் வழியே சென்று விடாமல் தடுத்திடவும், அவர்களை நல்வழிப்படுத்தி வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான வழியில் கொண்டு செல்லவும் சுயமேம்பாட்டுப் பயிற்சி அவசியமாகிறது.
இளைஞர்களுக்கான சுயமேம்பாட்டை வலியுறுத்துவது மட்டுமின்றி, அவர்களுக்கு சுயமேம்பாடு குறித்த பல்வேறு சிறப்புத் தகவல்களையும் வழங்கும் விதமாக ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த இணையதளத்தில் மனக்கவலை (ஆன்சிட்டி), பண்பாடு (கல்ச்சுரல்), மனச்சோர்வு (டிப்ரெஸ்சன்), உணவுப் பழக்கங்கள் மற்றும் முறையின்மை (ஈட்டிங் ஹேபிட்ஸ் அண்ட் டிஸ்ஸார்டர்ஸ்), சுயமேம்பாடு (எம்பவர்மென்ட்), உடல் நலம்
மற்றும் நலம் (ஹெல்த் அண்ட் வெல்னெஸ்), மனநலம் (மென்டல் ஹெல்த்), உறவுகள் (ரிலேசன்ஷிப்), தற்கொலை (சூசைடு), இளைஞர் கதைகள் (யூத் ஸ்டோரிஸ்) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு முதன்மைத் தலைப்பின் கீழும் பல்வேறு துணைத் தலைப்புகள் தரப்பட்டிருக்கின்றன. இத்துணைத் தலைப்புகளைச் சொடுக்கினால், அந்தத் தலைப்பு பற்றிய முழுமையான விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அந்த விளக்கங்களின் கீழே, உங்களை மேம்படுத்துங்கள் (எம்பவர் யுவர்செல்ஃப் ) எனும் தலைப்பின் கீழ் அந்தத் துணைத் தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு உள் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த உள் தலைப்புகளில் சொடுக்கி உள்ளே சென்றால், அந்த உள் தலைப்பு தொடர்பான பல்வேறு செய்திகளையும் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் இளைஞர்கள் மட்டுமின்றி, தங்களைத் தனித்துவத்துடன் உயர்த்திக் கொள்ள விரும்புபவர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த இணையதளத்தைப் பார்வையிட விரும்புபவர்கள் https://youthempowerment.com/ எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.