இளைஞர்மணி

ஆய்வுக்குத் தடை... விண்வெளி ஒளி!

எஸ். ராஜாராம்

விஞ்ஞானம் வளர வளர அதனால் ஏற்படும் நன்மைகளுக்கு இணையாக கெடுதல்களும் இருப்பதைத் தவிர்க்க முடியாது போலும். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகின்றன. 

புவி கண்காணிப்பு, இணைய சேவை, வேளாண் தொழில்நுட்பச் சேவை என பல துறை பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. என்றாலும் இப்போது அவற்றால் ஒளி மாசு என்ற புதுவித பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. செயற்கைக்கோள்கள், புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் விண்வெளிக் குப்பைகள் ஆகியவற்றிலிருந்து ஏற்படும் ஒளியால் இரவு வானமானது 10 சதவீதம் கூடுதல் பிரகாசமாக உள்ளது. பிரபஞ்சத்தை ஆராயும் வானியல் ஆய்வாளர்களின் பணியையும் இந்த செயற்கை பிரகாசம் 
பாதிக்கிறது.

பூமியின் சுற்றுப் பாதையில் செயலிழந்த செயற்கைக்கோள்கள் உள்பட 9, 200 டன்களுக்கும் அதிகமான விண்வெளிப் பொருள்கள் தற்போது உள்ளன. இவை ஒளி மாசை ஏற்படுத்துவதுடன், ஒன்றுக்கொன்று மோதும் அபாயத்தையும் கொண்டுள்ளன. பிரிட்டனிலிருந்து வெளியாகும் "ராயல் அஸ்ட்ரானமி சொசைட்டி' என்ற இதழில் இந்த ஒளி மாசு குறித்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. விண்வெளிப் பொருள்களிலிருந்து பிரதிபலிக்கும் மற்றும் சிதறடிக்கப்படும் சூரிய ஒளி எவ்வாறு தரையிலிருந்து தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வு முடிவுகளைப் பாதிக்கிறது என்பதை அந்த ஆய்வறிக்கை விளக்குகிறது.

"தரையில் ஏற்படும் ஒளி மாசு போலன்றி, வானத்தில் தோன்றும் செயற்கை ஒளியை பூமியின் மேற்பரப்பில் பெரும்பகுதியில் காணலாம். இருண்ட வானத்தை ஆய்வு செய்வதற்காக வானியலாளர்கள்  ஒளியைவிட்டு வெகு தொலைவில் ஆய்வகத்தை அமைப்பார்கள். ஆனால், இந்த செயற்கை ஒளியால் அவர்களது நோக்கமே சிதைந்துவிடுகிறது' என்கிறார் ஆய்வறிக்கையின் இணை ஆசிரியர் ஜான் பேரன்டைன்.

சமீபகாலமாக கிரகத்தைச் சுற்றிவரும் பொருள்களின் எண்ணிக்கை தொடர்பாக, குறிப்பாக மெகா விண்மீன்கள் எனப்படும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் குறித்து வானியலாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். 
விஞ்ஞானிகள் பயன்படுத்தும் ஒளியியல் மற்றும் வானியல் வசதிகள் மீது இந்த மெகா விண்மீன்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்து கொள்வதற்காக ராயல் அஸ்ட்ரானமி சொசைட்டி பல்வேறு பணிக் குழுக்களை நிறுவியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் விண்வெளி அமைப்புகள், வடிவமைப்பில் மாற்றம் செய்வதன் மூலம் தங்களது விண்கலத்தின் பிரகாசத்தைக் குறைக்கும் பணியை அண்மைக்காலமாக மேற்கொண்டுள்ளன. இருள் மட்டுமல்ல, ஒளியும் ஆபத்துதான் போலும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT