இளைஞர்மணி

வேலையை மட்டும் செய்யுங்கள்!

கோமதி எம். முத்துமாரி


அலுவலகத்தில் நீங்கள் வேலையில் மூழ்கியிருக்கும்போது திடீரென சக ஊழியர் ஒருவர் உங்களிடம் வந்து பேச்சுக் கொடுக்கிறாரா?

வேலை நேரத்தில் உங்கள் அலுவலக நண்பர் ஒருவர் வந்து "பிரேக் போகலாமா?' என்று அடிக்கடி கேட்கிறாரா?

இன்னும் சில நிமிடங்களில் உங்களுடைய வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது வேண்டுமென்றே ஒருவர் வந்து உங்களைத் தொந்தரவு செய்கிறாரா? சக ஊழியரை, நண்பரைப் பகைத்துக் கொள்ளாமல், அதேசமயம் வேலையும் கெடாமல் இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்று தீவிரமாக யோசனை செய்கிறீர்களா? உங்களுக்கு உதவுவதற்காக இதோ சில வழிகள்:

யாருடனும் "பேசாத நேரம் -தொந்தரவு செய்யாதீர்கள்'

நாம் எவ்வளவுதான் தீவிரமாக, திட்டமிட்டு வேலை செய்து உரிய நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், இப்படி சக ஊழியர்கள் நம்மிடம் வந்து தேவையில்லாமல் அரட்டை அடித்தாலோ அல்லது தேநீர் அருந்த வெளியில் செல்ல அழைத்தாலோ கண்டிப்பாக இடையூறு ஏற்படத் தான் செய்யும்.

அலுவலகத்தில் உங்கள் இருக்கைக்கென குறிப்பிட்ட சில மணி நேரங்களை "யாருடனும் பேசாத நேரம்' என்று திட்டமிட்டுக் கொள்ளுங்கள். உதாரணமாக வேலை அதிகமிருக்கும் நேரங்களில் "பேசாத நேரம் - தொந்தரவு செய்யாதீர்கள்' என்று எழுதி உங்களுடைய இருக்கையில் ஒட்டிவிடுங்கள். குறிப்பாக உங்களுடைய வேலைகளை முடித்துக் கொடுக்க வேண்டிய நாட்களில், நேரங்களில் இதனைப் பின்பற்றலாம்.

அவ்வாறு செய்தால் உங்கள் வேலையை எந்தவித இடையூறுமின்றி சரியான நேரத்தில் முடிப்பதுடன், அர்ப்பணிப்புடன் நீங்கள் வேலையில் ஈடுபடுவதற்காக பிறர் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள்.

மேலும் இது முழுக்க முழுக்க உங்களுக்கான நேரமாக மட்டுமே இருக்கும். உங்கள் வேலையில் புதுமைகளைப் புகுத்துவது எப்படி? என்று புதிய வழிமுறைகளை நோக்கி உங்கள் சிந்தனையைச் செலுத்தலாம்.

எடுத்துக்காட்டாக இருங்கள்

எந்த ஒரு விஷயத்தையும் சொல்லி புரியவைப்பதை விட செயலில் காட்டுவதே அதீத தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஓர் அலுவலகத்தில் ஓர் ஊழியரிடம் இருப்பதைவிட ஒட்டுமொத்த ஊழியர்களிடமும் "பேசாத நேரத்தை' கடைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் ஊழியர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த அலுவலகத்திலும் ஒரு நவீன கலாசாரம் பிறக்கும்.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அதேபோல ஊழியர்கள் மீதான மதிப்பு நிறுவனத்தினருக்கு கூடும். உங்கள் நிறுவனமும் நீங்களும் தனித்துவமாக விளங்குவீர்கள்.

நிறைய தந்திரம் தேவை

ஒரு வேலையை கடினமாகச் செய்வதைவிட புத்திசாலித்தனத்துடன் செய்வது நல்லது.

நீங்கள் வேலை செய்யும்போது யாரேனும் வந்து இடையூறு செய்தால், நீங்கள் செய்யும் வேலையை முடிக்க அவர்களிடம் உதவி கேளுங்கள். உங்களுக்கு விருப்பமில்லை என்றாலும், அவர்களிடம் கேளுங்கள்.

அவர்கள் உதவி செய்யும்பட்சத்தில் உங்களுடைய வேலை சீக்கிரமாக முடியும்.
அவ்வாறு யாரிடமாவது நீங்கள் உதவி கேட்கும் பட்சத்தில் அடுத்த முறை அவர்கள் உங்களைத் தேடி வருவது படிப்படியாகக் குறைந்துவிடும்.

அலுவலகத்தில் குறைந்தபட்சம் 8 முதல் 9 மணி நேரம் செலவிடுகிறோம். அதாவது ஒருநாளின் மூன்றில் ஒரு பகுதி. குடும்பத்தினரிடம் செலவழிக்கும் நேரத்தை விட இது அதிகம். அப்படி இருக்க கண்டிப்பாக அலுவலகத்தில் நண்பர்கள் வட்டம் அதிகமாகவே இருக்கும்.

சக ஊழியர் நண்பராக இருக்கும்போது அவர் நம்முடைய வேலை நேரத்தில் வந்து இடையூறு செய்தால் பதில் அளிப்பது தவிர்க்க முடியாததாகி விடும். நல்ல நண்பர்களை இழக்கக் கூடாது என்ற காரணத்திற்காகவே நம்முடைய வேலையை விட்டு விட்டு அவர்கள் பக்கம் செல்வது இயல்பு தான்.

ஆனால், வேலையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி உள்ளது.

உங்கள் நண்பரிடம் முற்றிலும் மாறுபட்ட கருத்துகளைப் பேசுங்கள். அவர் திரைப்படங்களைப் பற்றி பேசினால் அவருக்குப் பிடிக்காத புத்தகங்களைப் பற்றி பேசுங்கள். இதனால் உரையாடல் சீக்கிரமாக முடிந்துவிடும். உங்களுடைய நேரமும் மிச்சமாகும்.

விலகி இருங்கள் ஒவ்வோர் ஊழியருக்கும் வேலையில் தனித்துவமான ஆளுமை உள்ளதை எவராலும் மறுக்க முடியாது. அதனை நாம் வெளிப்படுத்தும் விதம் வேண்டுமானால் வித்தியாசமாக இருக்கலாம்.

ஆனால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணாதிசயத்தைக் கொண்டவர்கள். அந்த வகையில் உங்களுடைய மனநிலைக்கு ஏற்றவர்களை மட்டும் நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் வேலையில் தீவிரமாகக் கவனம் செலுத்தும்போது வேண்டுமென்றே வந்து இடையூறு செய்பவராக இருந்தால், அவர்களிடம் இருந்து விலகி இருத்தல் நல்லது. அவ்வாறு அடிக்கடி வேண்டுமென்றே வந்து இடையூறு செய்பவர்கள் கண்டிப்பாக வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கமாட்டார்கள்.

எனவே, மற்றவர்களின் நேரத்தை மதிக்காத நபர்களிடமிருந்து விலகி இருப்பது, உங்களுடைய நேரத்தைச் சேமிக்க உதவும்.

ஸ்மார்ட் போன்கள்

மனித வாழ்வை பெரிதும் ஆக்கிரமித்துள்ளவை ஸ்மார்ட் போன்கள். ஆம். இந்த ஸ்மார்ட் போன்கள் தாம் வேலை நேரத்திலும் தொந்தரவாக இருப்பதாக புணேவைத் தலைமையிடமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான "சேபியன்ஸ் அனலிட்டிக்ஸ்' நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அவ்வாறு ஸ்மார்ட் போனில் நாம் நேரம் செலவழிக்கக் காரணம் போனில் வரும் நோட்டிபிகேஷன் ஒலி தான். அந்த எச்சரிக்கை ஒலி தான் நம்முடைய கவனத்தைச் சிதற அடித்து நம்முடைய நேரத்தை வீணடிக்கிறது.

ஒவ்வொரு 11 நிமிடத்துக்கு ஒருமுறை எச்சரிக்கை ஒலி நம்மைத் தொந்தரவு செய்வதாகவும் அப்படி ஒவ்வொரு முறையும் நீங்கள் ஸ்மார்ட் போனைக் கையில் எடுத்தால் திரும்ப பணிநிலைக்குச் செல்ல 25 நிமிடங்கள் ஆகின்றன என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இது முக்கியமான ஓர் ஆய்வாகும். நம்முடைய நேரத்தை வீணடிக்கும் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு இடையூறாக ஒரு செயல் இருக்கிறது என்றால் அதனை நாம் உடனடியாகக் கைவிட்டுவிட வேண்டும். அலுவலக நேரத்தில் அலுவலகப் பணிக்கான செயலிகளைத் தவிர பிற செயலிகளின் எச்சரிக்கை ஒலிகளை நிறுத்தி வைத்துவிடுங்கள்.
நீங்கள் உங்கள் திறமையைக் காட்டவேண்டுமெனில் அலுவலக அரட்டைகளில் இருந்து விலகி இருத்தல் நலம். நோய் வந்தபின் குணப்படுத்துவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது.

நீங்கள் பொறுப்பான ஒருவராக அறியப்பட வேண்டுமெனில் வேலை நேரத்தில் வேலையை மட்டும் செய்யுங்கள். அலுவலக இடைவேளை நேரங்களில் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கலாம் . அலுவலக நேரத்தை உங்களுடைய வளர்ச்சிக்காகவும், அலுவலக வளர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்துங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT