இளைஞர்மணி

நேர்முகத் தேர்வு...: தேவை... தோற்றத்தில் கவனம்!

சுரேந்தர் ரவி

உடைகள் மனிதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துபவை. நம் தோற்றமே மற்றவர்களை முதலில் கவரும். அணியும் உடைகள் நம் பண்பு நலன்களையும் வெளிப்படுத்தும். எனவே, நாம் அணியும் உடைகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.

உடைகள் விஷயத்தில் கல்லூரி மாணவர்கள் நவீனத்தைக் கடைப்பிடிப்பதையே விரும்புவர். புதிய வகை உடைகள் அவர்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. அதனால் பல சமயங்களில் எந்த நேரத்தில், எந்த நிகழ்வில் என்ன மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றனர். நிகழ்வுக்குப் பொருத்தமில்லாத உடைகளை அணிவதே, சில நேரங்களில் கிடைத்தற்கரிய பல வாய்ப்புகள் கிட்டாமல் போவதற்கான காரணமாகிப் போய்விடுகிறது.

குறிப்பாக நேர்முகத் தேர்வின்போது, எந்த விதமான உடைகளை உடுத்த வேண்டும் என்பதில் தெளிவான முடிவை எடுக்க பல இளைஞர்களுக்குத் தெரிவதில்லை. தடுமாற்றமடைகின்றனர்.

நேர்முகத் தேர்வின்போது, நம் தோற்றமே நேர்முகத் தேர்வை நடத்தும் அதிகாரிகளை முதலில் கவரும். எனவே, உடைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். நேர்முகத் தேர்வுக்கு வெள்ளை, நீலம், கிரே உள்ளிட்ட அடர்மிகு நிறமற்ற மேலாடைகளை (சட்டைகள், சுடிதார்) அணிந்து கொள்ளலாம். மேலாடையின் நிறத்துக்கு ஏற்ற அடர் வண்ணத்தில் கீழாடைகளையும் (பேண்ட்) அணிந்து கொள்ளலாம்.

மேலாடை, கீழாடைகளில் எந்தவித அச்சடித்த வாசகங்களும் இல்லாமல் இருப்பது அவசியம். உடைகள் மிகவும் இறுக்கமாக இல்லாமல் இருப்பதையும், கறைகளுடன் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளவும். ஆடைகள் இஸ்திரி செய்யப்பட்டிருத்தல் சிறப்பு. காலர் உள்ள சட்டைகளை மட்டுமே அணிதல் வேண்டும்.

தோலினால் செய்யப்பட்ட "பெல்ட்' அணிந்து கொள்வது தோற்றத்துக்கு மேலும் வலுசேர்க்கும். "ஷு' அணிந்து கொள்வது சிறப்பாக இருக்கும். அதற்கு முன்பு காலுறைகளை (சாக்ஸ்) மறவாமல் அணிந்து கொள்ள வேண்டும். கயிறுடன் கூடிய அல்லது கயிறு இல்லாத அலுவலகத்துக்கு உகந்த "ஷு'க்களை அணிந்து கொள்ளலாம். அவை அழுக்காக இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

நேர்முகத் தேர்வுக்கு செருப்பு அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். "டை' அணிந்து கொள்வது இளைஞர்களின் தனிப்பட்ட விருப்பம். விருப்பம் இருந்தால் அணிந்து கொள்ளலாம். சாதாரண கடிகாரத்தை அணிந்து கொள்ளலாம். உலோகப்பட்டை, தோல்பட்டைகளைக் கொண்ட கடிகாரங்களை அணியலாம். தொழில்நுட்பங்கள் நிறைந்த கடிகாரம் அணிவதைத் தவிர்த்தல் நல்லது.

முடியை முறையாகத் திருத்திக் கொள்வது, முகச் சவரம் செய்து கொள்வது உள்ளிட்டவை அணியும் உடைகளுக்குக் கூடுதல் தோற்றப் பொலிவை அளிக்கும். நகங்கள் முறையாக வெட்டப்பட்டிருப்பது அவசியம். உடலில் இருந்து துர்நாற்றம் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

பெண்கள் நேர்முகத் தேர்வுக்கு சேலையையும் அணிந்து கொள்ளலாம். அவை அடர்த்தி குறைந்த வண்ணத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். "ஹை ஹீல்ஸ்' வகை காலணிகளைத் தவிர்த்தல் நலம். காலணிகள் தரையை உரசும்போது சத்தம் வராமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

சாதாரண அணிகலன்களை மட்டுமே பெண்கள் அணிந்து கொள்ள வேண்டும். சாதாரண காதணிகள், கழுத்தணிகளை அணிந்து கொள்ளலாம். கையில் சாதாரண கடிகாரம் அணிந்து கொள்ளலாம். வளையல், பிரேஸ்லெட் உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பது நல்லது. நகங்களில் "நெயில் பாலிஷ்' இடுவதைத் தவிர்த்தல் அவசியம்.

நேர்முகத் தேர்வின்போது கூந்தல் நன்கு பின்னப்பட்டிருத்தல் அவசியம். தலைவிரி கோலமாக இருத்தல் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஆடம்பரமான ஹேர்பின், கிளிப் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அடர்மிகு நிறங்களில் உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்) பூசுவதைத் தவிர்க்க வேண்டும். வியர்வையைத் துடைப்பதற்காக கைக்குட்டைகளை வைத்திருத்தல் நலம்.

நேர்முகத் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே உடைகளைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

அவற்றில் தேவையான மாற்றங்களைப் புகுத்துவதற்கு அதுவே சரியான காலமாக இருக்கும். சில நிறுவனங்கள் நேர்முகத் தேர்வுக்கென ஆடை விதிமுறைகளை வகுத்திருக்கும். அவற்றுக்கேற்ப நாம் தயாராகிக் கொள்ளலாம்.

நீண்ட முடி வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். தாடி வைத்திருந்தால் அதை அழகுறப் பராமரிப்பது அவசியம்.

முடிக்குச் சாயம் பூசுவது, நேர்முகத் தேர்வின்போது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கண்ணாடி அணிபவராக இருந்தால், அலுவலகத்துக்கு உகந்ததைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

நேர்காணல் நடத்துவோரிடம் நம் தோற்றமே நல்ல மதிப்பை ஏற்படுத்தும். அதைக் கருத்தில்கொண்டு உடைகள் உள்ளிட்டவற்றைச் சரியாகத் தேர்ந்தெடுத்து நம் தோற்றத்தை வலுப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். தோற்றப்பொலிவு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் நம்மை எப்போதும் முன்னணியில் வைத்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT