இளைஞர்மணி

உலகமயம்... வேலை... மொழி!

ந.முத்துமணி

கரோனா பெருந்தொற்று மக்களின் இயல்புவாழ்க்கையை முடக்கியிருந்தாலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகம் இணைந்திருக்கிறது. கரோனாவைப் பொருட்படுத்தாமல் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துக் கொண்டுள்ளன. வேலை, தொழில் போன்ற பல்வேறு வாய்ப்புகளைத் தேடி நாடுகளுக்கு இடையே மக்கள் பறந்துகொண்டிருக்கிறார்கள். புதிய புதிய வேலைகள், புதிய புதிய தொழில்கள், மொழித்தடைகளை கடந்து புதிய புதிய நாடுகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன.
இதனால் எழும் மொழிரீதியான இடைவெளியை நிரப்புவதற்கு திறன்வாய்ந்த மொழி வல்லுநர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

மொழியின் முக்கியத்துவம்

பொருளாதாரத்தை உலகமயமாக்கியதில் தாராளமயமாக்கல் கொள்கைக்கு முக்கிய பங்கு உள்ளது. தொழில்முதலீடுகளுக்கு உலக நாடுகள் சிவப்புக் கம்பளம் விரிக்கத் தொடங்கியதால், நாடு கடந்து, மொழி கடந்து நதி போல தொழில்கள் உலகம் முழுவதும் பாயத் தொடங்கிவிட்டன.

ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஐரோப்பிய நாடுகளில் அந்தந்த நாடுகளின் மொழிகள் தான் புழக்கத்தில் உள்ளன. வேலை தேடி ஜெர்மனி நாட்டுக்குச் செல்ல வேண்டுமானால், முதலில் ஜெர்மன் மொழியைக் கற்க வேண்டும். தொழில் வளம் பெற்றுள்ள நாடுகள் வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளை அள்ளித் தருவதோடு, அந்நாட்டுமொழிகளைக் கற்றுவிட்டு உள்ளே நுழையும்படியும் கட்டாயப்படுத்துகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்ல ஆங்கிலம் கற்றறிந்திருக்க வேண்டும்.

ஒருகாலத்தில் அமெரிக்காவுக்குச் செல்ல முற்பட்ட பலர், ஆங்கிலப் பயிற்சியைப் பெற கல்விக்கூடங்களைத் தேடி அலைந்தனர். அதன்விளைவாக, தமிழகத்தில் ஆங்கில பயிற்சி மையங்கள் நிறைய முளைத்தன. அதேநிலை தான் உலகமொழிகள் பலவற்றுக்கும் ஏற்பட்டுள்ளது. எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் எடுபடாது என்பதை நினைவில் கொள்க. ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் ஆங்கிலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டமுடியாது. பொருளாதார வல்லாண்மையுடன் விளங்கும் நாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களிடையே ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், சீனம், ஜப்பானியமொழிகளுக்கு அதிக மவுசு காணப்படுகிறது.

மொழி கற்றல்

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எந்த பகுதியிலும் அனைத்து ஐரோப்பியமொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்கும் ஏ-1, ஏ-2, பி-1, பி-2, சி-1, சி-2 ஆகிய ஆறு நிலை பொது பயிற்சித் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறார்கள்.

ஏ-1 நிலையில், ஆரம்பநிலை மொழிப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அடிப்படையான உரையாடல்கள், தினமும் பயன்படுத்தும் மொழியாடல்கள் போன்றவை கற்றுத்தரப்படுகின்றன.

ஏ-2 நிலையில், அடுத்தகட்ட ஆரம்பநிலை மொழி பயிற்சி சொல்லி தரப்படுகிறது. பி-1 படிநிலையில், சொந்தமாக வாக்கியங்களைக் கட்டமைத்து, பேசுவதற்கான திறன்கள் வளர்க்கப்படுகின்றன.

பி-2 நிலையில், மொழியை தூய்மையாகக் கையாள்வதற்கான திறமையைக் கற்றுத் தேர முடியும். பொது இடங்கள், பொதுமேடைகளில் பேசுவதற்கு தகுந்த மொழியாடல்கள் கைவரப் பெற முடியும்.

சி-1 நிலையில், மொழியை அதன் உயர்நிலையில் கற்றறிய வாய்ப்பு ஏற்படும். தொழில்நுட்பம், பொறியியல் போன்றதுறைசார்ந்த விவரங்களை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்க தேவையான பயிற்சி கிடைக்கும்.

சி-2 படிநிலை தான் கடைசி படியாகும். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுகின்ற அளவுக்கு மொழியறிவு பெற இயலும். இலக்கியங்களை எளிதில் புரிந்துகொள்ளவும், அதைபற்றிய ஆழமான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். அந்தமொழியில் முதுநிலைப் பட்டம் படிக்கவும், இலக்கியங்களை ஒப்பீடு செய்யவும், மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுவதற்கும் தேவையான முழுமையான மொழியறிவு தேவைப்படுவோர் மட்டுமே 6 படிநிலைகளையும் கற்றறிந்து கொள்ள முற்படுவார்கள். வேலை அல்லது தொழில்வாய்ப்புகளுக்காக தற்காலிகப் பயணங்களுக்கு 6 படிநிலைகளையும் கற்றுத் தேற வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு ஏ-1, ஏ-2, அதிகபட்சமாக பி-1 படித்தால் போதுமானது, அங்கு தொழில் அல்லதுவேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம். மொழியை ஓரளவுக்கு முழுமையாக கற்றுக் கொள்ள ஆர்வமிருந்தால், அதை நிறைவு செய்ய இடைவிடாமல் 3 ஆண்டுகள் படிக்க வேண்டியதிருக்கும். கற்றுக் கொண்ட மொழியின் துணையோடு ஆசிரியர் பணி, மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாளர் பணிகளில் ஈடுபடவிரும்புவோர் சி-1 படிநிலை வரை படித்தால், சாதனைகள் புரியலாம். மொழிப் பயிற்சிகளை அளிக்க ஏராளமான மையங்கள் செயல்பட்டுவருகின்றன.

மொழி சார்ந்த வேலை

வேலை அல்லது தொழில் தேவைகளுக்காக வெளிநாட்டுமொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். அப்படி, இந்தியாவில் இருந்து ஐரோப்பா, சீனம், ஜப்பான், ஜெர்மனி நாடுகளுக்குசெல்வோருக்கு அந்தந்த நாட்டின் மொழியை கற்றுத்தரும் வேலைவாய்ப்பும் வேகமாக வளர்ந்து வருகிறது. வர்த்தக, தொழில்நுட்ப விவரங்களை விளக்குதல், கல்வியாளர், புத்தகங்கள்-கையேடுகள்-ஆவணங்கள்-இலக்கியப்படிகள்-குழந்தை இலக்கியநூல்களை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர், சுற்றுலா நிறுவனங்களில் வழிகாட்டி, வாடிக்கையாளர் சேவை ஊழியர் பணி, பள்ளிகள், கல்லூரிகளுக்கு பாடத்திட்டங்களைத் திட்டமிடும் ஆலோசகர் பணி என ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. இருநாடுகளுக்கு இடையிலான நாட்டுத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகளின் சந்திப்பின்போது மொழி பெயர்ப்பாளர், விளக்கவுரையாளுநர், தொடர்பு அலுவலர் போன்ற ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டு தொழில் முதலீட்டு குழுக்களுக்கு திட்டப் பணிகளை விளக்குவதற்கு, திட்ட விவரங்களைக் கணினியில் தயாரிப்பதற்கு என்று அடுக்கடுக்கான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இருவேறு மொழியினர் இடையே தங்கு தடையில்லா தகவல் பரிமாற்றத்தை சாத்தியப்படுத்த மொழியாளுநர்களால் தான் முடியும்.

தமிழ்மொழிக்கும் வாய்ப்பு

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் பெருகியுள்ளதால் பன்னாட்டு நிறுவனங்களில் தமிழ்மொழியைக் கற்றுத் தருவதற்கும், இங்குள்ளவர்களோடு வெளிநாட்டினர் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் பிறமாநிலங்களிலும் தமிழ் படித்தோருக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. மொரீஷியஸ், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பியநாடுகளில் தமிழ் கற்க பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் கற்றுத் தர ஏராளமான ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். மொழி பெயர்ப்புப் பணிக்கும் வேலைகள் குவிந்துள்ளன. தமிழ்மொழியும் உலக அளவில் தேடிப்படிக்கும் வணிகமொழியாக மாறிவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT