இளைஞர்மணி

சங்க இலக்கியத்திற்கு ஒரு வலைதளம்!

பி.ராஜகுமாரி


சங்க இலக்கியத்திற்கென்று தனியாக, "சங்கச் சோலை' என்று வலைதளம் செயல்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகிலுள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் ப. பாண்டியராஜா. இவர் மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் கணிதவியல் துறைத்தலைவராகவும், கணினித்துறை இயக்குநராகவும் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றவர். இவர்தான் இந்தச் "சங்கச் சோலை' வலைதளத்தை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார்.

இந்த வலைதளத்தில் சோலைக்குள்ளே எனுமிடத்தில் சொடுக்கினால், சங்க இலக்கியம் எனும் பக்கத்திற்குச் செல்கிறது. இப்பக்கத்தில், பத்துப்பாட்டு எனப்படும் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்கிற பத்து நெடும்பாடல்களுக்கும், எட்டுத்தொகை எனப்படும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு எட்டுவிதமான தொகுப்புகளுக்கும் பாடல் மற்றும் அதற்கான நேர் உரையும் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், இங்கு கட்டுரைகள் என்ற பகுதியில், ஐந்து உட்பிரிவுகளில், பல்வேறு தலைப்புகளில் அமைந்த இவரது கட்டுரைகள், பாடல் கதைகள், விளக்கவுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன.

இவை தவிர, இந்த வலைதளத்தில், சங்க இலக்கியத்திற்கான அருஞ்சொற்களஞ்சியமும் தரப்பட்டிருக்கிறது. அருஞ்சொற்களஞ்சியம் பகுதியில், சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களில் காணப்படும் அரிய சொற்களை, அவற்றுக்கான தமிழ், ஆங்கிலப் பொருள்களுடன், அச்சொற்கள் அப்பாடல்களில் பயின்று வருகின்ற இடங்களில் சிலவற்றையும் கொடுத்து, தேவையான இடங்களில் படங்களையும் கொடுத்துச் சிறப்பாக விளக்கப்பட்டிருக்கிறது.

இப்பக்கத்தின் மேற்பகுதியில் தமிழ் எழுத்துகள் அகர வரிசையில் வழங்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள எழுத்துகளின் மேல் வைத்துச் சொடுக்கினால், அந்த எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கான பக்கத்திற்குச் செல்கிறது. இங்கே இடதுபுறம் சொற்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அதன் வலதுபுறம் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அருஞ்சொற்களஞ்சியத்தில் உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்கள், உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்குரிய பொருள்களும், அந்தச் சொற்கள் இடம் பெற்றுள்ள சங்க இலக்கியப் பாடல்களும், அந்தச் சொற்களுக்கான விளக்கங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

தமிழ் மொழியை முதன்மைப் பாடமாகக் கொண்டு படித்து வரும் மாணவர்கள் மட்டுமின்றி, தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திருக்கும் இத்தளத்தைப் பார்வையிட விரும்புபவர்கள் http://sangacholai.in எனும் இணையதள முகவரிக்குப் பயணிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT