இளைஞர்மணி

கவனக்குறைவு... மனநோயாகவும் இருக்கலாம்!

வி.குமாரமுருகன்

சில இளைஞர்கள் எந்த ஒரு விஷயத்திலும் முழுக்கவனம் செலுத்தமாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட இலக்கோ, அதை அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றிய எண்ணமோ இல்லாமல் இருப்பார்கள். உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய கவனம் கூட இல்லாமல் இருப்பார்கள். இதற்காக அவர்களைப் பிறர் திட்டினாலும் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். கவனக்குறைவாக இருப்பதே இயல்பான வாழ்க்கை என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இப்படி கவனக்குறைவாக இருப்பது ஒரு தனிமனிதரின் இயல்பு என்று நினைப்பது தவறு. அப்படிப்பட்டவர்களைக் குறை சொல்வதோ, திட்டுவதோ கூட சரியான செயல் இல்லை. ஏனென்றால் இப்படி கவனக்குறைவாக இருப்பது ஒரு மனநோய்.

இதுபோன்ற மனநிலை உடையவர்களை அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (ஏடிஹெச்டி) உள்ளவர்கள் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.

இப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். ஒரு பொருள் குறித்த அறிவு இல்லாதவர்களால் - அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களால் - குறிப்பிட்ட இலக்கை நோக்கி எப்படி பயணிக்க முடியும்?

அவர்களுக்கு மாற்று வழி இல்லையா என்று கேட்கலாம். மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அவர்களை சரிசெய்வதற்கான வழிகள் உள்ளன.

பொதுவாக உடல் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்போது, உதாரணமாக தலைவலி, பல்வலி வரும்போது, அதை நாம் உணர்ந்து அதற்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் இந்த அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் பிரச்னைகளை நாம் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியாது. ஒருவர் தனது உடலில் மற்றும் மனரீதியாக ஏற்படும் மாற்றங்களைக் கொண்டே நம்மால் அதை உணர முடியும்.

அறிகுறிகள்

இந்தக் குறைபாடு உள்ளவர்கள் பதற்றமாகவும், பரபரப்பாகவும் ஒரு விஷயத்தில் ஈடுபடுவார்கள். மேலும் மனக்கிளர்ச்சியுடனேயே எந்த ஒரு செயலையும் செய்வார்கள். இவர்களால் எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாகச் செய்ய முடியாது. தொடர்ச்சியாகவும் ஒரு விஷயத்தில் ஈடுபட முடியாது.மேலும் மற்றவர்கள் கூறும் விஷயங்களையும் உள் வாங்க மாட்டார்கள். உதாரணமாக, ஒரு பொறுப்பை அவர்களிடம் கொடுத்தால் அவர்களால் அதை ஏற்று திறம்பட செயல்படமாட்டார்கள். எடுத்துக்காட்டாக ஒரு திருமண நிகழ்ச்சியை நடத்தும்படி அவர்களிடம் சொன்னால் அவர்களால் அதை நடத்த முடியாது. சமையல் முதல் மணமேடை வரை, பந்தல் முதல் நாகஸ்வர கலைஞர்களை ஏற்பாடு செய்வது வரை தேவையான விஷயங்கள் எல்லாவற்றையும் அவர்களால் ஒருங்கிணைக்க முடியாமல் சிரமப்படுவார்கள்.

இன்னும் சொல்லப் போனால், முக்கியமான விஷயங்களைக் கூட மறந்து விடுவார்கள். இந்த அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் ஒருவருடைய குழந்தைப் பருவம் முதலே இருந்திருக்கக்கூடும். அதை பெரியவர்கள் கவனிக்க தவறி இருப்பார்கள். அவர்கள் இளைஞர்களான பின்னரே அவர்களின் செயல்களைப் பார்த்து பிறருக்குத் தெரிய வரும்.

காரணங்களும் , நோய் அறிதலும்...

தற்போது இந்த மனநலக்குறைபாட்டைத் தீர்ப்பதற்கான மருத்துவ வாய்ப்புகள் பெருமளவில் உள்ளன. இத்தகைய மனநிலை உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் அதை சரி செய்ய முடியும். இத்தகைய பாதிப்புகள் வருவதற்கான காரணங்களை உறுதியாக மருத்துவ உலகம் கூறாவிட்டாலும் மரபுரீதியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறது. அத்துடன் நரம்பியல் சார்ந்த பிரச்சனைகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் சில மருத்துவர்கள்.

இவை தவிர, சமூகம் கூட இத்தகைய பிரச்னையை ஒருவருக்கு ஏற்படுத்திவிடக் கூடும். குடும்பத்தில் நடைபெறும் நிகழ்வுகளும், இளம்வயதில் குடும்பத்தில் உள்ள பிறரால் ஏற்பட்ட பாதிப்புகளும் கூட இத்தகைய மனநிலையை அவர்களுக்கு உருவாக்கியிருக்க முடியும் என்கிறது மருத்துவ உலகம்.

60 சதவீதம் பேர்களுக்கு குழந்தை பருவம் முதல் இன்று வரை இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் அது மாறாது. ஆனால் பெரும்பாலானவர்கள் தாங்கள் இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்வதில்லை. அவர்கள் அதை தங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

சிகிச்சை முறைகள்:

இவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் இப் பிரச்னையில் இருந்து விடுபட முடியும் .

அதற்கு சில காலம் கூட பிடிக்கலாம். பொதுவாக தூண்டுதலை ஏற்படுத்தக் கூடிய மருந்துகள் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. சிலருக்கு அதனுடன் உளவியல் சிகிச்சையும் தேவைப்படலாம்.

கவனக்குறைவு பிரச்னையுடன் வாழப் பழகுதல்:

இத்தகைய குறைபாடு உள்ளவர்களுக்கு கவலையும், கேட்கும் திறன் குறைபாடு மற்றும் பார்வைக் குறைபாடு கூட இருக்கலாம். இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் தாங்கள் தனித்து விடப்பட்டு இருக்கிறோம் என்று நினைக்காமல் உலகத்துடன் , சமூகத்துடன் இணைந்து வாழ பழக வேண்டும். அத்தகைய குறைபாடு உள்ளவர்களுடன் சமூகம் நல்ல முறையில் பழகி "நாங்கள் இருக்கிறோம்' என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அவர்களின் மற்ற திறமைகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும். அத்துடன் சிகிச்சை அளிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டும்.

நல்ல தொடக்கம்...

மற்றவர்கள் நம்மைப் பற்றி தவறாக நினைப்பார்கள் என்று நினைத்து இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் யாரிடமும் உதவி கேட்க விரும்ப மாட்டார்கள். இந்தக் குறைபாடு உள்ள சிலர், இதைப் பலவீனமாகக் கருதி இதற்கு மருத்துவம் செய்து கொள்ளவும் தயங்குவார்கள். இது தேவையற்ற ஒன்று.

சிலர் தாங்களாகவே தங்களின் குடும்ப மருத்துவரை அணுகி இது குறித்து விவாதிப்பார்கள். இது ஒரு நல்ல தொடக்கம். இதைத் தொடர்ந்து மருத்துவரின் அறிவுரைப்படி நல்ல ஒரு மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது காலத்தின் கட்டாயம்... அதுதான் தீர்வினைப் பெற்றுத் தரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

SCROLL FOR NEXT