இளைஞர்மணி

மொழிபெயர்க்கும் முகக்கவசம்!

15th Sep 2020 06:00 AM | - ஜீவா

ADVERTISEMENT


கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நாம் முகக்கவசம் அணியத் தொடங்கினோம். இடைவெளி விட்டு நிற்கிறோம்.

முகக்கவசம் அணிந்து கொண்டு சற்று தொலைவில் நின்று பிறரிடம் பேசும்போது, பேசுவது தெளிவாகக் கேட்பதில்லை. சத்தமாகப் பேச வேண்டியிருக்கிறது.

பல மொழிபேசும் மக்கள் கூடும் ரயில்நிலையங்கள், விமானநிலையங்களில் பிறர் பேசுவதைப் புரிந்து கொள்ள அவர் பேசும் மொழி தெரிய வேண்டும். மொழி தெரியாவிட்டால் பேசுவது புரியாமல் விழிக்க வேண்டியதுதான்.

""சி -ஃபேஸ் என்ற இந்த ஸ்மார்ட் முகக்கவசத்தை அணிவதின் மூலம் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முடியும்'' என்கிறார்கள் ஜப்பானைச் சேர்ந்த டோனட் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தினர்.

ADVERTISEMENT

விமானநிலையங்களில் மொழிபெயர்க்கும் திறனுடைய ரோபோக்களை மற்றும் பயணிகளுக்கு வழிகாட்டும் ரோபோக்களை உருவாக்குவதற்காக 2014- இல் இருந்து இந்த நிறுவனம் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. கரோனா தொற்று ஏற்பட்டதால் உலகம் முடங்கிப் போனது. அதனால் அந்த ஆராய்ச்சி தொழில்நுட்பங்களை இந்த ஸ்மார்ட் முகக்கவசத்தை உருவாக்குவதில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த முகக்கவசத்தில் எல்லா முகக்கவசங்களிலும் உள்ளதைப் போன்ற கரோனா தொற்றைத் தடுக்கக் கூடிய காற்று வடிகட்டி உள்ளது. பிளாஸ்டிக்காலும் சிலிகானாலும் இந்த முகக்கவசம் செய்யப்பட்டுள்ளது. இந்த முகக்கவசத்தை புளூடூத் மூலமாக உங்களுடைய ஸ்மார்ட் போன், டேப்லெட் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தும் செயலியும் இணைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் மொழியில் பேசினால் சீன மொழி, கொரிய மொழி, வியட்நாமிய மொழி, இந்தோனேசிய மொழி, ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச் மொழி ஆகியவற்றில் இந்த முகக் கவசம் மொழிபெயர்த்துவிடும். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டவை எழுத்துவடிவிலான தகவல்களாக ஸ்மார்ட் போனில் வெளிப்படும். இந்த முகக்கவசத்தின் மூலம் பிறருடன் செல்லிடப் பேசியில் பேசமுடியும்.

கூட்டம் அதிகமுள்ள கடைகளில் தேவைப்படும் பொருள்களைக் கேட்கும்போது முகக்கவசம் அணிந்திருக்கும் ஒருவர் பேசுவது தெளிவாகக் கேட்பதில்லை. இந்த முகக்கவசத்தை அணிந்து கொண்டால், பேசுவது தெளிவாகக் கேட்பது மட்டுமல்ல, தேவைப்படும் அளவுக்கு சத்தமாகவும் கேட்கும்.

பெரிய நிறுவனங்களில் நடக்கும் பிஸினஸ் மீட்டிங்குகளில் பேசும்போது பேசியவற்றை இந்த முகக்கவசத்தில் ரிக்கார்ட் செய்து கொள்ளலாம். அவ்வாறு ரிக்கார்ட் செய்ததை ஸ்மார்ட் போனில் மாற்றிக் கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது தகவல் தொழில்நுட்பத்துறையின் பணிகள் உலகமயமாகிவிட்டன. பேசுபவரின் மொழி, அதைக் கேட்கும் பிறநாட்டவருக்குத் தெரியாவிட்டாலும், இந்த முகக்கவசத்தின் மூலம் அவர் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.

பேச்சை எழுத்துவடிவில் மாற்றும் இந்த முகக்கவசத்தை மேலும் தொழில்நுட்பரீதியாக மேம்படுத்த டோனட் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வருங்காலத்தில் பேச்சை மட்டுமல்ல, காட்சிகளையும் கூட எழுத்துவடிவில் விவரிக்கும்விதமாக இந்த முகக்கவசத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மாதம் 5000 முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு ஜப்பான் மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. படிப்படியாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கும் தனது விற்பனையை விரிவுபடுத்தப் போவதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT