இளைஞர்மணி

எரிச்சலைத் தவிர்க்க எளிய வழிகள்!

வி.குமாரமுருகன்

சிலர் எப்பொழுதுமே புன்னகையுடன், உற்சாகத்துடன் வலம் வருவார்கள். இன்னும் சிலர் உற்சாகம் இழந்து சோகமாக காட்சி அளிப்பார்கள். இன்னும் சிலரோ, "எப்போது பார்த்தாலும் எரிச்சலா இருக்கு...' என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள். எரிச்சல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், காரணமே இல்லாமல் கூட சிலர் எரிச்சல் அடைவதை பார்த்திருப்போம். அத்தகைய எரிச்சலால் வாழ்வில் எட்ட வேண்டிய, தொடவேண்டிய உயரங்களைத் தொட முடியாமல் கூட போய் விடலாம். எனவே "எரிச்சலா இருக்கு' என்று எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். எரிச்சல் அடைவதைத் தவிர்ப்பதற்கான சில வழிமுறைகளை நாம் இப்பொழுது இங்கே காணலாம்.

கவனத்தை மாற்றுங்கள்

இன்றைய பணிச்சூழல், சமூகச் சூழல் போன்றவை நமது சிந்தனைகளையும், செயலையும் புரட்டிப் போடுகின்றன. பணியிடங்களில் பல்வேறு காரணங்களால் நாம் எரிச்சல் அடைய நேரிடுகிறது. அதுபோல சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் கூட நமக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். நாம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது, நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.

அவர்களிடம் நாம் பழகும் பொழுது அவர்கள் நமக்கு பிடிக்காத விஷயங்களைக் கூறினாலும் கூட, நாம் எரிச்சல் அடைந்திருக்கமாட்டோம். நட்புடன் பழகியதே அதற்குக் காரணம்.

அதேபோல் பழைய நண்பர்களை தற்போது இணைத்துக் கொள்ளலாம். முகம் தெரியாத யாரோ ஒருவருக்கு முடிந்த உதவிகளைச் செய்தால், எரிச்சலில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியை நோக்கி பயணிக்கலாம். இது உங்கள் வழக்கமான பணிச் சூழலை மறக்கச் செய்வதுடன், சமூகம் சார்ந்த சிந்தனைகளை நமக்குள் தோற்றுவித்து மாற்றத்தைக் கொடுக்கும்.

உடல்நலம் பேணுதல்

""எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. உடற்பயிற்சி செய்ய நேரமில்லை'' என்று பலர் கூறுவதைக் கேட்டிருப்போம்.

மூளைக்கு மட்டும் தொடர்ந்து வேலையைக் கொடுத்துவிட்டு உடலுக்கான பயிற்சிகளைக் கொடுக்காமல் இருந்தால் நிச்சயம் எரிச்சல் அடைவதைத் தவிர்க்க முடியாது. அதுமட்டுமல்ல ஒரே இடத்திலிருந்து வேலை செய்வதால் நமது உடலும் பருமனாகிறது. இதை கவனத்தில் கொண்டு தேவையான நேரத்தில், தேவையான உடற்பயிற்சிகளைச் செய்து எரிச்சல் அடைவதைத் தவிர்க்லாம். ஒரே இடத்திலிருந்து வேலை செய்யும் நபர்களிடம், நீங்கள் அவ்வப்பொழுது எழுந்து நிற்க வேண்டும். கைகளை மடக்க வேண்டும். சிறிது தூரம் நடக்க வேண்டும் என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். இது ஒரு வகையில் அவர்கள் எரிச்சல் அடைவதை தவிர்ப்பதற்காகத்தான்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வேலையின் மூலம் பணம் கிடைக்கும் என்பதற்காக உடல் நலனைப் பேணாமல் இருப்பது சரியல்ல. வேலையையும் செய்து கொண்டு உரிய நேரத்தில் உடற்பயிற்சியும் செய்தால் அது நமது உடல் நலனை பாதுகாப்பதுடன், மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எரிச்சலடையும் மனநிலை மாறிவிடும்.

பொழுதுபோக்கு முக்கியம்

மன அழுத்தத்தில் இருந்து நாம் வெளியேறுவதற்கு பொழுதுபோக்கு அவசியம். அது நமக்கு விருப்பமான விஷயமாக இருப்பது கூடுதல் நன்மை தரும். புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் புத்தகங்களை வாசிக்கலாம். ஆர்வமில்லாதவர்கள், தங்களுக்குப் பிடித்த ஏதோ ஒரு பொழுதுபோக்கை தேர்வு செய்வது முக்கியம். அது நிச்சயம் நமக்கு புதிய திறனை உருவாக்கி கொடுக்கும். அத்துடன் வாரம் தோறும் பணிச்சூழலில் சிக்கித் தவிக்கும் மூளைக்கும், மனதிற்கும் புதிய சக்தியை பொழுதுபோக்குகள் அளிக்கும்.

நாம் சிறுவயதில் விளையாடிய பம்பரம், கோலி இது போன்ற விளையாட்டுக்களைக் கூட நமக்கு பிடித்திருந்தால் தேர்வு செய்யலாம். மற்றவர்கள் கிண்டல் அடிப்பார்கள் என்ற எண்ணம் வர வேண்டியது இல்லை.

நோக்கத்தை எழுதுங்கள்

நாம் சிறுவர்களாக இருந்தபோது என்ன ஆக விரும்புகிறாய் என்று கேட்டால் நாம் விரும்பிய விஷயங்களைச் சொல்வோம். கால ஓட்டத்தில் அது கரைந்து ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் போது அந்த நிறுவனத்தின் பணியைத் தவிர வேறு எந்த சிந்தனையும் நமக்குள் தோன்றாது. சிறுவயதில் நாம் மிகப்பெரும் ஆசை ஒன்றை மனதில் தேக்கி வைத்து இருப்போம். ஆனால் அந்த விஷயம் கூட இன்று மறந்து போயிருக்கக் கூடும். எதிர்கால லட்சியம் கூட மனதை விட்டு அகன்று இருக்கும். சில சமயம் தனிமையில் இருந்து யோசிக்கும்போது நாம் எதையோ சாதிக்க நினைத்தோம் அது மறந்து விட்டது என்று கூட தோன்றும். எனவே நமது நோக்கம் என்ன? நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன? எதை நோக்கிப் பயணிக்கிறோம்? என்னவெல்லாம் தேவை? என்பன போன்றவற்றை எழுதுவதை வழக்கமாக்கிக் கொள்வது இலக்கை அடைய சிறந்த வழியை நமக்கு காட்டும்.

முன்பெல்லாம் இதற்காகத்தான் டைரி எழுதும் வழக்கத்தை நமது முன்னோர்கள் வழக்கத்தில் வைத்திருந்தனர்.

ஆலோசனை கேட்டல்

மிகப்பெரிய நிறுவனத்தில் தலைமை அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அந்நிறுவனத்தின் கீழ்நிலை ஊழியராகப் பணிபுரியக் கூடியவராக இருந்தாலும் சரி, சில நேரங்களில் ஆலோசனை கேட்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. "நாம் இந்த நிறுவனத்தில் மிகப் பெரிய பதவியில் இருக்கிறோம்; நாம் போய் பிறரிடம் ஆலோசனை கேட்பதா?' என்று நினைப்பது தவறான பாதைக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். அது நமக்கு எரிச்சலை ஏற்படுத்தி விடும். எனவே ஆலோசனை கேட்பது அல்லது உதவி கேட்பது என்பது அந்த சூழ்நிலையைப் பொருத்தது. தேவைப்படும் இடத்தில் தேவைப்படும் நபரிடம் ஆலோசனை கேட்பது நன்மையைத் தான் அளிக்கும்.

நகைச்சுவை உணர்வு

எவ்வளவு பெரிய மன அழுத்தத்தில் இருந்தாலும் நகைச்சுவை உணர்வு இருந்தால் அல்லது நகைச்சுவை பேச்சைக் கேட்டால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு விட முடியும். இன்று பெரிய, பெரிய காட்சி ஊடகங்களில் கூட நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரி என்பவர் சிரிக்கக் கூடாது என்ற விதியை தானாகவே வகுத்து வைத்துக் கொண்டு ஊழியர்களிடம் பேசும்போது கூட கடினமான முகத்தை வைத்துக் கொண்டு சிலர் பேசுவார்கள். இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஊழியர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

ஒரு நிறுவனத்தில் தலைவருக்கும், ஊழியர்களுக்கும் மன அழுத்தம் இருக்கும் என்றால் அங்கு பணி எவ்வாறு சிறப்பாக நடைபெற முடியும் என்பதை யோசிக்க வேண்டும்.

எனவே கூடிய மட்டும் பணியிடத்தில் நகைச்சுவை உணர்வு உள்ள சூழலை உருவாக்க அனைவரும் முயற்சி செய்யவேண்டும். நகைச்சுவையாக பேசுபவர்கள் என்றுமே சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் ஆக இருப்பார்கள். அதுபோன்று நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் மிக எளிதாக மன அழுத்தத்தை கடந்துவிட முடியும். மற்றவர்களின் மன அழுத்தத்தையும் போக்கிவிட முடியும்.

நேரத்தை நேசித்தல்

பணியிடத்தில் 10 மணிக்கு இருக்க வேண்டுமென்றால் சிலர் வீட்டிலிருந்தே ஒன்பதரைக்கு தான் கிளம்புவார்கள். அதனால் அலுவலகத்தைக் காலதாமதமாகச் செல்வார்கள். இது வீட்டிலிருந்து கிளம்பியதில் இருந்து அலுவலகம் செல்லும் நேரம் வரை தேவையற்ற மனப் பதற்றத்தை உருவாக்கி, எரிச்சலை ஏற்படுத்தும். காலதாமதமாகச் சென்றால் உயர் அதிகாரிகள் எரிச்சல் அடைவார்கள். உயர் அதிகாரி எரிச்சல் அடையும்போது அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர், பணியிடத்தில் மற்றவர்களிடம் எரிந்து விழுவார். இதனால் அந்தப் பணியிடம் முழுவதுமே அன்று எரிச்சலால் நிரம்பி வழியும். எனவே காலதாமதத்தைத் தவிர்க்க நேரமேலாண்மையைச் சரியாகக் கடைப்பிடித்து பணியிடத்திற்கு சென்றால் எரிச்சல் அடைவதில் இருந்து அனைவரும் விடுபட்டு பணியிடம் அமைதியாக இருக்கும்.

சாக்கு சொல்லுதல்

சிலர் எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு காரணத்தை உயரதிகாரியிடம் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். வேலை முடியாமல் போனதற்கு கரண்ட் இல்லை. நெட்வொர்க் இல்லை. சிஸ்டம் சரியில்லை. வாட்ச்மேன் வரவில்லை என்பன போன்ற ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இது உயரதிகாரிகள் மத்தியில் எரிச்சலை உருவாக்கி அவர் மீது தவறான அபிப்பிராயத்தை உருவாக்கிவிடும். எனவே தேவையற்ற சாக்குகளைச் சொல்வதைத் தவிர்த்து நமது கடமைகளை நாம்தான் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உயரதிகாரிகளின் எரிச்சலில் இருந்து தப்பிக்க இது உதவும்.

பொறுப்புணர்ச்சி

பொறுப்புணர்ச்சி என்பது அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒன்று. ஒரு நிறுவனத்தில் தேவையின்றி மின் விசிறி சுழலும் போது அதை நிறுத்துவது என்பது அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒரு பொறுப்பு. இது ஏதோ குறிப்பிட்ட நபர் மட்டும் தான் செய்ய வேண்டும் என்று நினைப்பது பொறுப்புணர்ச்சி அல்ல. தேவை இன்றி மின்சாரம் வீணாகி நிறுவனத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் நாம் செயல்பட்டால், அது நிறுவன உயர் அதிகாரிகள் மத்தியில் நமது மதிப்பை அதிகப்படுத்தும். அதை விட்டுவிட்டு அந்த பணியை செய்ய இன்னொருவருக்காக காத்திருப்பது தேவையற்ற எரிச்சலை நிறுவன அதிகாரிகளுக்கு ஏற்படுத்தும்.

மொத்தத்தில் எரிச்சல் என்பதே இல்லாமல், அலுவலகச் சூழலை தங்களுக்கு சாதகமாக்கி செயல்படுபவர்கள் உச்சத்தை உடனே எட்டி விட முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT