இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 258

8th Sep 2020 06:00 AM | ஆர்.அபிலாஷ்

ADVERTISEMENT

 

ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அவர்கள் ஆங்கிலம் குறித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது எல்லையில் எதிரிப்படை முன்னேறி வருவதாகத் தகவல் வருகிறது. எதிரியை திக்குமுக்காடச் செய்ய வீரபரகேசரி பல விநோதத் திட்டங்களை வகுக்கிறார். ஆனால் அப்போது யாங் மீ எனும் சீன அழகியான நடிகை வீரபரகேசரியைப் பார்க்க வந்து அவரது ராணியாகி அந்தரப்புரத்தில் குடிபெயர்கிறார். மன்னர் மயில்களுடன் ஒரு போட்டோ ஷூட் செய்ய நினைக்க அவரது அமைச்சரோ தவறாக ""பதினாறு வயதினிலே'' மயிலை அழைத்து வந்து விடுகிறார். பின்னாடியே சப்பாணியும் நொண்டிக் கொண்டு வருகிறான். 

வீரபரகேசரி அவர்களை நோக்கி who are these country bumpkins எனக் கேட்கிறார்.
கணேஷ்: சார், pumpkin என்றால் பூசணிக்காய் தானே? மன்னர் ஏன் நம்ம மயிலை பூசணிக்காய் எனச் சொல்கிறார்?
புரொபஸர்: அதாவது அது வந்து...
கணேஷ்: என் மனசு பொறுக்கல சார், மயிலுன்னா ரொம்ப இஷ்டம் எனக்கு... 
புரொபஸர்: அடேய்... இந்த அம்மா மயிலா நடிக்கும் போது நீயெல்லாம் பொறந்திருக்க மாட்டே. வயசான 
கேரக்டர் டா. 
சப்பாணி: ஏய், என் மயிலுக்கு வயசாயிருச்சுன்னு சொன்னே வகுந்திருவேன். ஆமா... 
புரொபஸர்: ஐயோ... இவன் வேற. கணேஷ், pumpkin வேறே bumpkin வேறே. Bumpkin என்றால் பூசணிக்காய் இல்ல, நளினமில்லாத, பண்படாத, முரட்டுத்தனமான கிராமத்து ஆளு. 
அதாவது simpleton எனச் சொல்வோமே. இதோ இந்த சப்பாணி ஒரு simpleton. அதாவது idiot. Inane, foolish, laughable, ridiculous என பல இணைச்சொற்கள் இதற்கு. 
கணேஷ்: என்ன சார் கிராமத்து 
மக்களை இவ்வளவு கேவலமா சொல்றாங்க? 
புரொபஸர்: ஆமா இது ஒரு stereoptype. கிராமத்து முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என்பதாக அர்த்தம். நகரத்து கனவான்கள், ஸ்டைலான படித்த நகரத்தார் இருக்கிறார்களே, அவர்களை city slickers எனச் சொல்லலாம், அவர்கள் கிராமத்தார் பற்றி இப்படி ஒரு கலாசாரத் தேய் வழக்கை வைத்துள்ளார்கள். ஆனால்   கிராமத்து மனிதர்கள் எளிமையான உண்மையான ஜீவன்கள் என உங்களுக்குத் தெரியும். 
மயிலு: வாத்தியாரே, நல்லா வெளக்குறீங்க. எந்த ஸ்கூலில் பாடம் எடுக்குறீங்க? 
கணேஷ்: ஏம்மா வேறெ வேலையே இல்லியா, ஒண்ணு டாக்டரு இல்ல வாத்தியாரு. 
மயிலு: ம்க்கும்... 
புரொபஸர் வெட்கப்பட்டபடி: டேய்...  அப்படி எல்லாம் சொல்லாதேடா. மயிலு நீ வாம்மா, உனக்கு இந்த வார்த்தைக்குப் பின்னாடி இருக்கிற 
இன்னொரு கதையைச் சொல்றேன்.
மயிலு: சொல்லுங்க சார்... 
புரொபஸர்: நெதர்லாண்ட்ஸ் அப்படீன்னு ஒரு நாடு இருக்குது. அந்த நாட்டு மக்களை Dutch என சொல்வாங்க. 
மயிலு (சிலிர்க்கிறாள்): டச்ச்ச்ச் நல்லா இருக்கு. 
புரொபஸர்: உணர்ச்சிவசப்படாம கேளு. இந்த மக்கள் மீது ஆங்கிலேயருக்கு நல்ல அபிப்ராயம் இல்ல. அவங்களை பண்பாடில்லாத கிராமத்தானுங்கன்னு நினைத்தார்கள். டச்சு மொழியில் boomken என ஒரு சொல் உண்டு. இதன் பொருள் சிறிய மரம். Boomekjin எனும் மற்றொரு டச்சு சொல்லுங்க சிறிய பீப்பாய் எனப் பொருள். ஆங்கிலேயர் டச்சு மக்களை இப்படி பீப்பாய் என கலாய்ப்பதற்காக, குள்ளமான, வேடிக்கையான, தாட்டியான மக்கள் என அவர்களைக் குறிப்பதற்காக bumpkin என 16 -ஆம் நூற்றாண்டில் இருந்து அழைக்க ஆரம்பித்தார்கள். 18-ஆம் நூற்றாண்டில் இருந்து இது country bumpkin என அனைத்து கிராமத்தார்களையும் குறிக்கும் சொல்லானது. Yokel என மற்றொரு இணைச்சொல்லும் இதற்கு உண்டு.
ராணி யாங் மீ வீரபரகேசரியிடம்: உங்களுக்கும் இந்த மயிலுக்கும் அப்படி என்ன கனெக்ஷன் மன்னா? 
வீரபரகேசரி (திடுக்கிட்டு): அட சத்தியமா இல்லம்மா, எனக்கு மயிலை என் மடியில வச்சு தடவிக்கொடுக்கிறாப்ல போட்டோ எடுக்கணும். அதுக்கு...  
ராணி யாங் மீ: ஓ... அப்படியா? 
வீரபரகேசரி: ஐயய்யோ... அப்படி இல்ல. பெயர்க்குழப்பம், ஆட்குழப்பம், a case of mistaken idenitity. அந்த மயிலுன்னு நினைச்சு இதை கூட்டிட்டு வந்திட்டாங்க. நான் பத்தி விட்டுறேன், நீ கவலைப்படாம போம்மா. 
(ராணி அவநம்பிக்கையுடன் போகிறாள்)
அப்போது அமைச்சர் காட்டு மயில்களைக் கொண்டு வருகிறார்.
வீரபரகேசரி: யோவ், இந்த மயிலையும் அந்த மயில்களையும் கலந்து எனக்குப் பின்னால நிக்க வைய்யா. நான் நதிக்கரையில் ஆலோசனையில் மூழ்கி இருக்கிற மாதிரி போட்டோ புடி.
போட்டோஷூட் தொடர்கிறது.

(இனியும் பேசுவோம்)

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT