இளைஞர்மணி

50 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப  சாதனை!

1st Sep 2020 12:00 AM | - எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

விஞ்ஞான உலகத்தை செயற்கை நுண்ணறிவு ஆட்சி செய்யத் தொடங்கியுள்ள காலம் இது. அந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி 50 புதிய கிரகங்களையே கண்டறிந்துள்ளனர் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்.

பொதுவாக பூமிக்கு வெளியே ஒரு கிரகத்தைக் கண்டறிய விண்வெளித் தொலைநோக்கியை விஞ்ஞானிகள் பயன்படுத்துவார்கள். அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் "கெப்லர்' விண்வெளி தொலைநோக்கி வேற்றுக் கிரகங்களைக் கண்டறியும் பணியில் 9 ஆண்டுகள் ஈடுபடுத்தப்பட்டது. அது சேகரித்த ஆயிரக்கணக்கான தரவுகளிலிருந்துதான் இப்போது 50 புதிய கிரகங்களை பிரிட்டனை சேர்ந்த வார்விக் பல்கலைக்கழக வானியல் அறிஞர்களும், கணினி விஞ்ஞானிகளும் கண்டறிந்துள்ளனர். இதற்காக அவர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓர் இயந்திரத்தை வடிவமைத்தனர். 

கெப்ளர் சேகரித்த ஆயிரக்கணக்கான தரவுகளிலிருந்து உண்மையான கிரகங்களை துல்லியமாகப் பிரிக்கும் வழிமுறைகளை அந்த இயந்திரம் கற்றுக் கொள்ள பயிற்சியளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உறுதிப்படுத்தப்படாத பழைய தரவுத் தொகுப்புகளைப் பகுப்பாய்வு செய்து பார்த்தபோது, சூரிய மண்டலத்தில் இன்னும்  50 புதிய கிரகங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

ADVERTISEMENT

மற்ற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் இந்தக் கிரகங்களில், நெப்டியூனைபோல பெரியது முதல், பூமியைவிட சிறியது வரையிலானவை அடங்கும். அவற்றில் சிலவற்றின் சுற்றுப்பாதை 200 நாள்கள் நீளமானதாகவும், சிலவற்றின் சுற்றுப்பாதை ஒரே நாளில் குறுகியதாகவும் இருக்கின்றன.

இதுகுறித்து வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டேவிட் ஆர்ம்ஸ்ட்ராங் கூறுகையில்,   ""கிரகங்களை மதிப்பிடும் முறைகளில் இதற்கு முன்னர் இயந்திர கற்றல் நுட்பத்தை யாரும் பயன்படுத்தியதில்லை. அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 50 புதிய கிரகங்களைக் கண்டறிந்துள்ளோம். எதிர்காலத்தில் கிரகங்களைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் இந்தப் புதிய வழிமுறை உள்பட பல சரிபார்ப்பு நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். தற்போது, அறியப்பட்டுள்ள அனைத்துக் கிரகங்களிலும் சுமார் 30 சதவீதம் ஒரே ஒரு முறையைப் பயன்படுத்தியே சரி பார்க்கப்பட்டுள்ளது. இது சிறந்ததல்ல'' என்றார்.

புதிய கிரகங்களைக் கண்டறியும் நாசாவின் டிரான்சிட்டிங் எக்úஸôபிளானெட் சர்வே சாட்டிலைட் (டெஸ்) தனது முதல்கட்ட பணியை கடந்த ஜூலையில் நிறைவு செய்தது. வானில் சுமார் 70 சதவீத பரப்பை ஆய்வு செய்துள்ள டெஸ், 66 உறுதிப்படுத்தப்பட்ட கிரகங்களையும், கிரகங்களாக இருக்கலாம் என்ற 2100 அமைப்புகளையும் கண்டறிந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட கிரகங்களில் ஒன்று பூமியைப் போன்ற பரப்பளவுடன் வாழ்க்கைச் சூழலையும் கொண்டதாக அறியப்பட்டுள்ளது. மேலும், அக்கிரகம் 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. 2022-ஆம் ஆண்டு வரை டெஸ் தனது பணியை விரிவுபடுத்தியுள்ளது. அக்காலகட்டத்தில் கிரகங்களைப் போன்ற அமைப்புகள் உண்மையான கிரகங்கள்தானா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்வர்.

டெஸ் கண்டறிந்துள்ள தரவுகளை தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்தால் மேலும் பல உண்மைகளை எளிதாகக் கண்டறிய முடியும் என வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போதைய மற்றும் எதிர்கால தொலைநோக்கிப் பணிகளுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நிலையான, திறமையான மதிப்பீட்டு முறைகளை வழங்க முடியும்; முறையாகப் பயிற்சியளிக்கப்பட்டால் இப்போதைய தொழில்நுட்பத்தைவிட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமானதாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT