இளைஞர்மணி

ஒருமுகப்படுத்துவோம்... மனதை!

27th Oct 2020 06:00 AM | -சுரேந்தர் ரவி

ADVERTISEMENT

 

சாலைகளில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே சிலர் செல்வதைக் கண்டிருக்கிறோம். உணவு உண்ணும்போது தொலைக்காட்சி பார்ப்பதையோ அல்லது அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவதையோ சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களைப் பலர் செய்து வருகின்றனர். நேரத்தை மிச்சமாக்கும் நோக்கிலோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ அவ்வாறான செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர்.

அதேபோல், ஒரு செயலில் ஈடுபடும்போது வேறு விஷயம் குறித்து மனதில் நினைத்துக் கொண்டிருப்பது, தற்காலத்தில் முழு கவனம் செலுத்தாமல் எதிர்காலம் குறித்த சிந்தனையிலேயே எப்போதும் இருப்பது எனபலர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர்களால்,  ஒன்றில் கூட முழு கவனம் செலுத்த முடியாமல் போவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

இது அந்நபரின் செயல்திறனைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், தற்போது செய்யும் செயல்களில் கவனச்சிதறலையும் ஏற்படுத்துவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ADVERTISEMENT

ஒவ்வொரு செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. ஒரே நேரத்தில் இரு வேலைகளைச் செய்வதும், மற்ற விஷயங்கள் குறித்து சிந்தித்துக் கொண்டே வேலையைச் செய்வதும் மன அழுத்தம், தூக்கமின்மை, ரத்த அழுத்தத்தில் மாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன.

மேலும், செயல்களில் போதிய கவனமில்லாமல் இருப்பதால்,  குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்னை ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, தற்காலத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தி செயல்களில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. இது சொல்வதற்கு மிகவும் எளிதாக இருந்தாலும், அதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மனதில் வீசும் எண்ண அலைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாலே செய்யும் செயலில் முழு ஈடுபாட்டுடன் இயங்க முடியும். யோகப் பயிற்சி, தியானப் பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவை எண்ண மாற்றங்களைக் கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்துவதில் பேருதவி புரிகின்றன. எனவே, காலை எழுந்தவுடன் திறந்த வெளியில் தேவையான பயிற்சிகளில் ஈடுபடுவது மனதைக் கட்டுப்படுத்தும். நடைபயிற்சியும் பெரும் பலன்களை அளிக்கும்.

மனதை ஒருமுகப்படுத்த முடியாதபடி பல்வேறு எண்ண ஓட்டங்கள் வேகமெடுக்கும்போது, கண்களை மூடி சுவாசத்தின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும். அதே வேளையில், உங்களுக்குப் பிடித்த வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப மனதுக்குள் உச்சரிக்க வேண்டும். இது திடீரென மனம் பல்வேறு விஷயங்களில் அலைபாயும்போது அதைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும்.

அவ்வாறு மனதை ஒருமுகப்படுத்தும்போது நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் மீது கவனம் செலுத்தலாம். கண்களை மூடிக் கொண்டு மின்விசிறியின் சத்தம், தூரத்தில் பாடும் ரேடியோவின் கீதம், பறவைகள் எழுப்பும் ஓசை, காற்றில் ஆடும் கிளைகளின் சத்தம், மலர்களின் வாசம் உள்ளிட்டவற்றின் மீது கவனத்தை செலுத்தலாம். அப்போது நமக்கு எந்த மாதிரியான உணர்வுகள் தோன்றுகின்றன என்பதைக் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்த முயலலாம். 

ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்போதே மனம் வேறு விஷயங்களில் அலைபாயத் தொடங்கினால், அதன் காரணமாக உங்கள் மீதே கோபம் கொள்ளத் தேவையில்லை. மனம் அப்படித் தான் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டு அமைதியடைய வேண்டும். அதன் பிறகு, நிகழ்காலத்திலிருந்து தவறி எதிர்கால கனவுகளுக்கோ அல்லது கடந்தகால நினைவுகளுக்கோ சென்று சேர்ந்த மனதை மீண்டும் நிகழ்காலத்துக்கு அமைதியாக அழைத்து வர வேண்டும்.

மனதை ஒரு குழந்தையைப் போல வழிநடத்தினால், உங்கள் கட்டளைகளுக்கு அது கீழ்ப்படியும். அதன் மீது உங்கள் அடக்குமுறையைத் திணிக்க முயற்சித்தால், உங்கள் எல்லைக்குள் கட்டுப்படாமல் சிதறி ஓடிவிடும். எனவே, கண்ணாடி போன்ற உங்கள் மனதை மிகவும் பொறுமையாக,  கவனத்துடன் கையாளுங்கள். 

எதிர்காலம் குறித்த அதீத பயம், எதிர்காலம் பற்றிய தொடர் சிந்தனைகள், வாழ்க்கையின் மீதான நம்பிக்கையின்மை, கடந்த கால நினைவுகள், தோல்விகள் குறித்த கவலை, பிரிவின் துயரம், இழப்பின் ஆற்றாமை உள்ளிட்டவை தற்காலத்தில் நாம் மேற்கொள்ளும் செயல்கள் மீது முழு ஈடுபாட்டைச் செலுத்த முடியாததற்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.

நமது மனதில் தோன்றும் எண்ணங்களே நம் நடவடிக்கைகளுக்கும் அடிப்படை மூலங்களாக அமைகின்றன. நமது எண்ணங்கள் சீராக இல்லையெனில் நம் செயல்பாடுகளும் பாதிக்கப்படும். மனதை ஒருமுகப்படுத்தி வேலையில் ஈடுபடுவது, மனநலத்தை மட்டுமல்லாமல் உடல் நலத்தையும் மேம்படுத்தும். 

எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவது- மனஅழுத்தத்தைக் குறைப்பது, ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, தரமான தூக்கத்தை அதிகரிப்பது ஆகியவற்றுக்குப் பேருதவியாக இருக்கும். எனவே, மனதைக் கட்டுக்குள் வைப்போம். எண்ண ஊற்றைக் கட்டுப்படுத்துவோம்.  வாழ்க்கையை இன்பமயமானதாக்குவோம். 

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT