இளைஞர்மணி

நீடித்த வளர்ச்சிக்கான... இளம் தலைவர்!

27th Oct 2020 06:01 AM | - ந.ஜீவா

ADVERTISEMENT

 

உலக அளவில் "நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை' நோக்கமாகக் கொண்டு செயல்படும் இளம் வயதினரைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை "இளம் தலைவர்களாக' அறிவிக்கிறது ஐ.நா. சபை.

ஐ.நா.சபையின் செயல் தலைவரின் தூதராக இளைஞர்கள் மத்தியில் இந்த "இளம் தலைவர்கள்' செயல்படுவார்கள். அவ்வாறு அறிவிக்கப்பட்டவர்கள் அவர்களைப் போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் இளம் வயதினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். நீடித்த வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

அதென்ன நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு?

ADVERTISEMENT

வறுமையை முடிவுக்குக் கொண்டு வருதல், பட்டினியை முடிவுக்குக் கொண்டு வருதல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், வேளாண்மை வளர்ச்சியை மேம்படுத்துதல், தரமான கல்வி, ஆண், பெண் சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம், தண்ணீர்ப் பற்றாக்குறையை நீக்குதல், நவீன ஆற்றலை வளர்த்தல், பொருளாதார வளர்ச்சி, வேலைப் பாதுகாப்பு, தொழில்மயமாதல், புதிய கண்டுபிடிப்புகள், நாடுகளுக்கிடையே சமத்துவம், நுகர்வு, விநியோகம் ஆகியவற்றில் வளர்ச்சி, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வளர்ச்சி அடைவதே ஐ.நா.சபை நிர்ணயித்துள்ள நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு.

இந்த இலக்குகளை மையமாகக் கொண்டு, உழைக்கும் இளம் வயதினரை, அதாவது 18 வயதிலிருந்து 29 வயதுக்குள் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை இளம் தலைவர்களாக அறிவிக்கிறது ஐ.நா.சபை. 2020 -ஆம் ஆண்டுக்கான இளம் தலைவர்களாக உலக அளவில் அறிவிக்கப்பட்ட 17 பேர்களில் இந்தியாவைச் சேர்ந்த 18 வயது உதித் சிங்காலும் ஒருவர்.

உதித் சிங்கால் புதுதில்லியில் உள்ள பிரிட்டிஷ் ஸ்கூலில் பிளஸ் டூ படிக்கிறார். இவர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான செயல்களில் ஈடுபட்டதால், இளம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகமாகிவிட்ட இக்காலத்திலும் கூட, கண்ணாடிப் பாட்டில்களும் அதிகமாகவே இருக்கின்றன. மது பாட்டில்கள், குளிர் பானங்களின் பாட்டில்கள், மருந்து பாட்டில்கள் எல்லாம் அநேகமாக கண்ணாடிப் பாட்டில்களாகவே இருக்கின்றன. கண்ணாடிப் பாட்டில்களில் உள்ளவை தீர்ந்ததும் நாம் அவற்றைக் குப்பையில் போடுகிறோம். அப்படி குப்பையில் போடப்பட்டவை மண்ணில் மக்காது. அவை மக்கி, மண்ணோடு மண்ணாகக் கலக்க 10 லட்சம் ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். இதனால் சுற்றுச்சூழல் சீர் கேடு ஏற்படும்.

இதை எப்படித் தடுப்பது என்று யோசித்தார் உதித் சிங்கால்.

முதலில் எல்லாம் தெருவில் கூவிக் கொண்டே வந்து பாட்டிலுக்கு ஒன்றிண்டு ரூபாய்கள் கொடுத்து, கண்ணாடி பாட்டில்களைச் சேகரித்துச் செல்பவர்கள் இருந்தார்கள். அவர்கள் இப்போது வருவதில்லை. அதிகமான பாட்டில்களைச் சேகரித்துச் சென்றால் அவற்றைப் பாதுகாக்க பெரிய இடம் தேவை. கண்ணாடிப் பாட்டில்களை மறு சுழற்சி செய்வதும் குறைவாகவே நடைபெறுகிறது. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நிறைய பாட்டில்களைக் கொண்டு செல்லும் செலவும் அதிகம். இவற்றால் கண்ணாடி பாட்டில்களைச் சேகரிப்பவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள்.

இதனால் காலி பாட்டில்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. அவற்றை குப்பைத் தொட்டியில் வேறு வழியின்றி போடுகிறார்கள். அது மண்ணில் மக்காமல் சுற்றுச்சூழலை நாசம் செய்கிறது.

இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த உதிச் சிங்கால் இணையதளங்களில் அதைப் பற்றி தேடினார். நியூசிலாந்தில் உள்ள எக்ஸ்பெலிகோ என்ற நிறுவனம் கண்ணாடிப் பாட்டில்களை நொறுக்கி மணலாக மாற்றும் இயந்திரத்தைத் தயாரிப்பதைத் தெரிந்து கொண்டார்.
""நியூசிலாந்த் ஹை கமிஷனின் உதவியுடன், அனுமதியுடன் இந்த இயந்திரத்தை என்னால் வாங்க முடிந்தது. சிட்டி பேங்க் கடன் அளித்தது. இறக்குமதிக்கான வரி இல்லாமல் இயந்திரத்தின் விலை மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் (4000 நியூசிலாந்து டாலர்) ஆனது. 2018 - ஆம் ஆண்டின் இறுதியில் எனது "கிளாஸ்2சேன்ட்' என்ற "வீணாகுதல் இல்லாத சுற்றுச்சூழல் முறைமை' நிறுவனத்தைத் தொடங்கினேன்'' என்கிறார் உதித் சிங்கால்.

இந்த இயந்திரம் 10 நொடிகளுக்குள் ஒரு கண்ணாடிப் பாட்டிலை மணலாக மாற்றிவிடுகிறது. 750 மி.லி. கொள்ளளவு உள்ள ஒரு பாட்டிலிலிருந்து 838 கிராம் மணல் கிடைக்கிறது.

8000 டன் குப்பைகளிலிருந்து 80 டன் கண்ணாடிப் பாட்டில்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.

உதித் சிங்காலின் முயற்சியின் காரணமாக 8000 கண்ணாடிப் பாட்டில்கள் இந்த இயந்திரத்தின் உதவியுடன் நொறுக்கப்பட்டு 4,815 கிலோ எடையுள்ள உயர்தரமான சிலிகா மணலாக மாற்றப்பட்டது. இந்த மணலில் 76 சதவீதம் சிலிகா உள்ளது. இந்த சிலிகா மணலை கட்டுமான நிறுவனங்களுக்கு அளிக்கிறார் உதித் சிங்கால்.

"" வீட்டின் மேல்தளத்திற்கான காங்கிரீட் போடும்போது, ஆற்று மணலைச் சிமெண்டுடன் கலந்து போடுவார்கள். அப்படிப் போடப்பட்ட காங்கிரீட் இறுகுவதற்கு குறைந்தது 8 நாட்களாகும். ஆனால் இந்த கண்ணாடி மணலைப் பயன்படுத்தினால், ஒரே நாளில் பாறை போல இறுகிவிடுகிறது. இந்த மணலைப் பயன்படுத்தி செங்கல் செய்யலாம்; சாலைகளைப் பழுதுபார்க்கலாம்; கடற்கரைகளில், குழிப்பந்து மைதானங்களில் தேவையான கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தலாம். பலவிதமான வண்ணங்கள் உள்ள பாட்டில்களை நொறுக்கும்போது பலவிதமான வண்ணங்களில் மணல் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி கட்டடங்களை அலங்கரிக்கலாம்'' என்கிறார் உதித் சிங்கால்.

இந்த இயந்திரத்தின் மொத்த விற்பனையாளராகவும் உதித் சிங்கால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

""உலக அளவில் ஐ.நா.சபை ஏற்படுத்த நினைத்திருக்கும் மாற்றங்களுக்கு இளம் தலைவர் என்கிற முறையில் தீவிரமாக உழைப்பேன். நீடித்த வளர்ச்சிக்கான பாதையில் செல்ல இளைய சமுதாயத்தினரை ஊக்கப் படுத்துவேன்'' என்கிறார் உதித் சிங்கால்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT