இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல்: தகராறு கடக்கும் திறன் - 20

27th Oct 2020 06:00 AM | சுப. உதயகுமாரன்

ADVERTISEMENT


தகராறு என்பது தவறானது அல்ல. உண்மையைச் சொல்லப் போனால், மனித வாழ்க்கைக்கு தகராறு மிகவும் இன்றியமையாதது. எந்த உறவு ஆழமானதோ, நெருக்கமானதோ, அதில்தான் தகராறுகள் எழும்; எழ வேண்டும். தகராறுகள் அந்த உறவுகளை இறுக இணைக்கும் பாலமாக, பசையாகப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அருகிலே அமர்ந்திருப்பவருடன் ஒரு தகராறு வருகிறது. அதை நம்மில் பெரும்பான்மையோர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
காரணம் அவருக்கும், நமக்கும் கடந்த காலம் என்று ஒன்று இருக்கவில்லை. அந்தப் பயணம் முடிவடையும்போது, அவருக்கும், நமக்கும் எந்தத் தொடர்பும் இருக்கப் போவதுமில்லை. அவருக்கும் நமக்கும் ஒட்டோ உறவோ, உணர்வார்ந்த பிணைப்போ எதுவுமே கிடையாது. ஊர், பேர் கூடத் தெரியாத நிலையில் அவரவர் திசையில் அப்படியே பிரிந்து போவது மிக எளிதானது.
இம்மாதிரியான தகராறுகளில் நாம் ஒரு கழுகாக இருக்க வேண்டும்; இயங்க வேண்டுமென்று அண்மையில் எங்கோ படித்தேன்.
சக்திமிக்க கழுகுடன் சாதாரண காகம் நேரடியாக மோதாமல், அதன் மீதேறி அமர்ந்து கொண்டு கழுத்தில் கொத்தி தாக்குதல் நடத்துமாம். ஆனால் கழுகோ காகத்தைக் கண்டுகொள்ளாமல், எதிர்த்தாக்குதல் நடத்தி தன் கவனத்தையும், ஆற்றலையும் வீணடிக்காமல், வேறோர் உத்தியைக் கையாளுமாம்.
அதாவது, காக்கை முதுகில் ஏறி உட்கார்ந்ததும், கழுகு உயர உயரப் பறக்கத் தொடங்குமாம். உயரத்திற்கு கழுகு போகப் போக, காக்கை மூச்சுவிடச் சிரமப்பட்டு, உயிர்க்காற்று குறைவானவுடன் தடுமாறிக் கீழே விழுமாம்.
மனிதர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ளலாம். சாதாரண காக்கைகள் உங்களைத் தொந்தரவு செய்தால், நீங்களும் இன்னொரு காகமாக மாறாமல், "நான் ஒரு கழுகு' என்று எப்போதும் நினைத்துக் கொள்ளுங்கள். காகங்களோடு சமமாக நின்று சண்டை போடாதீர்கள். உங்கள் உயரத்துக்குத் தாவிச் செல்லுங்கள். காகங்கள் நிலை தடுமாறிக் கீழே விழுந்து காணாமல் போய் விடுவார்கள்.
நேர்மாறாக, உங்கள் பெற்றோர், உடன்பிறந்தோர், வாழ்க்கைத்துணை, குழந்தைகள், அல்லது உடன் பணிபுரிபவரோடு ஒரு பிணக்கு வந்தால், மேற்கூறியபடி தூக்கி எறிந்துவிட்டுப் போய் விட முடியாது.
ஏனென்றால் ஒருவருக்கொருவர் உறுதியான தொடர்பு இருக்கிறது. உங்களிருவரின் பின்னே ஒரு வரலாறு இருக்கிறது; நினைவுகள் இருக்கின்றன; உணர்வுகள் இருக்கின்றன. உங்கள் முன்னால் ஒரு நீண்ட எதிர்காலம் பரந்து விரிந்து கிடக்கிறது.
உதாரணமாக, கணவன்-மனைவி உறவினை எடுத்துக் கொள்வோம். இது ஓர் ஆழமான அந்நியோன்யமான உறவு. அனுபவங்கள், ஆசைகள், கனவுகள், நம்பிக்கைகள், குழந்தைகளின் எதிர்காலம், குடும்ப உறவுகள் என எத்தனையோ விடயங்களை இருவருமாக இணைந்து கையாளும் இந்த உறவுக்குள் தகராறுகள் எழுவது எளிது, இயற்கை, மரபு.
கணவன்-மனைவிக்குள் தகராறு ஏதும் நிகழவில்லை என்றால்தான் பிரச்னை. ஒரு கணவன் தன் மனைவியோடு தகராறு எதுவும் எழாமல் பார்த்துக் கொண்டு, அம்மணி சொல்வதற்கெல்லாம் "ஆமாம்' போட்டாரென்றால், ஏதோ மாற்று ஏற்பாடு செய்துவிட்டார் என்றே கொள்ள வேண்டும்.
வாழ்வின் தகராறுகளைப் பொறுத்தவரை, நம்மில் பலருடைய அணுகுமுறை கீழ்க்காணும் ஐந்து தீர்வுநிலைகளில் ஒன்றாக இருக்கும். ஒன்று, எதிர்த்தரப்பு மிக உறுதியாக இருப்பதைப் பார்த்து பயந்தோ அல்லது பிரச்னை வேண்டாம் என்றோ ஒதுங்கிப் போவது.
இரண்டு, ஏதாவதொரு கட்சி வன்முறையைப் பிரயோகித்து தகராறைத் தனக்குச் சாதகமாகத் தீர்த்துக் கொள்வது. மூன்று, காவல்துறையின் கட்டளைக்கு அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அடிபணிந்து, அவர்கள் ஆணைப்படி வழக்கினை முடித்துக் கொள்வது. நான்கு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தகராறைச் சமரசமாய் முடிவுக்குக் கொண்டு வருவது.
ஐந்தாவது, தகராறை மாற்றியமைத்து அதனைக் கடந்து செல்வது. இது மேற்காணும் நான்கு நிலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.
தகராறு செய்யும் கட்சிகள் ஒரு நேரடிக் கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு, தங்கள் இலக்குகளை ஒருவரோடொருவர் பரிமாறிக் கொண்டு, ஆழமான புரிதலோடு தகராறை மாற்றியமைத்து, கடந்து செல்வது என்பது ஓர் அற்புதமான தீர்வு.
வாழ்வியல் தகராறுகளை அலசி ஆராய்ந்து புரிந்துகொண்டு முறையாகத் தீர்வுகாண, அறிஞர் யொஹான் கால்டுங்க் ஆராய்ந்துணர்தல்-முன்னறிவித்தல்-நிவாரணம் (டயக்னஸிஸ்- பிராக்னஸிஸ்- தெரபி) எனும் ஓர் அணுகுமுறையை முன்மொழிகிறார். ஒரு தேர்ந்த மருத்துவர் போன்று சிந்தித்துச் செயல்படுவதை, கால்டுங்க் ஆ-மு-நி அலசல் (டிபிடி அனலிஸிஸ்) என்றழைக்கிறார்.
இந்த நார்வே நாட்டு அறிஞரோடு நான் மாணவனாக, நண்பனாக, இணை எழுத்தாளராக இணைந்து செயல்பட்டபோது, நமது திருக்குறள் வழங்கும் அறிவுரைகள் பற்றி அவரிடம் சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறேன். தனி
மனித உடல்நலத்துக்கான மருத்துவ அணுகுமுறைகள் பற்றி திருவள்ளுவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று
மருத்துவ நூலோர் கணித்துள்ள காற்று முதலான மூன்று முக்கியமானவற்றுள் ஒன்று அளவுக்கு அதிகமானாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும்.
அப்படி நோய்வாய்ப்படும்போது, நான்கு முக்கியமான கூறுகளின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்.
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செய்வானென்று 
அப்பால் நாற்கூற்றே மருந்து
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிலிருந்து மருந்து கொடுப்பவர் என மருத்துவம் நான்கு வகையாக அமைந்துள்ளது.
அந்த நோய்க்கான சிகிச்சையின்போது, என்னென்ன விடயங்களை நாம் கவனிக்க வேண்டும் என்றும் வள்ளுவர் அறிவுரைக்கிறார்.
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவத் தலையீட்டிற்கான நேரம் போன்றவற்றைக் கருத்திற்கொண்டு மருத்துவம் கற்றவர் செயல்பட வேண்டும்.
பரந்துபட்ட சிகிச்சையின்போது, நாம் கருத்திற் கொள்ள வேண்டியவற்றையும் குறளாசான் குறிப்பிடுகிறார்.
நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
நோய் இன்னதென்று கண்டறிந்து, நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதைத் தணிக்கின்ற வழியைத் தேர்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாகச் சிகிச்சை செய்ய வேண்டும்.
ஒருவரின் உடல் நோயை, உள நோயைப் போலவே, நம்முடைய வாழ்வியல் தகராறுகளையும் நீங்கள் கண்ணுறலாம். அவற்றை ஒரு நோயாகப் பாவித்து, குறள் வழியில் ஆய்ந்தறிந்து, தீர்க்கும் வழிகளைத் தேடிக் கொள்ளலாம்.
அந்தப் பிரச்னையில் ஏதாவதொன்று அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கிறதா என்று பாருங்கள். அதுபோல, நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து மருந்து கொடுப்பவர் போன்ற விவரங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். நோயாளியின் தன்மைகள், நோயின் தன்மைகள், தலையீட்டிற்கான நேரம் போன்றவற்றை அறிந்து, நோயைக் கண்டறிந்து, அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கான நிவாரணத்தைத் தேர்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாக சிகிச்சை செய்யுங்கள்.
இந்த மருத்துவரின் ஆ-மு-நி அலசல் முறையைப் போலவே, ஒரு வேளாண் வல்லுநராகவும் சமூக-பொருளாதார-அரசியல் தகராறுகளை நாம் பகுத்தறியலாம். பண்படுத்தி, உழுது, உரம், இலைதழை, இடுபொருட்கள் போட்டு, நீர்ப்பாய்ச்சி ஒரு விளைநிலம் விவசாயத்துக்குத் தயார்படுத்தப்படுவதுபோல, மனித உரிமைகள், கண்ணியம், அன்பு, அறம் போன்றவற்றால், ஒரு சமூகம் சமாதானகரமான வாழ்வுக்கு அணியமாக்கப்பட வேண்டும்.
தேர்ந்த, வீரியமான விதைகளை விதைத்து, பயிர் முளைக்கச் செய்வதுபோல, சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம், சமாதானம் போன்ற விழுமியங்களைச் சமூகத்தில் விதைத்து, உயிர் தழைக்கச் செய்ய வேண்டும். கரை உயர்த்தி, களை பிடுங்கி, கண்ணீரால் காத்து நிற்கும் விவசாயி போல, சமூகம் உயரிய சட்ட திட்டங்களோடு அரசியல் மேலாண்மை செய்யப்பட வேண்டும்.
"பண்படுத்தல், பயிரிடுதல், பாதுகாத்தல்' எனும் இம்மூன்று நிலைகளைத் தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும் போற்றி நிற்போம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com 

ADVERTISEMENT

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT