இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 19: தகராறு கடக்கும் திறன் - 1

20th Oct 2020 06:00 AM | சுப. உதயகுமாரன்

ADVERTISEMENT


மனிதருக்குள் தகராறுகளைச் சந்திக்காத தரப்பினர் இரண்டே இரண்டுபேர்தான்; இறந்து போனவர்களும், இன்னும் பிறக்காதவர்களும். மற்றவர்கள் அனைவருமே அன்றாட வாழ்வில் தகராறுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். தகராறுகள் வாழ்வின் நித்திய யதார்த்தம் என்றால், அவற்றைத் திறம்படக் கையாள்வது ஓர் அத்தியாவசியத் திறன் ஆகிறது. ஆனால் இந்தத் திறனைப் பெறுகிற பாடத்திட்டத்தை அல்லது பயிற்சியை பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ, வேலையிடங்களிலோ நாம் வழங்கியதில்லை.
மன அமைதி என்பது வாழ்வில் தகராறுகளே இல்லாத நிலையால் ஏற்படுவது அல்ல. மாறாக, அவற்றைத் திறம்படக் கையாளும் திறனிலிருந்து முகிழ்ப்பது. தகராறுகளை சாமர்த்தியமாகக் கையாள்வது என்பது அறிவார்ந்த முயற்சியினாலும், முறையான பயிற்சியினாலும் நாம் பெறுகிற மிக மிக முக்கியமான திறனாகும்.
நான் ஐந்தாண்டு காலம் ஆய்வு உதவியாளராகவும், அதன் பின்னர் சக செயற்பாட்டாளராகவும், இணை நூலாசிரியராகவுமெல்லாம் இணைந்து பணியாற்றியிருக்கும் என்னுடைய பேராசிரியர் யொஹான் கால்டுங், தகராறு என்பதை மிகத் துல்லியமாக விவரிக்கிறார்: "உங்களுடைய இலக்குக்கும், உங்கள் எதிராளியுடைய இலக்குக்கும் இடையே எழும் பொருந்தாத்தன்மை, சாதகமற்ற மனப்பாங்குகளையும், செயல்பாடுகளையும், முரண்பாடுகளையும் உருவாக்கும்போது, ஒரு தகராறு உருப்பெறுகிறது. "மனப்பாங்கு - செயல்பாடு - முரண்பாடு' எனும் மூன்று அம்சங்களும் ஒரு முக்கோண உறவு கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்' என்பது போன்று, ஒருவரின் மனப்பாங்கு எதிர்மறையாக இருக்கும்போது, அவரின் செயல்பாடுகளில் பிரச்னைகள் எழுந்து, வாழ்வில் முரண்பாடுகள் உருவாகலாம்.
அதேபோல, "மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலி அறுக்க வேண்டும்' என்பது போன்று, ஒருவரின் எண்ணங்கள், செயல்பாடுகள் வன்முறை வயப்பட்டவையாக இருந்தால், முரண்பாடுகள் எழுவது தவிர்க்க முடியாதது. அம்முரண்பாடுகள் கோபம், வெறுப்பு, பழிவாங்குதல் போன்ற எதிர்மறை மனப்பாங்குகளையே உருவாக்கும் என்பது தெளிவு.
ஒரு தகராறு மேற்குறிப்பிட்ட எந்தவொரு புள்ளியிலிருந்தும் தொடங்கலாம் என்பதை பாரதியார் அழகாக விவரிக்கிறார்:
ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்,
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.
முரண்பாடு ஒன்றினை நேரிட்டுக் கொண்டிருப்பவர்கள் எதிர்மறை மனப்பாங்குகளுக்கும், வன்முறை தோய்ந்த எதிர்மறைச் செயல்பாடுகளுக்கும் பலியாவதும் சாத்தியமே.
ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களைப் பற்றி, அல்லது ஒரு குறிப்பிட்ட பிரச்னை பற்றி நீங்கள் தவறான மனப்பாங்கு கொண்டிருக்கும்போது, அது உங்களுடைய செயல்பாடுகளை வன்முறைமயமாக்கி, ஒரு பெரும் முரண்பாட்டுக்கு, பேரழிவுக்கு இட்டுச் செல்கிறது.
யூதர்கள்தான் ஜெர்மானிய மக்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கருதிய ஹிட்லர், யூதர்களை வெறுக்கத் தொடங்கி,
லட்சக்கணக்கில் அவர்களைக் கொன்றொழித்து,
ஒரு வரலாற்றுத்தகராறை உருப்பெறச் செய்தது ஓர்
உலகளாவிய உதாரணம்.
அதேபோல, ஒருவரின் வன்முறை தோய்ந்த செயல்பாடுகள், ஒரு பெரும் முரண்பாட்டை எழச்செய்து, எதிர்மறை மனப்பாங்குகளை உருவாக்கலாம். சாதாரண ஒரு வரப்புச்சண்டையில் ஒருவர் தன்னிலை இழந்து கைகலப்பில் ஈடுபட்டு, அதை குற்றவியல் பிரச்னையாக மாற்றி, அண்டைவீட்டாரோடு தீராப் பகைமையில் வீழ்வது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஒருவரோடான ஒரு முரண்பாடு அவரைப் பற்றிய எதிர்மறை மனப்பாங்குகளை முகிழ்க்கச் செய்து, நாளடைவில் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கலாம். உடன் வேலை செய்பவர்களோடு, உற்ற நண்பர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதனால் கோபத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகி, வன்முறையைக் கைக்கொண்டு கொலைக் குற்றங்கள் புரியும் செய்திகளை நாம் அன்றாடம் கேள்விப்படுகிறோம்.
தகராறு என்பது பல நிலைகளில் எழலாம். ஒரு தனிமனிதனுக்குள் எழும் ஒன்றைச் செய்வதா, வேண்டாமா எனும் குழப்பமும், தர்மசங்கடமும் கூட ஒருவிதத்தில் தகராறுதான். இரு நபர்களுக்கிடையே எழும் தகராறுகளை "சிறுதகராறுகள்' என்றழைக்கலாம். பால், தலைமுறை, வகுப்பு, இனம், மொழி, மதம், சாதி, தேசியம் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு சமூகத்தில் எழும் தகராறுகளை "குறுந்தகராறுகள்' எனக் கொள்ளலாம். இரு சமூகங்களுக்கிடையே அல்லது இரு நாடுகளுக்கிடையே எழும் தகராறுகளை "பெருந்தகராறுகள்' என்று குறிப்பிடலாம். இன்னும் ஆழமான இரு நாகரீகங்களுக்கிடையே எழும் தகராறுகளை "மாபெரும் தகராறுகள்' எனச் சொல்லலாம்.
அதேபோல, தகராறுகளைக் கையாளுதலையும் பல்வேறு நிலைகளில் பார்க்கலாம். "தகராறு தீர்வு' என்பது ஒரு தகராறை முற்றிலுமாகத் தீர்த்து வைத்து, அதனை முழுமையாக மறையச் செய்துவிட முயற்சிக்கிறது. "தகராறு மேலாண்மை' என்பது தகராறுகளைக் கட்டுப்படுத்தி, நேர்த்தியாக நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது. ஆனால், "தகராறு மாற்றியமைத்தல்' ( கான்ஃபிளிக்ட்ஸ் ட்ரான்ஸ்ஃபார்மேஷன்) என்பது மேற்கண்ட முறைகளிலிருந்து மாறுபட்டு, ஒரு தகராறை எப்படி மாற்றியமைத்து அதனை நேர்மறையாகக் கடந்து செல்லலாம் என பார்க்கிறது.
ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். உங்களின் மகனும், மகளும் ஓர் ஆரஞ்சுப் பழத்துக்காகச் சண்டையிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த தகராறு நீதி பரிபாலனத்துக்காக உங்களிடம் வருகிறது.
நீங்கள் மேம்போக்கான தகராறு தீர்விலே மட்டும் கவனம் செலுத்துபவராக இருந்தால், பழத்தை இரண்டு
துண்டுகளாக வெட்டி, ஆளுக்கொன்றைக் கொடுத்து, பிரச்னைக்கு தீர்வு கண்டுவிட்டதாகக் கொள்வீர்கள்.
தகராறு மாயமாக மறைந்துவிட்டதாக எண்ணிக் கொள்ளும் நீங்கள், அந்த அண்ணன்-தங்கை உறவில் விழுந்துவிட்ட கீறல், விரிசல், அவநம்பிக்கை போன்றவற்றைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விட்டுவிடுகிறீர்கள்.
மாறாக, நீங்கள் காவல் நிலையம், நீதிமன்றம் போல சிந்தித்து, தகராறு மேலாண்மையில் மட்டும் நம்பிக்கை உடையவராக இருந்தால், உங்கள் அணுகுமுறை சற்றே வேறுபட்டிருக்கும். கடினமாக மேலாண்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால், பழத்தைப் பிடுங்கி நீங்களே வைத்துக் கொண்டு இருவரையும் துரத்தி விடுவீர்கள். அல்லது மென்மையாக மேலாண்மை செய்ய விரும்பினால், இருவரில் ஒருவரிடம் பழத்தைக் கொடுத்துவிட்டு, இன்னொருவரை விட்டுக் கொடுக்க, விலகிச் செல்ல வற்புறுத்துவீர்கள்.
நீங்கள் இன்னும் கொஞ்சம் மேம்பட்ட நீதிமானாக இருந்தால், அந்த தகராறை படைப்புத்திறனோடு மாற்றியமைத்து, அதனை ஓர் அற்புதமான வாய்ப்பாக மாற்றி, மேற்படி சகோதரன்-சகோதரி உறவை ஆழப்படுத்தி, அந்த தகராறைக் கடந்து செல்ல வைப்பது எப்படி என்று சிந்திப்பீர்கள், செயல்படுவீர்கள்.
"வெற்றி - வெற்றி தீர்வு' சிந்தனையைக் கைக்கொண்டு, இரண்டு தரப்புக்கும் என்னென்ன தேவைகள் என்பதைப் பற்றி நீங்களாகவே சில அனுமானங்களை ஏற்படுத்திக் கொண்டு அரைகுறைத் தீர்ப்பு ஒன்றை அவசரமாக வழங்காமல், தகராறு கட்சிகளிடமே ஒரு கருத்துப்பரிமாற்றம் நடத்தி, அவர்களின் உண்மைத் தேவைகளைக் கேட்டறிவீர்கள்.
மகன் பழச்சாறு தயாரிக்க பழச்சுளைகள் வேண்டும் என்றும், மகள் "ஜாம்' தயாரிப்பதற்கு பழத்தோல் வேண்டும் என்றும் கோருகிறார்கள் என்றால், பிரச்னையின் தீர்வு மிக எளிதாக இருக்கிறது. இருவருமே வெற்றி பெறுகிறார்கள்.
ஒருவேளை, இருவருமே ஒரே விடயத்துக்காகச் சண்டையிட்டால், இரண்டு குழந்தைகளும் அந்தப் பழத்தைத் தங்களுக்குள் சமமாகப் பங்கு வைத்துக் கொண்டு, இருவருமே சேர்ந்து அந்தப் பழத்தின் வித்துகளுடன் ஒன்றிரண்டு ஆரஞ்சு மரங்களையே வளர்க்கச் செய்வது இன்னும் உயர்ந்த தீர்வாக அமையும். அண்ணன்-தங்கை உறவு உறுதிப்படுத்தப்படுவது மட்டுமல்ல, உயர்ந்தோங்கி வளரவும் செய்யும்.
சீன மொழியில் தகராறைக் குறிக்க இரண்டு குறியீடுகள் கொண்ட ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றுள் முதல் குறியீடு "அபாயம்' என்பதையும், இரண்டாவது குறியீடு "வாய்ப்பு' என்பதையும் முன்வைக்கின்றன. மனித உறவு ஒன்றில் ஒரு தகராறு எழுந்து, அது சரியாக நிர்வகிக்கப்படாதபட்சத்தில், அவ்வுறவு முறிந்துபோகும் ஆபத்து எழுகிறது. மாறாக, அந்த தகராறை சாதுர்யமாகக் கையாண்டு, தொடர்புடைய அனைவருக்கும் திருப்தியளிக்கும் விதத்தில் தீர்வு கண்டு, அதனைக் கடந்துசென்றால், அந்த உறவு இன்னும் பலப்படும் வாய்ப்பினை அது உருவாக்குகிறது.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

ADVERTISEMENT

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT