இளைஞர்மணி

ஒத்தி போடு... ஓடிப்போகாதே!

20th Oct 2020 10:00 AM | - கே.பி. மாரிக்குமார் 

ADVERTISEMENT

எப்படியாயினும் கடினமான வாழ்க்கை உருவாகலாம். அங்கு எப்போதும் உங்களால் செயல்பட மற்றும் வெற்றி பெற முடிந்த ஏதாவது ஒன்று காத்திருக்கும்.

- ஸ்டீபன் ஹாக்கிங் 

 

நம் மனம் கையாளும் மிகப்பெரிய தந்திரங்களில் ஒன்று ஒத்தி போடுவது. நம்மில் பலருக்கு இந்த நோய் உண்டு. ஆங்கிலத்தில் இதை டிஃபெர்,  டிலே, போஸ்ட்போன்,  ப்ராகிராஸ்டினேட்  என்றெல்லாம் சொல்வார்கள். 

ADVERTISEMENT

ஒத்திபோடும் மனநிலை குறித்து பரவலாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. 
ஓர்  உணவக உரிமையாளர்   தன்னுடைய உணவகத்திற்கு வெளியே வீதியில் ஞானியைப் போன்று வந்த வயதானவரை அணுகி, ""ஐயா, தாங்கள் எனக்கு ஏதாவது ஞான கருத்துகளை வழங்க வேண்டும்'' என்றாராம். ஞானியும் சில கருத்துகளை அவருக்குச் சொன்னாராம்.

அந்த உரிமையாளர் அதைக் கேட்டுவிட்டு, ""உங்கள் கருத்துகள் நன்றாக உள்ளன. ஆனால், எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் வளர்ந்தவுடன் இந்த உணவகத்தை அவனிடம் விட்டுவிட்டு பிறகுதான் முயற்சி செய்து பார்க்க வேண்டும்'' என்றாராம்.

""சரி... பரவாயில்லை'' என்று சொல்லிய ஞானி அவரிடம் எனக்குப் பசியாக இருக்கிறது. நான் உணவருந்தி ஓய்வெடுக்க வேண்டுமே'' என்றாராம். அதற்கு உணவக உரிமையாளர் , ""அதற்கென்ன ஐயா... இதோ தெருக் குழாயில் தண்ணீர் வருகிறது. அதைக் குடித்துவிட்டு எதிரில் உள்ள மரத்தடியில் படுத்துக்கொள்ளுங்கள்''  என்று சொன்னாராம்.

சிரித்துகொண்டே அந்தப் பெரியவர்  அவ்விடத்திலிருந்து போய்விட்டார். ஆண்டுகள் கடந்தன. இப்போது உணவகம் வளர்ந்திருந்தது. உரிமையாளர் இருக்கைக்கு அருகில் மற்றொரு இருக்கை போடப்பட்டு அதில் அவருடைய மகனும் அமர்ந்து உணவகத்தை நடத்திக் கொண்டிருந்தனர். மீண்டும் அதே படலம் அரங்கேறியது - ஞானக் கருத்துகள், பசி, குழாய், மரத்தடி நிழல் என்று. மீண்டும் தண்ணீரைக் குடித்து விட்டு அங்கிருந்து சென்ற அந்தப் பெரியவர் பல ஆண்டுகள் கடந்து அங்குவந்தார். உணவக உரிமையாளர் இப்பொழுது கிழவனாகியிருந்தார். அவருக்கு அவனுடைய மகன், உணவகத்தின் வெளியே ஒரு நாற்காலியைக் கொடுத்து உட்கார வைத்திருந்தான். ஞானியைப் பார்த்ததும் கிழவன் எழுந்து ஓடிவந்தார். மீண்டும் அதே படலம் அரங்கேறியது. ஞானக் கருத்துகள், பசி, குழாய், மரத்தடி நிழல் .... கருத்துகள் நன்றாக இருக்கிறது... ஆனால், இப்பொழுது முடியாது  என்று அதே பல்லவியோடு முடிந்தது. 

ஆண்டுகள் கடந்தன. மீண்டும் வந்தார் ஞானி. உணவகத்தில் முதலாளியைக் காணவில்லை. அவருடைய புகைப்படம் மாலை போட்டு மாட்டப்பட்டிருந்தது. மகன் ஒரு நாயைக் கல்லால் அடித்து விரட்டிவிட்டு உணவகத்திற்கு உள்ளே போனான். நாய் இவரைப் பார்த்ததும் ஓடி வந்து வாலை ஆட்டியது.

அது யாரென்று ஞானி புரிந்து கொண்டார். தன்னிடம் இருந்த ஒரு தடியால் அதன் தலையில் ஒரு போடு போட்டார். நாய் இப்பொழுது பேசியது, ""அய்யா,  நீங்கள் சொன்னதை நான் கேட்காமல் போய்விட்டேன். இப்போது என் மகனே என்னை கல்லால் அடிக்கிறான். நான் விடுதலையாக எதாவது ஞான கருத்துகள் சொல்லுங்கள்'' என்றது. 

பரிதாபப்பட்ட ஞானி மீண்டும் கருத்துகள் சொன்னார். அதற்கு அந்த நாய் சொன்னதாம்: ""இப்பொழுது என்னால் முடியாது. ஏனென்றால் இப்பொழுதுதான் எட்டு குட்டிகள் போட்டிருக்கிறேன். அது வளர்ந்தவுடன் நான் முயற்சி செய்து பார்க்கிறேன்'' என்று. 

""இவ்வளவுதான் நீ'' என்று தடியால் அந்த நாயை மீண்டும் ஓர் அடி போட்டார் ஞானி. நாய் கத்திக்கொண்டே ஓடிச்சென்று குழாயடியில் வழிந்தோடும் நீரைக் குடித்துவிட்டு மரத்தடியில் படுத்துக்கொண்டது. 

ஒத்திபோடுகிற நோய் ஒருவனைப் பற்றிக்கொண்டால் அது அவனை பிறவிகள் கடந்தும் இம்சிக்கும் என்பதை வலியுறுத்தச் சொல்லப்படுகிற கதையிது. அதேநேரம், ஒத்திபோடுவது என்பது எல்லாச் சமயங்களிலும் தவறில்லை. 

ஒத்திபோட வேண்டியவற்றை ஒத்திபோடத்தான் வேண்டும். சிலவற்றை உடனுக்குடன் செய்தாக வேண்டும். வேறு சிலவற்றை அப்படிச் செய்தால், அது உரிய சூழ்நிலை  மற்றும் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டுக்கொண்டு காரியத்தை செய்பவனுக்கு "அவசரக் குடுக்கை' என்கிற பெயரை மட்டுமே வாங்கித் தரும். 

போட்டித்தேர்வுகள் களத்தில் பல முக்கியமான பதவிகளுக்கு, குறிப்பாக இந்தியக் குடிமைப் பணிகளுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் மாணவர்களில் ஒரு சிலர்,  குறிப்பிட்ட ஆண்டின் தேர்வுக்கு தாங்கள்  போதுமான அளவிற்குத் தயாராகயில்லை என்று அச்சப்படுவார்களேயானால், அவ்வாண்டு தேர்வினைத் தவிர்த்துவிட்டு... மீண்டும் சரியாகப் படித்து தங்களை தயார்படுத்திக்கொண்டு ஒரு வருடமோ... இரண்டு வருடமோ கழித்து மன உறுதியோடு தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றிருக்கின்றனர். 

கடினமான, சாதகமில்லாத சூழ்நிலைகளில் எந்தவொரு காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்கின்ற யுக்தியோடு ஒத்திப் போடுவது சரியே. இதனையே வள்ளுவர், "நிதானித்து செய்யவேண்டிய காரியங்களை நிதானமாக காலம் தாழ்த்தியே செய்யவேண்டும்' என்பதை, தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை என்கிறார். 

மேலும், "செய்யக்கூடாததைச் செய்தாலும் தவறுதான், செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டாலும் தவறுதான்' என்பதை, செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். என்கிறார்.

எடுத்த காரியத்தை, முயற்சியை முழுமைப்படுத்த முடியாமல்... தடைகளைக் கண்டு ஓடிவிடாமல், ஒத்திபோட்டு, காத்திருந்து காரியத்தில் வெற்றிபெறுவதற்கு ஒரு மனத்திட்பம் வேண்டும். அது, நீங்கள் முடிக்க நினைத்த காரியத்தை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. தோல்விகளை, தடைகளைக் கண்டு ஓடிப் போகாமல்... ஒத்தி போட்டுக் கூட வெற்றிக்கனியைப் பறிக்க உறுதி எடுத்துக் கொள்வோமே!  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT