இளைஞர்மணி

பணிவு என்னும் பலம்!

24th Nov 2020 06:00 AM | வி.குமாரமுருகன்

ADVERTISEMENT

சிலர் பணிவு என்பதை பயந்து செல்வது என்பது போல் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது தவறான புரிதல்.

ஆனால் இன்றைய கால கட்டத்திற்கு பணிவு என்பது மிக அவசியமான ஒன்றாகவே இருக்கிறது. பணிவாக இருப்பதன் மூலம் ஒருவரின் முழு நம்பிக்கையை நம்மால் பெற முடியும் என்பதுடன் பல்வேறு விஷயங்களையும் கற்றுக் கொள்ளவும் முடியும்.

தலைமைப் பண்பிற்கும் சுய முன்னேற்றத்திற்கும் அடிப்படைத் திறவுகோலாக பணிவு அமைந்திருக்கிறது என பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

"சமூகத்தில் அமைதி நிலவ வேண்டுமென்றால் அதற்காக பாடுபடுபவர்கள் நேர்மையாகவும், பணிவாகவும் இருக்க வேண்டியது அவசியம்' என நெல்சன் மண்டேலா கூறியது எக்காலத்திற்கும் பொருந்தும் விஷயமாகவே உள்ளது.

ADVERTISEMENT

பணிவு குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வருகிறார்கள். பணிவு என்பது ஓர் உணர்வு அல்லது ஒரு மனப்பான்மை. பொதுவாக பணிவு உள்ளவரைப் பார்க்கும்பொழுது அவர் பலவீனமானவர் அல்லது பயந்து செயல்படுபவர் அல்லது மற்றவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியவர் என்று தான் நமக்கு முதலில் தோன்றும். அதை சிலர் பலவீனம் என்று கூட நினைப்பார்கள். உண்மையில் பணிவு என்பது ஒரு பலம்.

பணிவு இல்லாத வரை இந்த சமூகம் திமிர் பிடித்தவர், கர்வம் பிடித்தவர் என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம். இத்தகையவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கும்.

பணிவுடன் செயலாற்றுபவர்கள் உயரத்தை விரைவில் எட்டிப்பிடிக்க முடிவதுடன் அவர்களுக்கான பெருமையையும் அங்கீகாரத்தையும் உலகம் தாமாகவே முன்வந்து அளிக்கும்.

உதாரணமாக, ஒரு விளையாட்டில் நம்முடன் மோதும் அணியினரிடம் (வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு) சிறப்பாக விளையாடினீர்கள் என்று கூறுவது நம் மேல் அவர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தும். நாம் ஒரு தவறு செய்யும் போது எந்தவித தயக்கமின்றி அதற்காக வருத்தம் தெரிவிப்பது; குழுவாக ஒரு வெற்றியைப் பெறும்போது அந்த வெற்றிக்குக் காரணம் தான் மட்டுமே என்று சொல்வதை விட்டுவிட்டு குழு முயற்சி என அடக்கமாகக் கூறுவது; நமக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களை குறைவாக மதிப்பிடாமல் இருப்பது; அவர்களின் மேம்பாட்டிற்கு உதவி செய்வது; நமக்கு மேல் நிலையில் உள்ளவர்கள் குறித்து பொறாமைப்படாமல் இருப்பது போன்றவை பணிவிற்கான இலக்கணமாகக் கருதப்படுகின்றன.

பணிவு என்பது சுய முன்னேற்றத்துக்கான மிகச்சிறந்த ஒரு சொத்து. ஒரு பணிவான வாழ்க்கையை வாழ்வதன் மூலம் உலகம் உங்களை அங்கீகரிக்கும். வேலை தேடுபவர்கள், பதவி உயர்வினை விரும்புபவர்களுக்கு இந்த பணிவு மிகப்பெரிய உதவியாக அமையும்.

இன்றைய இளைய தலைமுறை தங்களின் பணிவுடன் நடந்து கொள்வது மிக அவசியம். அதற்கான சில வழிமுறைகள்...

நம்பிக்கை

ஒரு மனிதனின் வாழ்விற்கு நம்பிக்கை என்பது மிக முக்கியம் . பணிவு ஒருவரின் நம்பிக்கையைப் பெருமளவு உயர்த்தி வெற்றியை தரும். அடக்கம் இல்லாத நிலை ஒருவருக்கு பலவீனத்தை தருவதுடன் பலத்தையும் குறைத்துவிடும். வேலைக்கு செல்கிறோமோ அல்லது விடுமுறையில் இருக்கிறோமோ அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தினமும் காலையில் எழுந்தவுடன் வழக்கமான பணிகளை மேற்கொண்டு மிக அழகாக உடைகளை உடுத்துவது கூட தன்னம்பிக்கையின் வெளிப்பாடுதான். நம்மைப் பற்றி நாமே நம்பிக்கை கொள்வதற்கும், நம்மை பார்க்கும் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் இது உதவியாக அமையும். ஒவ்வொரு நாளின் முடிவிலும் நாம் செய்த செயல்களைக் குறித்து சிந்திக்க வேண்டும். இது நம்பிக்கையை மேம்படுத்தும்.

சந்தேகங்களைக் கேளுங்கள்

ஒரு சிலர் தமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு மற்றவரிடம் விளக்கம் கேட்கத் தயங்குவார்கள். குறிப்பாக பணிவு இல்லாதவர்கள் பிறரிடம் எதையும் கேட்டுத் தெரிந்து கொள்வதைக் கேவலமாக நினைப்பார்கள். இதனால் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல், வாழ்க்கையின் நல்ல பல வாய்ப்புகளை தவறவிட்டு ஏமாந்து நிற்பார்கள்.
ஆனால் ,தினமும் புதிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்பவர்கள், புதியனவற்றைச் செய்பவர்களால் மட்டுமே சுய நம்பிக்கையை மேம்படுத்த முடியும். அதன் மூலம் புதிய இலக்குகளை, புதிய வெற்றிகளை அடைய முடியும்.புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதன் மூலம் தன்னம்பிக்கையை உருவாக்க முடியும்.

இலக்குகளைத் திட்டமிடுங்கள்

உங்களுடைய அன்றாடப் பணிகளை அன்று காலையிலேயே யோசித்து திட்டமிடுங்கள். அதன் மூலம் இலக்குகளை தெளிவாக அடைய முடியும். இது மற்றவர்களுக்கும் உங்களைப்பற்றிய புரிதலை அதிகரிக்கும். உங்களின் இலக்கை அடைவதற்கு நீங்கள் நம்பிக்கையுடன், பணிவுடன் செயல்படுவது போல் மற்றவர்களின் இலக்கை எட்டுவதற்கு உதவி செய்யுங்கள். ஒரு துண்டுச் சீட்டில் உங்கள் இலக்குகளை எழுதி வைத்துக்கொண்டு அவ்வப்போது அதை பார்ப்பதும், படிப்பதும் உங்கள் நம்பிக்கையை மேம்படுத்தி வெற்றியை ஈட்டித்தரும்.

நேர்மறை எண்ணம்

நேர்மறை எண்ணம் ஒருவரை மேம்படுத்தும். ஒரு மேற்கொள்ளும் பயிற்சியும்,முயற்சியும், நடத்தையுமே வெற்றிக்கான மதிப்பீடாக அமையும்.ஒருவரின் நேர்மறை நடத்தைதான் இலக்கை தீர்மானிக்கும்.நாம் செய்யும் செயல்களை ஆவணப்படுத்தி வைத்துக் கொண்டால் அதன் மூலம் எது அவசியம்? எது அவசியமற்றது? என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நமது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள முடியும். இவை அனைத்தையும் மற்றவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படுத்த பணிவு அவசியம் ஆகிறது.

பலம், பலவீனங்களை அறிதல்

ஒருவரின் வெற்றிக்கு பலம் மட்டுமே துணை நிற்காது. பலவீனங்களும் அதை தீர்மானித்து விடும். எனவே எல்லாம் எனக்குத் தெரியும் என்று நினைத்து முயற்சி செய்வதை விட்டுவிட்டு தெரியாத விஷயங்களையும் உணர்ந்து அதை தெரிந்து கொள்ள பணிவுடன் முயற்சிக்க வேண்டும்.

பணிவு என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒரு முக்கியமான அம்சமாகும். அதை முறையாக பயன்படுத்தி வாழ்வில் உயர்வடைய இன்றைய தலைமுறையினர் சபதமேற்போம்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT