இளைஞர்மணி

நிலவில் அணுமின்நிலையம்!

24th Nov 2020 06:00 AM | -எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

அணுசக்திக்கு ஆதரவான, எதிர்ப்பான நிலைப்பாடுகள் உலகமெங்கும் இருந்து வரும் நிலையில், நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. 2026-ஆம் ஆண்டுக்குள் அணுமின் நிலையத்தை அமைக்க முடிவு செய்து, இந்த சவாலில் கைகோக்க நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறது.

"தலா 10 கிலோவாட் திறன் கொண்ட 4 அணுமின் நிலையங்கள் பூமியில் வைத்து நிர்மாணிக்கப்பட்டு, செலுத்து வாகனம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மறுநிர்மாணம் செய்யப்படும்'  என அமெரிக்க எரிசக்தி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்காக நாசாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

""இந்தத் தொழில்நுட்பம் நிரூபிக்கப்பட்டவுடன் நிலவுக்கும், இறுதியில் செவ்வாய்க்கும் நீண்டகாலப் பயணங்களுக்காக பல அலகுகள் ஒன்றாகப் பயன்படுத்தப்படலாம்'' என்கிறார் நாசாவின் அணு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அந்தோணி கலோமினோ.

ADVERTISEMENT

""தலா 10 கிலோவாட் மின் சக்தியை வழங்கும் 4 அலகுகள் நிலவு அல்லது செவ்வாய் கிரகத்தில் ஒரு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான சக்தியை வழங்கும். "ஃபிஷன் சர்ஃபேஸ் பவர் சிஸ்டம்' என்ற இத்தொழில்நுட்பம் மூலம் கிரகத்தின் மேற்பரப்பில் அதிக அளவிலான மின் சக்தியை உற்பத்தி செய்யும் திறனானது வணிகமயமாக்கலுக்கான வாய்ப்பையும் வழங்கும்'' என அந்தோணி கலோமினோ மேலும் தெரிவிக்கிறார்.

அது என்ன ஃபிஷன் சர்ஃபேஸ் பவர் சிஸ்டம்?

வெப்பத்தை ஏற்படுத்துவதற்காக ஓர் உலைக்குள் யுரேனிய அணுக்களைப் பிரிப்பதன் மூலம் ஃபிஷன் சர்ஃபேஸ் சிஸ்டம் செயல்படுகிறது. பின்னர், அந்த வெப்பமானது மின்சாரமாக மாற்றப்படுகிறது. வீடுகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதற்காக மின்சாரம் தயாரிக்க நிலப்பரப்பு உலைகளில் பயன்படுத்தப்படும் அதே செயல்முறைதான் இது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் 10 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை இயக்குவதற்கு இந்த மின்சக்தி போதுமானதாக இருக்கும்.

2026-ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்தில் முதல் பெண் விண்வெளி வீராங்கனையை அனுப்ப நாசா திட்டமிட்டு வருகிறது. அப்பகுதியில் சூரிய சக்தியால் போதுமான மின் சக்தியை வழங்க இயலாது. சந்திர இரவுகள் பூமியின் 14 நாள்களுக்குச் சமம். அச்சூழ்நிலையில் தீவிரமான வெப்பநிலையைச் சமாளிக்க ஃபிஷன் சர்ஃபேஸ் பவர் சிஸ்டத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி அவசியமாக இருக்கும் என்பதால் இத்திட்டத்தில் நாசா தீவிரம்காட்டி வருகிறது.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT