இளைஞர்மணி

இணைய வழிக் கல்வி... சாதக, பாதகங்கள்!

சுரேந்தர் ரவி


கரோனா நோய்த்தொற்று நோய்த்தொற்று பரவல் காலத்தில் மாணவர்கள் கல்வி கற்பதற்குத் தொழில்நுட்ப வசதிகள் பெரும் துணைபுரிந்து  வருகின்றன. அவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பல்வேறு வகைகளில் பலனளித்து வருகின்றன. 

முக்கியமாக, கல்வி கற்பதற்காக மாணவர்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தே கல்வி கற்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்குச் செல்வதற்கான நேரம் சேமிக்கப்படுகிறது. அந்நேரம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் வேறு பலனுள்ள காரியங்களில் மாணவர்கள் ஈடுபட இணையவழிக் கல்வி வழி ஏற்படுத்தித் தந்துள்ளது.

இணையவழிக் கல்வியின் மூலமாக பாடத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது, இணையவழியில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலமாக பாடங்களை ஆசிரியர்கள் மாணவர்களிடம் புரிய வைக்க முடியும். நேரடி வகுப்புகளில் பெரும்பாலும் இது சாத்தியமில்லை. 

பாடம் தொடர்பாக ஏற்படும் ஐயங்களை அப்போதே மாணவர்கள் இணையத்தில் தேடி அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு ஆசிரியர்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலைமை தற்போது மாறியுள்ளது. ஆசிரியர்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொள்ள முடியாதபோது, இணையவழியிலேயே மாணவர்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

இணையவழிக் கல்வியின் மூலமாக கற்பதற்கான நேரம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்வதால், கூடுதல் பாடங்களைக் குறைந்த நேரத்தில் கற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இணையவழியில் வெறும் பள்ளி, கல்லூரிப் பாடங்களை மட்டும் கற்காமல், பல்வேறு திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்குக் கூடுதல் நேரம் கிடைத்துள்ளதால், கல்வி சாராத பிற விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த முடியும். வேறு எவரையும் சார்ந்திராமல், சரியான வழிகாட்டுதலின் அடிப்படையில் அவர்களாகவே தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் வெற்றி காண முடியும்.

இணையவழிக் கல்வியில் மாணவர்களுக்கு சாதகமான அம்சங்கள் பல இருந்தாலும், அதில் சில பாதகமான சூழல்களும் இருக்கத்தான் செய்கின்றன. மாணவர்கள் வீட்டில்தானே இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு பாட ஆசிரியரும் அதிக அளவிலான வேலைகளை மாணவர்களுக்குக் கொடுத்துவிட வாய்ப்புகள் உள்ளன. அதன் காரணமாக இணையவழி வகுப்புகள் மீது மாணவர்களுக்கு அதிருப்தி ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இணையவழியில் பாடங்களை எவ்வாறு கற்பது என்ற அடிப்படை தெரியாத மாணவர்கள் மனஅழுத்தத்துக்கு உள்ளாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அவர்களுக்கு சரியான நபர்களின் வழிகாட்டுதல்கள் மிகவும் அவசியமாகும். 

இணையவழிக் கல்வி கற்பதற்கு அடிப்படைத் தேவை,  அறிதிறன்பேசியும் இணையவசதியும். ஏழை மாணவர்களின் வீட்டில் அடிப்படை அம்சங்களைக் கொண்ட அறிதிறன்பேசி இருப்பதே குதிரைக்கொம்பாக உள்ளது. அவ்வாறு இருந்தாலும் மாதந்தோறும் இணையவசதியைப் பெறுவதற்குப் பணம் செலவிட வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இது ஏழை மாணவர்களுக்குப் பெரும் சுமையாகவே உள்ளது. 

கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக வழங்கப்பட்ட மிதிவண்டி, இலவச மதிய உணவு, இலவசப் பாடப்புத்தகங்கள் போன்றவற்றின் காரணமாகவே பெரும்பாலான ஏழை மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு வழிவகை ஏற்பட்டது. தற்போது இணையவழிக் கல்வியால் ஏழை மாணவர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது.

அதேபோல், இணையவழிக் கல்வியில் கற்பதற்கான பாடப்புத்தகங்கள் அனைவருக்கும் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. முக்கியமாக கல்லூரி மாணவர்கள் புத்தகங்களை இணையவழியில் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

பெரும்பாலான கிராமப்புறங்களில் இணையவசதியே இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை. அங்குள்ள மாணவர்களிடம் அறிதிறன்பேசியும் இணையவசதியும் இருந்தால் கூட, போதுமான அளவு சிக்னல் கிடைக்காததால், அவர்களால் பாடங்களைக் கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இணையவழிக் கல்வி ஒருபுறம் மாணவர்களுக்குப் பல்வேறு வசதிகளை வழங்கினாலும், பல கவனச்சிதறல்களையும் ஏற்படுத்துகிறது. மாணவர்கள் தற்போது இணையத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், அதில் காணப்படும் தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. 

நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதைப் போல இணையவழிக் கல்வியிலும் சாதக பாதகங்கள் உள்ளன. சாதகங்களை மேலும் வலுப்படுத்தவும், பாதகங்களைக் குறைக்கவும் மாணவர்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT