இளைஞர்மணி

எங்கேயும்... எப்போதும்!

24th Nov 2020 06:00 AM | - ஜீவா

ADVERTISEMENT

 

அவசர மருத்துவ உதவி டிரோன்!

கரோனா தொற்றை எதிர்த்து பல்வேறு வழிகளில் உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகளும் நிகழ்த்தப்படுகின்றன. பிரிட்டனைச் சேர்ந்த "ஏபியன்' என்ற தொலை தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படும் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனம், இப்போது பறக்கும் டிரோன் ஒன்றை வடிவமைத்திருக்கிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் அவசரச் சிகிச்சைக்காகத் தேவைப்படும் மருத்துவக் கருவிகள், ரத்த பரிசோதனை மாதிரிகள் உட்பட அனைத்தையும் உடனுக்குடன் எடுத்துச் செல்ல இந்த டிரோன் உதவுகிறது. இதற்கு பிரிட்டனின் தேசிய சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரிட்டனில் உள்ள இரண்டு மருத்துவமனைகள், ஒரு சோதனைச் சாலை ஆகியவற்றுக்கிடையே இந்த பறக்கும் டிரோன் முன்னோட்டமாக இயக்கப்பட்டிருக்கிறது. இதற்காக யுகே ஸ்பேஸ் ஏஜென்சி 13 லட்சம் யுகே டாலரை (ரூ.12,84,29,507) நிதி உதவி அளித்திருக்கிறது.

ADVERTISEMENT

 

முகக்கவசம்!

உலகம் முழுவதும் பலவிதமான முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. கரோனா தொற்று உள்ளவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் காற்றில் கலக்கும் சளித்துளிகளில் கரோனா தீநுண்மிகள் இருக்கும். அவற்றைப் பிறர் சுவாசித்தால், கரோனா தொற்று ஏற்படும். இதைத் தடுப்பதற்காகவே முகக்கவசங்கள் அணியப்படுகின்றன.

சாதாரண முகக்கவசத்தை அணிந்தால், கரோனா தீநுண்மியை அது தடுக்கும். அதேசமயம், முகக்கவசத்தில் தீ நுண்மி ஒட்டிக் கொண்டிருக்கும். முகக்கவசத்தைத் தொடும் விரல்களில் அது தொற்றிக் கொள்ளும். அந்த விரல்கள் படும் கதவின் கைப்பிடி, கணினி கீ போர்ட், மவுஸ் என எல்லா இடங்களிலும் ஒட்டிக் கொள்ளும். அதைப் பிறர் தொட்டால் அவரையும் தொற்றிக் கொள்ளும்.

இந்தப் பிரச்னையைத் தீர்க்கும்விதமாக மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்தக் கூடிய, கரோனா தீநுண்மிகளை அழிக்கக் கூடிய முகக்கவசங்களை "நாட்டிங்காம் டென்ட் பல்கலைக்கழகம்' என்ற பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பார்ம்2ஃபார்ம் என்ற நிறுவனம் இதை வணிகரீதியில் உருவாக்கத் தொடங்கியிருக்கிறது.

5 அடுக்குகள் கொண்ட இந்த முகக்கவசத்தின் உள் அடுக்குகளில் தாமிர நானோ துகள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் வெளிப்புறத்தில் கரோனா தீநுண்மி உள்ளே நுழையாதவாறு தடுக்கும் திரவம் பூசப்பட்டிருக்கிறது.

இந்த 5 அடுக்கு முகக்கவசம் 99.98 சதவீதம் கிருமிகளைத் தடுத்துவிடும் என்றும் 90 சதவீதம் கரோனா தீநுண்மிகளை அழித்துவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

 

5 ஆயிரம் ஆண்டுகள்!

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்ணின் எலும்புக் கூடு ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், பிரான்டென்போர்க்கைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள். பிரான்டென்போர்க் ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினுக்கு அருகில் உள்ளது.

வடகிழக்கு ஜெர்மனியில் உக்கெர்மார்க் என்ற நகரத்துக்கு அருகில் உள்ளது பைட்டிகோவ் என்றகிராமம். இந்த கிராமத்தில் தான் பெண்ணின் எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கற்காலத்தின்போது வாழ்ந்த 30 இலிருந்து 45 வயது உள்ள ஒருபெண்ணின் எலும்புக் கூடாக அது இருக்கக் கூடும் என்கிறார்கள். உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருக்கும் அப்பெண்ணின் பற்கள் மிக அதிகமாகத் தேய்ந்து போயிருக்கின்றன. நார்ச்சத்து நிரம்பிய தானிய உணவுகளை - அதுவும் மெல்வதற்குக் கடினமான தானியங்களை - மனிதர்கள் உண்ணத் தொடங்கிய காலத்தில் அந்தப் பெண் வாழ்ந்திருக்க வேண்டும் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பெண்ணின் பற்கள் தேய்ந்து போயிருப்பதற்கு அதுதான் காரணம் என்று கூறுகிறார்கள். மேலும் அந்தப் பெண் அணிந்திருந்த ஆடைகளின் சிறு துண்டுகளும் கிடைத்திருக்கின்றன.

1991 ஆம் ஆண்டு ஆஸ்திரியா - இத்தாலி ஆகிய நாடுகளுக்கு நடுவே உள்ள ஆல்ப்ஸ் மலையில், ஐஸ் கட்டிகளுக்குள் பொதிந்திருந்த ஓர் ஆணின் உடலை மலையேற்ற வீரர்கள் இருவர் பார்த்தனர். தோல், உள்ளுறுப்புகள் உட்பட எந்தப் பகுதியும் சேதமடையாமல் சில மணி நேரத்துக்கு முன்பு இறந்ததைப் போல அந்த ஆணின் உடல் இருந்திருக்கிறது. அந்த ஐஸ் மனிதனும், இந்தப்பெண்ணும் சமகாலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

பல்−, கரப்பான் பூச்சி ரோபோ!

ரோபோக்கள் பலவிதங்களில் வடிவமைக்கப்படுகின்றன. மனிதர்கள் செல்ல முடியாத இடங்களுக்குச் செல்லக் கூடிய, மனிதர்களால் செய்ய முடியாத செயல்களைச் செய்யக் கூடியதாக ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன. இது ஒருபுறம் மனிதர்களுக்குப் பயன்படக் கூடியதாக இருக்கிறது. இன்னொருபுறம் மனித உழைப்புச் சக்தியின் தேவையைக் குறைப்பதாகவும் உள்ளது.

சமீபத்தில் பல்லியைப் போல ஊர்ந்து செல்வதாகவும், கரப்பான் பூச்சியைப் போல நடந்து செல்வதாகவும் ஒரு ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி ரோபோவை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பென் -குரியன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

தரையில் செல்லும்போது, சக்கரங்கள் உள்ள கால்களின் மூலம் இந்த ரோபோ செல்லும். கரடு முரடான பாதைகளில் செல்லும்போது இதன் கால்கள் கரப்பான் பூச்சியின் கால்களைப் போல தேவைக்கேற்ப வளைந்து நெளிந்து நடந்து செல்லும். நீரில் செல்லும்போது இது துடுப்புகள் போன்ற கைகளைப் பயன்படுத்தி நீந்திச் செல்லும். நீரிலிருந்து தரைக்கு வந்தவுடன் தரையின் தன்மைக்கேற்ப நடந்து செல்லும். நீருக்கு அடியில் மூழ்கும்விதமாகவும் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி ரோபோ, நடைமுறையில் பயன்படுத்தும் அளவுக்கு பெரிய அளவு ரோபோ உருவாக்கப்பட உள்ளது. அப்படி உருவாக்கப்பட்டால், இந்த ரோபோ விவசாயப் பணிகளுக்குப் பயன்படும்; நிலச்சரிவு, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கு பயன்படும்; அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கும் பயன்படும்என்றும் ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்துள்ளனர்.

அதற்காகத்தான் பல்வேறு முறைகளில் இயங்கும்விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT