இளைஞர்மணி

தானாக அழியும் வாட்ஸ்ஆப் தகவல்கள்!

17th Nov 2020 06:00 AM | - அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

 

வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும் தகவல்களில் பல பயனுள்ளதாக இருந்தாலும், தேவையற்ற புகைப்படங்கள், விடியோக்கள் அறிதிறன் பேசியை ஆக்கிரமித்து கொள்கின்றன. அவற்றில் தேவையானது, தேவையில்லாதது என தேடிக் கண்டுபிடித்து அழிப்பதற்கே முழு நாளாகும். இந்தப் பிரச்னைக்கு வாட்ஸ்ஆப் தீர்வு கண்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் விடியோ, போட்டோ என தகவல்கள் எதுவாக இருந்தாலும் 7 நாள்களில் தானாக அழித்துவிடும் சேவையை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது. 
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சேவையை வாட்ஸ்ஆப் நிறுவனம் சோதனை செய்து வந்தது. தற்போது அதிகாரபூர்வமாக அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பகிரப்படும் தகவல்களில் தனிநபர் ரகசியத்தைக் காக்கவும், தகவல்கள் பகிரப்படுவதை எளிமையாக்கவும் இந்த சேவையைத் தொடங்கியுள்ளதாக வாட்ஸ் ஆப் விளக்கம் அளித்துள்ளது.
இந்த புதிய சேவையைப் பெற முதலில் வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒருவரது "சாட்'டை கிளிக் செய்து அதற்குள்ளே சென்று, அவரது பெயரைத் தேர்வு செய்து கீழே "டிஸ்அப்பியரிங் மெசேஜஸ்' என்பதை கிளிக் செய்து "ஆன்' செய்ய வேண்டும். தானாக அழியும் சேவை தேர்வு செய்யப்பட்டுள்ளதை அந்த சாட்டில் தகவல் காண்பிக்கும்.
அதன் பின்னர் அந்தப் பெயரில் உள்ளவருக்கு அனுப்பப்படும் தகவல்கள் 7 நாள்களில் தானாக அழிந்து விடும். இதேபோல், இந்த சேவையை ரத்து செய்ய மீண்டும் அந்த "சாட்'டில் சென்று "ஆப்' செய்து விடலாம். இதேபோல் வாட்ஸ்ஆப் குழுவின் நிர்வாகி (அட்மின்) இந்த சேவையைத் தேர்வு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் அனுப்பப்படும் தகவல்களை பெறும் நபர் 7 நாள்களில் படிக்கவில்லை என்றால் அந்தத் தகவல் தானாகவே அழிந்துவிடும். ஆனால் 
இந்தத் தகவலை வேறு நபருக்கு அனுப்பிவிட்டால், அனுப்பிய தகவல் அழியாது.
ஆகையால், தானாக அழிந்து விடும் தகவல்களைப் புகைப்படமாக எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். 
தானாகப் பதிவிறக்கம் (ஆட்டோ டவுன்லோடு) ஆன் செய்திருந்தால் அந்தத் தகவல்கள் அறிதிறன் பேசியில் தானாக சேமிக்கப்பட்டு விடும்.  7 நாள்களுக்குப் பிறகு அழிந்தாலும் தகவல்கள் பாதிக்கப்படமாட்டாது. இந்த சேவை தொடங்குவதற்கு முன்பு அனுப்பப்பட்ட தகவல்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
தகவல் பரிமாற்றம் செயலிகளான டெலிகிராம், சிக்னல், வயர், ஸ்னாப்சாட் ஆகியவற்றில் தானாக அழியும் சேவை முன்பே தொடங்கப்பட்டு இருந்தாலும், வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களுக்கு இந்த புதிய சேவை பெரும் உதவியாக இருக்கும். 

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT