இளைஞர்மணி

வெற்றி நிச்சயம்... வித்தியாசமாகச் சிந்தியுங்கள்!

17th Nov 2020 06:00 AM | - சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

 

""சொன்னால் நம்ப மாட்டீர்கள் சார், துணி துவைத்த அழுக்குத் தண்ணீரைச் செடிக்கு ஊற்றினால் அந்தச் செடி கெட்டுப் போய்விடும் என்று தெரியும். ஆனால் நாங்கள் தயாரிக்கும் சோப் ஆயிலைச் செடிக்கு ஊற்றினால் செடி நன்றாக வளரும். எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத இயற்கை சோப் ஆயிலைத் தயாரிக்கிறோம்'' என்கிறார் கணினி பொறியாளர் ஜெகதீஷ் பால்ராஜ்.

செங்கல்பட்டில் இயற்கை சோப் ஆயில், ஆட்டுப்பால் சோப் போன்ற பல்வேறு இயற்கை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வரும் ஜெகதீஷ் பால்ராஜைச் சந்தித்துப் பேசினோம்:

""யூ டியூப் சேனலில் பார்த்து சோப் தயாரிக்கத் தெரிந்து கொண்டேன். வித்தியாசமான சோப் தயாரிக்கலாமே என முடிவு செய்து, தயாரித்ததுதான் ஆட்டுப்பால் சோப். ஆடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூலிகையை தேடிப்பிடித்து சாப்பிடும் குணமுடையது என்பதும் தெரிய வந்ததால் ஆட்டுப்பாலில் சோப் தயாரிப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். தோலுக்கு ஈரப்பதம் தரும் தேங்காய் எண்ணெய், உடல் சூட்டைத் தணிக்கும் ஆமணக்கு எண்ணெய், கிளிசரின், லை என்ற திரவம் மற்றும் ஆட்டுப்பால் சேர்த்து சோப்பு தயாரித்தேன்.

அதை எனது வீட்டைச் சுற்றியிருப்பவர்களிடம் கொடுத்தேன். சிறப்பான வரவேற்பு இருந்தது. அதற்கப்புறம் ஆட்டுப்பால் சோப் தயாரித்து விற்பனை செய்தேன். இப்போது ஆட்டுப்பால் சோப், ஆவாரம்பூ சோப், வேப்பிலை சோப், சிவப்பு சந்தன சோப் என இயற்கை சோப் வகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.

ADVERTISEMENT

இதற்கடுத்து, மனிதனையும், மண்ணையும் பாதிக்காத இயற்கை சோப் ஆயிலைத் தயாரித்தேன். இது ஓர் இயற்கை திரவக் கலவை. சிறிதளவு இதை ஒரு வாளி தண்ணீரில் கலந்து துணிகளை அரை மணி நேரம் ஊற வைத்தால் போதும். அழுக்கு தானாகவே போய் விடும். வழக்கமாகத் துவைக்கும் போது செய்யும் எதையும் செய்யத் தேவையில்லை. இதன் நறுமணம் துணியில் பரவும். கையில் எரிச்சல் இருக்காது. துவைத்த நீரை செடிகளுக்கும் ஊற்றலாம். வாஷிங் மெஷினிலும் இந்த இயற்கை சோப் ஆயிலைப் பயன்படுத்தலாம். இதைத் தவிர, பாத்திரங்களைத் துலக்க உதவும் ஆயில், தரையைத் தூய்மைப்படுத்தும் ஆயில், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்க உதவும் இயற்கை பினாயில், கழிப்பறைகளைத் தூய்மையாக்கும் திரவங்கள் என முற்றிலும் வித்தியாசமான தயாரிப்புகளையே நான் செய்து வருகிறேன்.

இந்தத் தொழிலைத் தொடங்க முதலில் காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையத்தை அணுகினேன். அவர்கள் உதவியினால் வங்கிக் கடன் கிடைத்தது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் ஸ்டேட் வங்கியிலிருந்து ரூ.5லட்சம் கடன் வாங்கினேன். கடனை முறையாக திருப்பிச் செலுத்தியதால் ரூ.1.75லட்சம் மானியமாகக் கிடைத்தது. எனது விற்பனை,செயல்பாடுகள், அணுகுமுறை,நேர்மை ஆகியனவற்றால், இந்தியன் வங்கியில் குறைந்த வட்டிக்கு ரூ.10 லட்சம் கடன் கிடைத்தது.

மக்களின் ஆர்வம் முழுவதும் இயற்கை சார்ந்த பொருள்களின் பக்கம் திரும்பி இருப்பதால் எனது தயாரிப்புகளுக்கு நிறைய வரவேற்பு உள்ளது. சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு நான் சொல்லுவது இதுதான்: வித்தியாசமாகச் சிந்தியுங்கள்; வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துங்கள்; நேர்மையாக இருங்கள்; கடினமாக உழையுங்கள். வெற்றி நிச்சயம்'' என்றார்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT