இளைஞர்மணி

மழை மனதும்... மலை உடலும்!

17th Nov 2020 06:00 AM | - கே. பி. மாரிக்குமார்

ADVERTISEMENT


உடல் நலம் என்பது ஒருவரது முழு நலனையும், அதனோடு அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிற பொது நலனையும் உள்ளடக்கியது.

- சுவாமி விவேகானந்தர்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தைக் குளிர்விக்க வந்திருக்கிறது. இதுபோன்ற மழைக் காலங்களில் நகரங்களின் வீதிகளும், சாலைகளும் வெள்ளக்காடாகிப் போவதற்கு மழையைப் பழிப்பதில் நியாயமில்லை. மழை,  இந்த பூமிக்கும், மனித இனத்திற்கும் ஒரு மாபெரும் கொடை. 

மனிதர்களுள் பிற உயிர்களுக்கு உதவிகள் செய்பவரை, ஈரமுள்ளவரை, அள்ளிக்கொடுக்கின்ற கொடை உள்ளம் உள்ளவரை மாரியென்று மழையோடு ஒப்பிடுகிற வழக்கம் நம் கலாசாரத்தில், இலக்கியத்தில் தொன்றுதொட்டு வந்திருக்கிறது. அதேபோல "மலை போல உடல்' என்பது பெருத்த உடலைக் குறிப்பதல்ல. அது திடமான, ஆரோக்கியமான உடலைக் குறிப்பது. 

ADVERTISEMENT

நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்தக்காலம் எல்லாருக்கும்... குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு மிகவும் சவாலான காலகட்டம். ஆசிரியர்கள், மாணவர்கள், சக மாணவர்கள் என்று நேரடி வகுப்பறை தொடர்பும், சூழலுமின்றி கல்வி கற்பிக்கப்படுகிறது. 

ஏற்கெனவே மனித உறவுகள் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல் ஒருவருக்கொருவர் இடையிலான அவநம்பிக்கையின் அடிப்படையில் உருவாகிவிட்ட இந்த யுகத்தில்தான்,  நாம் மழை போல உதவுகிற ஈரமான மனதையும், உடலில்... உள்ளத்தில் மலை போல உறுதியும் உள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. 

 ஈரமான மனதும், வலிமையான உடலுமாக இன்று பொதுக் களத்தில், சமூக சேவையில் அர்ப்பணிப்போடு தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள  தங்களாச்சேரி கிராமத்தை சேர்ந்த எஸ். காளிமுத்து,    ஒரு  முதுகலைப் பட்டதாரி.  இயற்கை விவசாயத்தில் நிபுணர் - பயிற்சியாளர். "அன்னவயல்' என்னும் இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கான அமைப்பை உருவாக்கி நடத்தி வருபவர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், மற்றும் மாணவர்களிடையே இயற்கை வேளாண்மையின் நன்மை மற்றும் பெருமைகள் குறித்து உரையாற்றி அவர்களுக்கு பயிற்சியும் கொடுத்துக்கொண்டிருக்கிறார். கடின உழைப்பாளியாக, திடகாத்திரமான உடலுக்கும் சொந்தக்காரரான காளிமுத்து, அவருக்கான வாழ்வாதாரத்தை விவசாயத்தின் மூலமாகவே ஈட்டிக் கொள்கிறார். 

மதுரையில் வசிக்கும் 34 வயதான மயூர் ஹசிஜாவின் தாய்மொழி ஹிந்தி. மழலைத் தமிழ் பேசுவதோடு ஆங்கிலமும் சரளமாக பேசும் இவருக்கு சிந்தி மொழியும் தெரியும். ஒரு பல்லுயிர் நேசர். குறிப்பாக,  கால்நடைகள் நலனில் அவரது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். 

உயர்நிலைக் கல்வியை முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்பை முதலாம் ஆண்டு பாதியிலியே விட்டுவிட்டு விலங்குகள் நல ஆர்வலரான இந்த மனித நேய இளைஞர், தனது  சேவைப் பணி இல்லாத நேரங்களில் ஓலா வாடகைக் கார் ஓட்டுநராகவும், ராப்பிடோ வாடகை இருசக்கர வாகன ஓட்டுநராகவும் பணியாற்றி ஓரளவு வருமானம் ஈட்டிக்கொள்கிறார்.  இவரை மதுரை பல்நோக்கு கால்நடை மருத்துமனையின் வேலைநேரங்களில் தினந்தோறும் நீங்கள் பார்க்கலாம்.

சுவாமி விவேகானந்தர் வீரமான இளைஞர்களுக்கு அடையாளமாக, பாடங்களாக பல கருத்துகளைச் சொல்லிச் சென்றிருக்கிறார். அவற்றுள், "பலமே வாழ்வு, பலவீனமே மரணம்'  என்பது முதன்மையானது. மேலும், ""இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். 

இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்'' என்றும் சொல்லும் அவர், ""அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்''  என்று தீர்க்கமாக எடுத்துரைக்கிறார்.

இந்த இரு இளைஞர்களின் வாழ்க்கை என்பது விவேகானந்தரின் பல அரிய கூற்றுகளுக்கு பொருந்தக்கூடியதாக உள்ளது. இவர்களைப் போன்ற இளைஞர்களை மனதில் வைத்துத்தான் அன்று விவேகானந்தர்  புதிய பாரதம் படைக்க தனக்கு நூறு இளைஞர்கள் வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும்.

தாகத்திற்கு உதவாத நீர், பசிக்கு உதவாத உணவு, ஆபத்தில் உதவாத நண்பன், அவசரத்திற்கு உதவாத உறவு எல்லாமே இருந்தும் வீண் என்பார்கள். நாம் இவையெல்லாமாக,  பயனுள்ளவர்களாகவே இருப்போம். 

யாரையும் நாம் ஏன் வெறுக்கவேண்டும்? எதைப் பற்றியும் கவலைப் படுவதால் என்ன ஆகிவிடப் போகிறது?   எப்பொழுதும் நம் முகத்தில் புன்னகை தவழ, நிதனாம் தவறாது, நம்மால் அனுமானிக்கக் கூட முடியாத இயற்கையின் பேராற்றலைப் போற்றி மழையாகவும், மலையாகவும் வாழ்ந்து... இவ்வையகத்தையும் வாழ்விப்போம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT