இளைஞர்மணி

புதிய வேலை... புதிய மனநிலை!

17th Nov 2020 06:00 AM | - ந.முத்துமணி

ADVERTISEMENT


உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், பொருளாதார மயமாக்கல்... வாழ்க்கையைப் புதிதாகப் பார்க்க வைத்துவிட்டது. புதிய தொழில்கள், புதிய முறைகள், புதிய வேலைகள் என்று எல்லாமே புதிதாகிவிட்டன. அன்றைக்கு புதிதாக தோன்றிய பல வேலைகள், தொழில்கள், இன்றைக்கு பழையதாக காட்சி தருகின்றன. 20-30 ஆண்டுகளாக செய்த தொழில், பணி, வேலையில் ஆகியவற்றில் மனமொன்றிப் பணியாற்ற முடியாத அளவுக்குப் பலருக்கு மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் செய்யத் தொடங்கிய வேலையில் இருந்து பணி ஓய்வு பெறுவ தென்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறி விட்டது.

கணினிமயமாக்கல் அல்லதுதொழில்நுட்பமயமாக்கல் காரணமாக ஆட்களை குறைக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

கை நிறைய ஆதாயம் தரும் புதிய தொழில் அல்லது வேலையை நோக்கி விரட்டி வருகிறது, இன்றையப் பொருளாதாரம். தனக்கு ஈடுபாடுள்ள, ஆர்வத்திற்கு தீனிப்போடக் கூடிய வேலையைத் தேடி பலரும் நகரத் தொடங்கிஉள்ளனர்.

புதிய வேலை அல்லது வாழ்க்கைத் தொழிலுக்கு அதிரடியாகத் தாவும்போது, ஒருசில அம்சங்களைக் கவனத்தில் கொள்வது, அங்கு இடறிவிழாமல் தடுப்பதற்கு உதவியாக இருக்கும். அவற்றைக் காண்போம்:

ADVERTISEMENT

உள்ளுணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்

வேலையில் ஏற்படும் மனச்சோர்வு, மந்தநிலை, பிடிப்பின்மை, ஆர்வமின்மை, பணிச்சூழல், எதிர்பார்த்த ஆதாயமின்மை, நெருக்கடிகள், ஈடுகொடுக்க முடியாமை போன்ற பல்வேறு காரணங்களுக்காக புதிய வேலை அல்லது வாழ்க்கைத் தொழிலை மனம் நாடும். அப்படிப்பட்ட உணர்வுகள், அடுத்த வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது இயல்பான ஆர்வத்திற்கு வழிவகுக்கும்.

மனத்திண்மையை மேம்படுத்துங்கள்

ஒருவரின் மனத்திண்மைதான், அவரது சிந்தனைப் போக்கையும், உண்மையான சூழலில் அவரது செயலின்போக்கையும் முடிவு செய்யும். மனவெழுச்சி, ஊக்கம், கூர்மையான மதிநுட்பம் ஆகியவற்றுடன் கூடிய மனத்திண்மைதான் ஒருவரின் செயலில் தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய வாழ்க்கைத்தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக, மனத்திண்மையை ஆராய்ந்து, அதை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒருவரின் செயல்திறன் ஆக்கப்பூர்வமானதாக அமையும்.

தேவையான திறனை வளர்த்துக்கொள்ளங்கள்

புதிய வேலை அல்லது வாழ்க்கைத் தொழிலில் ஈடுபடும்போது, புதிய அறிவும், நுட்பமான தகவல்களும், மாற்றுத் திறனும் தேவைப்படும். அந்த தொழில் அல்லதுவேலை குறித்து ஏற்கெனவே பயிற்சி பெற்றிருந்தாலும், குறுகியகாலப் பயிற்சியை எடுத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் புதிய வேலை அல்லது தொழிலில் நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் பங்காற்ற முடியும். விரும்பும் புதிய தொழில் அல்லது வேலையில் மனமொன்றிப் பணியாற்றுவதற்கு கூடுதல் அல்லது தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியமாகும்.

புதியதுறை சார்ந்தோரின் வழிகாட்டுதலைப் பெறுங்கள்

புதிய தொழில் அல்லது வேலையில் ஈடுபடுவதற்கு முன்பாக, அத்துறையில் ஏற்கெனவே பணியாற்றி வருவோரின் வழிகாட்டுதலைப் பெறுவது பெரிய அளவில் உதவியாக இருக்கும். ஈடுபடப் போகும் புதிய தொழில் அல்லது வேலையின் தன்மை, போக்கு, சிக்கல்கள், இடைஞ்சல்கள், சாதகமான அம்சங்கள் குறித்து கேட்டறிவது, அத்தொழில் குறித்த அனுபவங்களை முன்கூட்டியே அளித்துவிடும். இதுபோல பலரின் கருத்துகளைச் சேகரிப்பது, புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதற்கு வழிவகுக்கும். ஒத்த தொழில் அல்லது வேலை செய்வோரின் குழுக்களில் அங்கம்வகிப்பது நமது திறன்களைப் புதிய கோணத்தில் அடையாளப்படுத்திக் கொள்ள உதவும். இலக்குகளை அடைவதற்கு தேவையான ஊக்க மருந்து ஒத்திருப்போரின் நட்புக்குழுக்களில் கிடைக்கும். புதிய தொழில் அல்லது வேலையில் நிலைத்திருப்பதற்கும், தணியாத ஆர்வத்தைப் பெறுவதற்கும் இக்குழுவினர் உந்துசக்தியாக விளங்குவார்கள்.

பயிற்சியாளரின் உதவியை நாடுங்கள்

ஒரு தொழில் அல்லது வேலையில் இருந்து மற்றொரு தொழில் அல்லது வேலையில் ஈடுபடும்போது, இயல்பாகத் தேவைப்படும் சில பயிற்சிகளைப் பெறுவது அவசியமாகும். தொழில்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும், புதுமையான படைப்பாற்றல் மற்றும் சிந்தனைப் போக்கை தட்டி எழுப்புவதற்கும் பயிற்சியாளரின் உதவி தேவைப்படுகிறது. பயிற்சியாளரின் கண்காணிப்பில் புதிய திறனை கற்கும்போது, நம்மிடம் இயல்பாகக் காணப்படும் திறமை, வலிமை, உற்சாகத்தை அடையாளப்படுத்துவது எளிதாகும். புதிய இலக்குகளை அடைவதில் காணப்படும் தடங்கல்களைப் போக்குவதற்கான யோசனைகள், பயிற்சியாளருடன் விவாதிக்கும்போது மனதில் உதிக்கலாம்.

உளவியல் ஆற்றலை மேம்படுத்துங்கள்

உளவியல் ஆற்றலை மேம்படுத்திக்கொள்வது ஒருவரின் செயல்திறன், நடத்தை, சிந்தனைப்போக்கை சீராக வைத்திருக்க உதவியாக இருக்கும். வாழ்க்கையின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்கும்போது ஆக்கமும் ஊக்கமும் கிடைத்துவிட்டால், எவ்வித கவலையும் இல்லாமல் செவ்வாய் கிரகத்திற்கும் பறந்து செல்லலாம்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT