இளைஞர்மணி

எங்கேயும்... எப்போதும்!

17th Nov 2020 06:00 AM

ADVERTISEMENT

 

ஏற்றுமதி செய்யப்படும் 20 வயது கார்கள்!

வளர்ந்த நாடுகளின் பழைய கார்கள் - 20 வயதான கார்கள் கூட - வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2015-ஆம் ஆண்டிலிருந்து 2018 -ஆம் ஆண்டு வரை சுமார் 140 லட்சம் பழைய, தரமில்லாத கார்கள், ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், அமெரிக்காவிலிருந்து ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று ஐநா சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இவ்வாறு அனுப்பப்படும் கார்கள் ஒவ்வொன்றும் 80 சதவீதம் பாதுகாப்பாற்ற தன்மை உள்ளவையாக இருக்கின்றன. அவற்றிலிருந்து வெளிவரும் புகை, "ஈரோ 4' என்று சொல்லப்படும் சுற்றுச்சூழல் தர அளவீடுகளுக்குப் பொருத்தமானதாக இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தக் கார்கள் அதிக அளவு காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளன; ஏற்றுமதி செய்யப்படும் கார்களின் பல பகுதிகள் சேதமடைந்திருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2017- இல் உகாண்டாவுக்கு அனுப்பப்பட்ட பல கார்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை. உகாண்டாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாவே உள்பட 30 நாடுகளுக்கும் அனுப்பப்பட்ட கார்களின் கதி இதுதான் என்கிறது ஐநா சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் அறிக்கை.

தற்போது வட ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாடு விழித்துக் கொண்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்ட கார்களை மட்டுமே இறக்குமதி செய்கிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யா 8 ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்ட கார்களை இறக்குமதி செய்கிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில் 15 நாடுகளின் "பொருளாதாரக் கூட்டமைப்பு' தூய்மையான எரிபொருள் மற்றும் வாகனங்களின் தரம் குறித்து வரையறை செய்து வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

 

மென்பொருள் நிறுவனமான 'ஆட்டோடெஸ்க்' நிறுவனமும், கார்

தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனமும் இணைந்து "நடக்கும் கார்' ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். ரோபோக்களில் உள்ள கால்களைப் போன்ற கால்கள் இந்தக் காரில் உள்ளன. கால்களுக்குக் கீழே சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வழக்கமான கார்கள் செல்ல முடியாத பாதைகளில் இந்த நடக்கும் கார் செல்ல முடியும். மேடு பள்ளங்களில், செங்குத்தான பாறைகளில் எல்லாம் இந்த "நடக்கும் கார்' செல்லும். பாதைகளின் தன்மைக்கேற்ப கால்கள் வளையும்; குறுகும். சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் நிகழும் போதும், மலைச்சரிவு ஏற்படும்போதும் அந்தப் பகுதிக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு செல்ல இந்த "நடக்கும் கார்' உதவும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

 

ஸ்மார்ட் டோர் பெல்!

நமது வீட்டில் காலிங் பெல்லைப் பொருத்தியிருக்கிறோம். யாராவது வெளியாட்கள் வந்து நம்மை அழைக்க இந்த காலிங் பெல் பயன்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாகாணத்தில் ஜாக்சன் நகரில் ஒவ்வொரு வீட்டுக் கதவிலும் ஸ்மார்ட் டோர் பெல்லைப் பொருத்தியிருக்கிறார்கள். இந்த ஸ்மார்ட் டோர் பெல்லில் விடியோ கேமரா உள்ளது. வீட்டுக்கு வருபவர்கள், வீட்டை விட்டு வெளியே செல்பவர்களை மட்டுமல்ல, தெருவில் நடமாடுபவர்களை எல்லாம் இந்த விடியோ கேமரா படம் எடுத்துவிடும். வீடு அருகில், தெருவில் நடக்கும் எல்லாச் சம்பவங்களும் இதில் பதிவாகிவிடும். குப்பை லாரி வருவது, எதிர்வீட்டுக்காரர் பிறருடன் வீட்டு முன் நின்று அரட்டை அடிப்பது, டெலிவரி செய்பவர்கள் பொருள்களைத் தருவது என எல்லா நிகழ்வுகளும் இந்த ஸ்மார்ட் டோர் பெல்லில் பதிவாகிவிடும்.

நகரின் சாலைகளில் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள விடியோ கேமராக்கள் வேறு வடிவம் எடுத்து ஸ்மார்ட் டோர் பெல்லாக வீடு வரை வந்துவிட்டன.

அப்படி எடுத்த விடியோக்களை பத்துப் பதினைந்து மானிட்டர்களில் ஒரே நேரத்தில் அந்த நகரின் காவல்துறை, உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் பார்க்க முடியும். இது தனிமனிதச் சுதந்திரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்நாட்டில் எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது. மக்களின் ஒவ்வொரு நடமாட்டமும் கண்காணிக்கப்படுவதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த எதிர்ப்பை மிஸிஸிப்பி மாகாண அரசு இதைக் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் அதே சமயம் ஒருவரின் முக அடையாளத்தின் மூலம் அவர் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள உதவும் முக அடையாள மென்பொருளைக் (ஃபேசியல் ரிகக்கனிஷன் சாஃப்ட்வேர்) காவல்துறையினர் பயன்படுத்துவதற்கு மிஸிஸிப்பி அரசு தடைவிதித்திருக்கிறது. வீடு வரை உளவு பார்த்தால் போதும் என்று நினைக்கிறார்கள் போலும்!


மன அழுத்தமும் காது குடைதலும்!

பிரச்னைகளை எதிர்கொள்வதே வாழ்க்கை என்று ஆகிவிட்டது. பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது மன அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மன அழுத்தம் அதிகரிக்கும்போது நம் உடலில் கார்டிசால் என்ற சுரப்பு நீர் சுரக்கிறது. கார்டிசால் எந்த அளவுக்குச் சுரக்கிறது என்பதைக் கணக்கிட்டால் மன அழுத்தம் ஏற்படுவதைக் கணக்கிட முடியும்.

லண்டனில் உள்ள "யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன்' -ஐச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். மனிதனின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், உடலில் எப்படிப்பட்ட மாறுதல்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சிதான் அது.

கார்டிசால் சுரப்புநீர் உடலின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, உடலின் நோய் எதிர்ப்புத்தன்மை, செரிக்கும் திறன், தூக்கம் என பலவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் ஏற்படும்போது தூக்கம் வராமல் தவிப்பதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

மன அழுத்தம் ஏற்படும்போது உடலில் சுரக்கும் கார்டிசாலின் அளவைத் தெரிந்து கொள்ள ரத்தப் பரிசோதனை செய்யலாம். ஆனால் இதன் மூலம் துல்லியமாகக் கணக்கிட முடியாது. கார்டிசால் தொடர்ச்சியாகச் சுரக்கும் நிலையில் உடலின் திசுக்களில் அவை தங்கிவிடுகின்றன.

காதில் உருவாகிற குரும்பையின் அளவு கார்டிசால் சுரக்கும் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. அதிகமாகச் சுரந்தால் காதில் உள்ள குரும்பையின் அளவு அதிகரிக்கிறது என்பதைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள் "யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன்' -ஐச் சேர்ந்த ஆய்வாளர்கள். கார்டிசால் அளவைக் கண்டறியும் முறைகளில் இது மிகவும் சிறந்ததாக உள்ளது என்கிறார்கள்.

அடிக்கடி காதைக் குடைந்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT